கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் புத்தகங்கள் இல்லாத உலகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. வாசிப்பும், எழுத்தும் இல்லாத இருப்பில் ஒருபோதுமே என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று நான் எழுதுகின்றேன். வாசிக்கின்றேன்.

என் பதின்ம வயதின் இறுதிப்படியில் அவர் மறைந்து விட்டார். 77 ஆணிக் கலவரச்சூழலில் நானும் , இளைய தங்கையொருவரும் யாழ்ப்பாணத்தில் ஆச்சி வீட்டில் தங்கி நிற்கும் சூழலில், போக்குவரத்து நிலைகுலைந்திருந்த அச்சூழலில், அராலியிலிருந்து சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து எங்களிருவரையும் பார்த்துவிட்டுச் சென்றார். படையினரின் அச்சுறுத்தல் மிகுந்திருந்த அச்சமயத்தில் கடற்கரை வெளியினூடு தனியாகச் சுமார் எட்டு மைல்கள் நடந்து வந்து சென்றிருக்கின்றார். அந்த அன்பை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு இழகும். அதன் பின் இரு மாதங்களில் அவர் எம்மை விட்டுச் சென்று விட்டார்.

அவரை நான் இழந்துவிட்டதாகவே கருதுவதில்லை. காரணம் எப்பொழுதும் என் வாசிப்பில், எழுத்தில் அவர் இருக்கிறார். என் ஆரம்ப எழுத்துகளை ஊக்குவித்தார். விமர்சித்தார். தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர். அதனால் சுதந்திரன் எப்பொழுதும் வீட்டிலிருக்கும். கூடவே அந்தனிசிலின் ‘தீப்பொறி’யும் வெளியானபோது வாங்கினார். பின்னர் பதின்ம வயதுகளில் தமிழக அரசியலில் நாங்கள் எதிரும் புதிருமானோம். அவர் கலைஞரின் பக்கம். நான் வாத்தியார் பக்கம். 77 தேர்தலின்போது தமிழக முதல்வருக்கான வேட்பாளர்களான கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் வானொலியில் பேசச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்பொழுது தன்னைக்கூத்தாடி என்று எள்ளி நகையாடிய எதிர்கட்சியினருக்கு ‘ஆம் நான் கூத்தாடிதான்’ என்று குறிப்பிட்டு எம்ஜிஆர் ஆற்றிய உரையினை அவர் கலைஞர் பக்கமாக இருந்தபோதும் பாராட்டினார். நெஞ்சினைத்தொட்டதாகக் கூறினார்.

அவருக்குக் கிரிக்கட் நேர்முக வர்ணனையைக் கேட்பது மிகவும் பிடிக்கும், ட்ரான்சிஸ்டர் ரேடியோயில் இந்திய அணிக்கும் , ஆஸ்திரேலிய அணிக்குமிடையில் நடைபெற்ற நேர்முக வர்ணனையை அவருடன் நானும் கேட்டேன். சென்னை சேப்பாக்க மைதானமாகவிருக்க வேண்டும்.

இரவுகளில் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கிப் படுத்திருந்து விண் சுடர்களை, விரையும் செயற்கைக்கோள்களைப் பார்த்துக் களித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவுள்ளன. ஒரு சமயம் அதிகாலைகளில் அப்போது வானில் காட்சி தந்த வால்வெள்ளியைப் பார்ப்பதற்காக எம்மையெழுப்பிக் காட்டுவார். அவையெல்லாம் பால்யபருவத்து அழியாத கோலங்கள்.

என் இருப்பிருக்கும் வரையில் உன் நினைவு இருந்துகொண்டேயிருக்கும் தந்தையே!