இலக்கிய இன்பம் 49/கோவை எழிலன்

காமர் மந்தி

தலைவன் தலைவியைக் காண இரவில் மலைப் பாதையில் வருகிறான். அவனிடம் மலைப்பாதை நள்ளிரவில் வர ஆபத்தானது என்றும் அவ்வாறு வருவதைத் தவிர்த்து தன்னை மணம் கொண்டு அழைத்துச் செல்லல் நன்று என்றும் அவனது நாட்டை வருணிக்கும் விதமாக தலைவி கூறுகிறாள்.

அவன் நாட்டை தலைவி “ஆண் குரங்கு(கடுவன்) இறந்து விட்டால் தன் குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டு பெண்குரங்கு(மந்தி) மலையின் பள்ளத்தாக்கில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டைச் சேர்ந்தவனே, நீ இரவில் வந்தால் நான் வருந்துவேன்” என்கிறாள்.

இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.

கடுந்தோட் கரவீரனாரின் குறுந்தொகைப் பாடல் இது

“கருங்கண் தாக்கலை
பெரும் பிறிது உற்றனக்
கைம்மை உய்யாக்
காமர் மந்தி
கல்லா வன்பறழ்
கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்துப்
பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட
நடு நாள்
வாரல் வாழியோ
வருந்துதும் யாமே”