அறிவியல் வேட்கை/                     சாந்தமூர்த்தி

சிறு வயதில் கிட்டத்தட்ட எல்லா பாடங்களையும் எனக்குப் பிடித்திருந்தது. அறிவியலில் இப்போதுள்ளது போல் லேப் வாசனையோ, செய்முறைக் கருவிகளோ அப்போதில்லை. வகுப்பில் மிக அரிதாகவே பரிசோதனைகள் நடக்கும். எனவே பள்ளிக்கு வெளியில் சில சிறு சோதனைகளை நான்  செய்து பார்த்தேன்.

கல்வியின் தொடக்க நிலையில் உள்ள என் பேத்திகள் இப்போது அறிகின்ற, செய்து களிக்கின்ற அறிவியல் சோதனைகளைப் பார்க்கையில் நான் செய்த சோதனைகள் சொல்லக்  கூச்சமேற்படுத்தும் சிறுபிள்ளைத் தனமாகவே இன்று தோன்றுகின்றன. தழல் எந்த அளவிலும் தழல்தான். வடிவில் சிறிதாகையில் தழல் வணங்கத் தக்கதாகவும் மாறுகிறது.

அன்றைய ஏழைக் குழந்தைகளுக்கு எதற்கும் எளிய பொருட்கள் போதும். கொஞ்சம் மணலை வைத்துக் கொண்டு பல விளையாட்டுகளை விளையாட முடிந்தது. இனி பயன்படாது என்ற நிலையில் கைவிடப் பட்ட சைக்கிள் டயர்,  துருவேறிய வீல் ரிம் போன்றவை முக்கியமான வாகனங்கள். அவை கிடைக்காவிட்டால் தென்னை மட்டையின் அடிப் பகுதி போதும். விளையாடத் தேவையான பொருட்களை நாங்களே தயாரித்துக் கொள்வோம். ஒரு இசைக் கருவி தயாரிக்க பூவரசம் இலை போதும் என்பதைப் போல. இன்று குழந்தை விளையாட பொருட்கள் வேண்டுமெனில் பன்னாட்டு நிறுவனத்தின் தயவு தேவை.

நான் கிடைத்த கண்ணாடி லென்ஸுகளைக் கொண்டு என்னென்னவோ செய்தேன். சூரியக் கதிர்களைக் குவித்து பஞ்சைப் பற்ற வைத்தேன். தேவையற்ற பெட்ரோமேக்ஸ் கண்ணாடிப் பட்டைகளையும் வளையல் துண்டுகளையும் பயன்படுத்தி கலைடாஸ்கோப் செய்தேன். ஊசித் துளைக் கேமரா, பெரிஸ்கோப் போன்றவற்றையும் செய்தேன். காந்தம் சிலவற்றுக்குக் கை கொடுத்தது. சுவரில் படம் காட்ட ஒரு ப்ரொஜெக்டர் உருவாக்கும் திட்டம் என்னிடம் இருந்தது. துண்டு ஃபிலிம்கள் கூட சேகரித்தேன். நடக்கவில்லை.

சுண்ணாம்புக் கரைசலில் சிசர் சிகரெட் பெட்டியில் உள்ள ஜிகினா தாளை முக்கி சிறு பாட்டிலுக்குள் அடைத்து மூடி வைத்தேன். ரப்பர் மூடி ‘’படார்” என்று வெடித்துப் பறந்தது. இந்த ஆற்றலைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நீராவியின் ஆற்றலைக் கண்டறிந்த ஜேம்ஸ் வாட் ரேஞ்சுக்கு கற்பனை செய்தேன். 

“கல்கண்டு” இதழில் தமிழ்வாணன் சொன்ன இயற்கை வைத்திய மருந்தை தயார் செய்தேன். குப்பைமேனி, நாயுருவி  இலைகளை எதனுடனோ சேர்த்து அரைத்து, உருண்டையாக்கி வெயிலில் உலர்த்தி நானே தின்று பரிசோதித்தேன். வாயெல்லாம் வெந்து போய் மூன்று நாட்கள் உணவை முழுங்க முடியாமல் சிரமப் பட்டேன். கொஞ்சம் திட்டுகளையும் வேறு விழுங்க வேண்டியிருந்தது. 

