நட்சத்திரங்களை கொய்வது …/தங்கேஸ்

பூர்வீகத்தல் நீ 

ஒரு நட்சத்திரம்

நான் இமைப்பிலிகளில் 

நிலவை பட்டம் கட்டி 

ஆட்டுவிப்பவன்

இரவுப் புற்றை   கரையான்கள்

அரிக்கும் இருவிழிகளுக்குள்

குடியேறியிருக்கும் காலத்திற்கு

குருவிக்குஞ்சுகளைப் போல

விடிந்ததும் விடுதலை ஏதுமில்லை

முதிர்கன்னிகளாய் மூக்கவிழும்

இந்த முல்லை  தொகுதிகளுக்கு

சாப விமோசனம்  தரும்

 நட்ட  நடுநிசி ஈரக்காற்று

மனதுகள் கொண்ட மனதுகளிடம் 

உறங்கா வரம் வாங்கி போவதேன் புரியவில்லை?

 மாதொரு பாகன் தான் நானும்

நீ பஸ்மாசுரன்

மூன்று முறை  சுற்றி 

உன்  தலையை தொட்டு 

சாம்பலாகி விடு

சிறிது களைப்பாறினால்

 விடிந்ததும்

வேறு தலைகள் முளைத்துவிடும்

இல்லையென்றாலும்

தூக்கத்தை கொய்வது போலவே

ஒரு நட்சத்திரத்தை கொய்து  வந்து

உன் தலையிலிட்டு நிரப்பி விடுவேன்

பூர்வாங்கத்தில் நீயும் 

ஒரு நட்சத்திரம் தானே