
கேரம் போர்டில்
சிவப்பு காயினை
பாக்கெட்டுக்குள்
போட்டுவிட்டால்
ஃபாலோ யாரு
உங்கப்பனா வந்துபோடுவான்
என சீண்டுவாய்.
(போட்டானபின்
இப்பவே க்யூனை கவர் பண்ணிட்டியே என
சிரிப்பாய். )
கல்யாண ஜமா
சீட்டுக்கச்சேரியில்
நான் மேல்கையாய்
ரம்மிபோட்டால்
“சீக்கிரமே உனக்கு
ப்ரமோஷன் வரும்டா”
என்பாய் எல்லார்முன்பும்.
சமையல் செய்து கொள்வதைக்காட்டிலும்
அதற்கான ஏற்பாடுகளையும்
அதனை பரிமாறும் விதத்திலும்
உன் செய்நேர்த்தி அலாதியானது.
ஒவ்வொரு உறவினரையும்
நினைத்தநேரம் கிளம்பிப்போய்
பார்த்துவிட்டு வருவாய்.
அந்த ஊரிலிருந்து
எனக்காக நீ
அடைத்து எழுதிய தபால்கார்டுகள்
கணக்கிலடங்கா.
தலைவலி காய்ச்சலென
நீ படுத்திருந்து பார்த்ததில்லை.
கடைசி நாட்களில்
நான் உன் மலஜலம் துடைத்தபோது
ஒட்டியவயிற்றின் மேல்
கைகுவித்து வணங்கினாய்.
நாற்பத்திட்டு மணிநேர கெடுவிற்குள்
உறவும் நட்பும் வந்தாயிற்று.
மூக்கிலும் வாயிலும்
பிளாஸ்டிக்குழல் சொருகியிருக்க
பிராணக்காற்றும் உணவும்
அதன்மூலம்.
ஒருவர் ஒருவராக பார்த்துச்செல்ல
புலனொடுங்கியது போல நீ.
மெதுவாக கண்திறந்து
என்னைப்பார்த்தாய்
என்னால முடியலை
என்னை விட்டுரேன்
என்பதுபோல ஒரு பார்வை.
சட்டென விட்டு விடுதலைபோல
புறப்பட்டுப்போனாய்.
என்கிட்ட கத்துக்க என்னப்பா
இருக்கு.
ஒண்ணுமே இல்லை
என்பாய்.
உன்னிடமிருந்து அதைக்கூட
இன்னும் கற்றுக்கொள்ளவில்லை
நான்.
என் பிறவியே
நீ போட்ட உயிர்ப்பிச்சை.
மின்மயான மேடையில்
அழக்கூட திராணியற்று நான்.
உனைச்சுமந்த மூங்கில்துண்டுகள்
நகர நகர
சடுதியில் நொடியில்
தீயின் ஜ்வாலைகள்
வாரிக்கொண்டன உன்னை.
அருகிலிருந்த பெரியப்பா
“டே தம்பி! நெருப்புடா!”
எனப் பதறினார்.
“அப்பா! அப்பா! “
என அப்போதுதான்
கதறி உடைந்தேன் நான்.!

கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கவிதை
அருமை