ஐயனார் குளத்துக்குச் செல்லும் வழியில் சாலையோரம் எருக்கஞ் செடிகள் மண்டியிருக்கும். அவற்றின் மொட்டுக்களை இரு விரல்களால் அழுத்தினால் ‘டப்’ என்ற ஒலி வரும். அதற்காகவே அழுத்திப் பார்ப்பேன். பல எருக்க இலைகள் முழு வடிவில் இருக்காது. அரிக்கப் பட்டு மூளியாகவே இருக்கும். ஏன் என்று கவனிக்கத் தொடங்கினேன்.

வண்ணத்துப் பூச்சியின் வளர்ச்சியில் முட்டை, லார்வா, பியூப்பா, வளர்ந்த பூச்சி என்று நான்கு பருவங்களைப் பற்றி படித்திருந்தேன். எருக்க இலையில் அழுக்கு வெள்ளை வண்ணத்தில் அப்பி இருந்தது வண்ணத்துப் பூச்சியின் முட்டைகளும், அரித்தவை லார்வாக்களும் என்றறிந்தேன். பின்னொரு நாள் இரு லார்வாக்களையும், அவை உண்பதற்கு கொஞ்சம்  எருக்க இலைகளையும் பறித்து வீட்டில் கொண்டு போய் வைத்தேன். அவ்வப்போது அவற்றைக் கவனித்து வந்தேன். 

குழந்தைகளைப் போலவே லார்வாக்களுக்கும் தின்று கொண்டிருப்பதே முழு நேர வேலை. தின்பதால் இலைகள் குறை பட்டுக் கொண்டே வந்தன. ஒரு நாள் பார்த்த போது லார்வாக்களைக் காணவில்லை. பதறிப் போய் அவற்றைத் தேடினேன். காணவில்லை. இலைகளின் பின்புறத்தில் பஞ்சு போல ஏதோ ஒட்டிக் கொண்டிருந்தன. ஓ! அவைதான் பியூப்பா. அடுத்த கட்டம். தினம் கவனித்தேன். மெல்ல கூட்டின் உள்ளே பூச்சி இருப்பது தெரிய வந்தது. பூச்சிகள் வளர்ந்து கொண்டே வந்தன. அடுத்து வண்ணத்துப் பூச்சிதான். வண்ணாத்திப் பூச்சி என்றும் சொல்வோம். எத்தனை வண்ணங்கள்! எவ்வளவு டிசைன்கள்! என்னுடையது எப்படி இருக்குமோ? 

ஒரு நாள் பார்த்தால் ஒரு கூடு உடைந்திருந்தது. ஆனால் பூச்சியைக் காணவில்லை. “பூச்சிக்கு ரெக்கை மொளைச்சுடுத்து. பறந்ந்ந்து பொய்டுத்து!” சிறிது வருத்தமாக இருந்தது. கொல்லைப் புறத்தில் ஏராளமான பலவண்ண வண்ணத்துப் பூச்சிகள் பல பறந்து திரிந்தன. அவற்றுள் ஏதோ ஒன்று என்னுடையது. இன்னொரு பியூப்பா இன்னும் இருந்தது. அதுவும் நன்றாக வளர்ந்த நிலையில் இருந்தது அது எந்த நிமிடம் பறந்து போகுமோ? எனக்கொரு யோசனை வந்தது.

சில்வாரில் பட்டன் பிய்ந்து போன இடத்தில் இணைப்பு வேலை செய்யும் ஊக்கை எடுத்து அதன் கூர் முனையால் மெதுவாக உள்ளிருக்கும் பூச்சி மீது பட்டுவிடாமல் கவனமாக கூட்டைக் குத்தினேன். கூடு உடைந்தது. பூச்சி வெளியே வந்தது. ஆனால் அது பறந்து போகவில்லை. மேஜை மேல் லேசான அசைவுகளுடன் சோம்பேறித் தனத்துடன் அமர்ந்து இருந்தது. இரவு நான் படுக்கப் போகும் வரை அது பறக்கவேயில்லை.

