
ஒவ்வொருமுறையும் பத்தில் துவங்கி
இருபது நிமிடங்கள் தாமதாமாக ஒடும்
பழைய சீக்கோ அலாரம் கடிகாரத்தை
சலீம் பாயிடம் எடுத்துச் செல்லும் போதெல்லாம்
இப்போது விரும்பினாலும் கிடைக்காது என்கிறார்
அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்
அடுத்த நாள் காலையில் இருபது நிமிடங்கள் தொலைந்துவிட்டிருந்தன
காதருகில் வைத்து கேட்கும்போது
கடிகாரத்தின் ஓட்டலயம் தப்பவில்லை
மீண்டும் எடுத்துச் சென்றேன்
கடிகாரத்தை திறந்து ஒருகண்ணில்
சின்ன பூதக்கண்ணாடியைப் பொருத்திக் கொண்டு
கூர்ந்து பார்த்துவிட்டு
ஒன்றுமில்லை சார்
சின்னதாக சரிபார்த்தால் போதும்
மாலை வாருங்கள் என்ற சலீம்பாயிடம்
இதற்கு செலவிடுவது பிரயோஜனமாக இருக்குமா என்றேன்
சாவிசரியா கொடுத்திருக்க மாட்டீர்கள் என்றார்
தங்கமுலாம் லேசாக மங்கி
சிறுசதுர தோல்பெட்டிக்குள்
கையடக்கமாக இருக்கும் சீக்கோவைத்
திறந்து பார்த்துவிட்டேன் நன்றாகத்தான் உள்ளது
காலைமுதல் இங்கு நேரம் மாறவில்லை
இந்தாருங்கள் என்றார்
அவருக்கான பழுதுநீக்கும் கட்டணத்தைத் தந்துவிட்டு
இல்லம் திரும்பியதும்
துணைவி புதுவிதமாக சிரித்தபடியே
கடிகாரத்தைத் தவிர்த்துவிட்டு என்னைப் பார்கிறார்
நேற்று சாவிகொடுத்த அதே நேரம் தவறாது முழுசாவியும் கொடுத்தாயிற்று
இரண்டு நாட்கள் பெட்டிக்குள் மூடிவைத்துவிட
எண்ணினேன்
இப்போது பத்துநிமிடம் தாமதமாகிவிட்டிருந்தது
சலீம்பாய் ஒன்பதரை மணிக்குதான் கடைதிறப்பார்
அதுவரை மூடிவைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை
எனக்கு நேரத்தைவிட
சீகோ கடிகாரம் முக்கியம்
சலீம்பாயிடம் பத்து நிமிடம் தாமதமாக
நேரத்தை காண்பிக்கிறதே என்றதும்
இங்கு நன்றாகத்தான் ஒடியது
சின்னதாக சரிபார்த்தால் சரியாகிவிடும்
இரண்டு நாட்கள் இருக்கட்டும்
இந்த மாடல் சீக்கோ மூர்மார்க்கட்டில்கூட
கிடைக்காது
கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான்
இருக்கும் சார்
இன்ஷா அல்லாஹ் இனி சரியா ஓடும்
வாங்க என்றார்.
