அப்பா/செ.புனிதஜோதி

உன் ஞாபகக்கீற்றுகள்
நெஞ்சில் விழும்
நேரம்
என் விழிக்கிணறு
நிறைந்துவிடும்….

எத்தனை நாட்கள்
தூங்காமல் பணி
செய்யும் நிலவாய்
மாறியிருந்ததை…

அப்போது உணராதப் போதும்
தற்போது உணர்கின்றேன்
நான் அப்பா என்ற நிலையில்..

உன் இளமை விற்று
உன் ஆசை விற்று
உன் கனவை விற்று
எங்களை கரையேற்ற
உன் உடலை
உழைப்பு கரையான்க்கு
பகிர்ந்தாய்…

எத்தனைக்
கேள்விஅம்புகள்
உன்னை துளைத்தாலும்
அத்தனைக்கும் சமாளித்து எங்களை சாமர்த்தியமாய் மாற்ற முன்நின்றாய்….

உடல்நோவு என்றாலும்
உழைக்காமல்
இருந்ததில்லை..

கனநேரம் கூட
ஓய்வெடுக்காமல்
கனந்தோறும்
எங்களை உயர்த்தவே
உன் சிந்தனைச் சிறகை செலவழித்தாய்..

அப்போதெல்லாம்
சிடுமூஞ்சி அப்பா
கோபக்கார அப்பா
என்மேலே அன்பில்லாத அப்பா ….

இப்படி
ஆயிரம் குற்றப்பத்திரிகை
வாசித்தேன்

ஆனால் இன்று
என்பிள்ளை
வாசிக்கும்போதே
அப்பாவின் ஊமை
நெஞ்சில் ஓராயிரம்
கண்கள் அழுவதை
அறிகின்றேன்

2 Comments on “அப்பா/செ.புனிதஜோதி”

  1. “அப்போதெல்லாம்
    சிடுமூஞ்சி அப்பா
    கோபக்கார அப்பா
    என்மேலே அன்பில்லாத அப்பா ….”
    அருமை

Comments are closed.