காலையில் எழுந்ததும் முகம் கழுவுவதையும் மறந்து முதல் வேலையாக பூச்சியை ஓடிப் போய்ப் பார்த்தேன். பூச்சி செத்துக் கிடந்தது. நான் தான் அதைக் கொன்று விட்டது போல் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பள்ளியில் பிரியத்துடன் பேசும் அறிவியல் ஆசிரியரிடம் சென்று சற்று கூச்சத்தோடு நடந்ததைச் சொன்னேன். 

கூட்டை விட்டு வெளியே வரும் பூச்சிக்கு சிறகுகளை விரித்து, இயக்கி பறப்பதற்கு சக்தி வேண்டும். பூச்சி தானே முயன்று முட்டையை உடைத்து வெளியேறுவதன் மூலம் அந்த சக்தியைப் பெறுகிறது. கூட்டை பிறர் உடைத்தால் அது இயற்கையின் இயல்பான இயக்கத்தில் குறுக்கிடுவது போல. பூச்சிக்கு செயல்பட போதுமான சக்தி கிடைக்காமல் போயிருக்கலாம் என்று அவர் விளக்கினார்.

கல்லூரியில் பின்னர் P.U.C. படிக்கும் போது விரிவுரையாளர்களின் புரியாமல் அச்சமூட்டும் ஆங்கிலமும், கடுகடுவென்ற சீரியஸ் முகங்களும், பிரியமற்ற கோபமும் என் அறிவியல் ஆர்வத்தைக் குறைத்தன. அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஒரு வகுப்புக்கு சுமார் நூறு மாணவர்கள். குழம்பிய, ஆர்வமற்ற, கயிறுகள் அவிழ்க்கப் பட்ட விடுதலை உணர்வுள்ள மனிதக் கும்பலை அன்பை விட அச்சத்தால் நிர்வகிப்பது எளிது என்று அவர்கள் அலுப்போடு நினைத்திருக்கலாம்.

அந்த மலராத வண்ணத்துப் பூச்சியை நான் இன்னும் மறக்கவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் நினைவுக்கு வரும். ஓஷோவின் புத்தகங்களில் ஒன்றின் தலைப்பு “புல் தானாகவே வளர்கிறது.” புல் முளைக்க விதை தெளிக்க வேண்டியதில்லை. உரம் போட, நீர் பாய்ச்ச, களையெடுக்கத் தேவையில்லை. தோட்டக்காரன் வேண்டியதில்லை. புல்லுக்கு எதற்கு வேலி? ஒரு புல் ஒரு வனத்தை உண்டாக்கி விடும். புல்லை விரல்களால் பிடித்து இழுத்து நீளமாக்க முடியாது.

முட்டையை வெளியிலிருந்து உடைத்தால் மரணம். உள்ளிருந்து உடைத்தால் ஜனனம். முட்டையை வெளியிலிருந்து உடைத்தால் உடனே கிடைப்பது ஆம்லெட். கொஞ்சம் பொறுமையோடு குஞ்சு உள்ளிருந்து உடைக்கும் வரையும், மேலும் சிறிது காலமும் காத்திருந்தால் சிக்கனே கிடைக்கும் என்ற  விளையாட்டுப் பேச்சும் வண்ணத்துப் பூச்சியை நினைவூட்டும்.

நான் செய்த அதே தவறைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். மகனோ, மகளோ பிள்ளைக்கு எல்லை மீறிய செல்லம் கொடுக்கும் பெற்றோர் வேறென்ன செய்கிறார்கள்? குழந்தைகளுக்கு எல்லா உதவிகளையும் தானே செய்து கொடுக்கத் துடிக்காத பெற்றோர் குறைவு. என் அப்பாவே அப்படித்தான். அது குழந்தை பெறும் சில பயிற்சிகளைத் தடுக்கும்.

ஆர்வத்தாலோ, அறியாமையாலோ, பதற்றத்தாலோ, பேராசையாலோ நாம் முட்டைகளையும், கூடுகளையும் உடைத்துக் கொண்டேயிருக்கிறோம். அவற்றின் விளைவுகளைப் பற்றிய அக்கறையின்றி.

@@@@@@