
இரா முருகன் அவர்களின் “மிளகு” நாவல் கருத்தரங்கு. 1189 பக்கங்கள் கொண்ட ‘பாலிமார்ஃபிக் ஹிஸ்டாரிக் ஃபேன்டசி’ (இல்லை. இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யப் போவதில்லை) என்ற ழான்ர வில் ஒரு புதினம்.
எழுத்தாளரை புரவி இதழுக்காக நேர்காணல் செய்த திரு காளிப்ரசாத் நூலை அறிமுகம் செய்தார். புத்தகம் பற்றி
முதலில் திரு வவேசு – மிளகு சிறிதானாலும் நாவல் பெரிது என துவங்கி அழகான வர்ணனைகள், பழந்தமிழ் சொற்களை ஆசிரியர் பயன்படுத்தும் விதம், நடை என நூலின் சிறப்புகளை அங்கங்கே வாசிப்புடன் அழகாக வைத்தார்.
மந்திரமூர்த்தி அழகு அதன் சிருங்கார ரசம் பற்றி எடுத்துக் காட்டியும், சற்றே வெட்கத்துடனும் பேசினார். காண்டஹர் ஹைஜாக் வர்ணனை தன்னை எப்படி பாதித்தது என்று கூறினார்.
உமா ஶ்ரீதரன் நாவலை வியந்து எழுதியவர் தன் பார்வையில் மிளகு எப்படி இருந்தது என்று பகிர்ந்து கொண்டார். விவரமாக குறிப்புகளுடன் பேசினார்.
ஶ்ரீநிவாச ராகவன் இந்த ழான்ர பற்றிய புதுமையையும், கையாண்டிருக்கும் ஃப்ராக்மென்டட் நெரேடிவ் உத்தியையும், நாவலின் சிறப்பு அம்சங்களையும் வியந்து பாராட்டினார்.
மிளகு உணவுக்கு காரச் சுவை கூட்டுவதாகவும், தன் வித்தியாசமான மணத்தால் உணவின் வாசனையை மேம்படுத்துவதாகவும், மருத்துவ குணத்துடன் மருந்தாகவும் இருப்பது போல ‘மிளகு’ நாவலும் பலவிதமாக சிறந்து இருப்பதை உணர முடிந்தது. நான் இன்னும் முழுவதும் படிக்கவில்லை.
அதன் அளவைப் பார்த்ததும் படிக்க முடியுமா என்று ஒரு அச்சம் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் பக்கங்களைப் பிரித்து படிக்கத் துவங்கினால் அந்த அத்தியாயம் முடியும் வரை நிமிர மாட்டோம். முடிந்ததும் அதை அசை போட வேண்டி இருக்கும். துண்டு துண்டாக எழுதப் பட்டது என்பதால் எங்கு வேண்டுமானாலும் ஆரம்பித்து படிக்க முடியும். ஒரு முழுமை கிடைக்கும். அதே போல வேறு அத்தியாயம் படிக்கும் போது இதனுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மாதிரியான பாலிமார்ஃபிக் கதைகள் உலக மொழிகளில் வந்திருக்கின்றன. பாலிமார்ஃபிக், அதாவது ஒரே கதாபாத்திரம் பல வயதில், பல கால கட்டங்களில், பல இடங்களில், பல உருவங்களில் வந்து போவது. தமிழுக்கு இரா முருகன் கொண்டு வந்திருக்கிறார். மாய யதார்த்தம் போல தமிழுக்குப் புதுமை சேர்க்கும் ஒரு படைப்பு.
இதைச் சொல்லும் போதே குறைத்துச் சொல்கிறோமே என்ற ஒரு உணர்வு மேலோங்குகிறது. ஏனென்றால் இதன் சிறப்பு அதன் நடையில், கையாண்ட விதத்தில் மட்டுமே அடங்குவது அல்ல. மறக்கப்பட்ட ஒரு ராணியின் வரலாற்றை, மிளகு வர்த்தகத்தை, அதன் அரசியல் பொருளாதார தாக்கங்களை, நாட்டின் மீது அதன் பாதிப்பை என்று பல்வேறு கோணங்களில் ‘மிளகு’ என்ற ஒரு பொருளைச் (ஸ்பைஸ்) சுற்றி பின்னப் பட்ட தகவல் களஞ்சியம்.
பல்வேறு கால கட்டங்களில் பயணித்து அதன் தாக்கத்தை புரிய வைக்கிறதோ? அடேயப்பா. இதைப் படித்து முழுதும் உள்வாங்க நாம்தான் நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சி செய்பவருக்கு மிளகு ஒரு புது உலகத்தை, புரிதலை ஏற்படுத்தும் என்று புரிகிறது.

