இதை முன்பே எழுதி விட்டேனா/சுரேஷ் கண்ணன்

இதை முன்பே எழுதி விட்டேனா என்று தெரியவில்லை. என்றாலும் மறுபடியும்.

ஒருமுறை உபோ் ஆப்பில் பைக் புக் செய்து காத்திருந்தேன். ஓட்டுநர் நெருங்கி வருவது வரைபடத்தில் தெரிந்தது. நான் போன் செய்து “சங்கீதா ஹோட்டல் வாசல்ல நிக்கறேன்” என்று தெரிவித்த போது அங்கிருந்த வந்த பதில் சற்று விநோதமாக என்னை உணர வைத்தது.

“ஐயா.. நானும் அந்த உணவகத்தின் எதிரேதான் நிற்கிறேன். நீங்கள் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வர முடியுமா?” என்று உரைநடைத் தமிழில் பதில் வந்த போது ‘இந்தாள் என்னைக் கலாய்க்கறாரோ?” என்று முதலில் தோன்றி விட்டது.

வாகனத்தை நெருங்கிச் சென்றவுடன் “ஏறுங்கள் ஐயா. போகலாம்” என்றார். அவரிடம் சற்று பேச்சுக் கொடுத்தவுடன்தான், அவர் அயல்மொழி கலக்காத நல்ல தமிழில் பேசுவதை ஒரு நடைமுறைப் பழக்கமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

“இப்படி பேசறதுக்காக யாராவது உங்களை கேலி செஞ்சிருக்கீங்களா.. இல்லை. பாராட்டியிருக்கீங்களா?” என்று கேட்டேன். “ஆம். ஐயா.. சிலர் கிண்டல் செய்திருக்கிறார்கள்தான். ஆனால் என் மொழிப்பற்றை பாராட்டியவர்கள்தான் அதிகம்” என்று அவரிடம் பதில் வந்த போது சந்தோஷமாக.. சட்.. மகிழ்ச்சியாக இருந்தது. “ஒண்ணு. ரெண்டு போ் கிண்டல் பண்ணா கூட இதை நீங்க விட்டுடாதீங்க நண்பரே.. உங்களை மாதிரி ஆட்களால்தான் தமிழ் இன்னமும் உயிரோடு இருக்கிறது” என்பதை ஆத்மார்த்தமாகவே சொன்னேன்.

அவருக்குச் சமமாக நானும் நல்ல தமிழிலேயே பேசலாம் என்று அந்தச் சமயத்தில் முயன்றாலும் என்னால் இயலவில்லை. நிறைய தடுமாற வேண்டியிருந்தது. இந்த லட்சணத்தில் நாம் கமல் போன்று நல்ல தமிழில் பேச மற்றும் எழுத முயல்பவர்களை கூச்சமேயின்றி கிண்டலடிக்கிறோம்.

oOo

ஓகே.. இந்த வியாக்கியானம் இப்போது எதற்காக என்றால் நண்பர் மகுடேசுவரன் அவர்கள் தமிழ் இலக்கணப் பயிற்சி தொடர்பாக பல நூல்களை எழுதியவர். தூய தமிழ்ச் சொற்களை பிடிவாதமாக உருவாக்குவதை தொடர்ந்து செய்பவர். அவரின் இந்த முயற்சிகளில் சில சமயங்களில் மிகையாகச் சென்று விடுகின்றனவோ என்று எனக்குள்ளும் தோன்றியதுண்டு. சமூகவலைத்தளத்தில் இதர சிலர் உணர்வதைப் போலவே எனக்குள்ளும் மெல்லிய கேலியும் கிண்டலும் தோன்றியதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை எந்நாளும் அது மரியாதைக் குறைவினால் அல்ல. அந்த நேரத்தின் மனநிலை மட்டுமே.

ஆனால் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் என்னுடைய சொற்பமான மொழியறிவின் எல்லைக்குள் வைத்து யோசிப்பதால் வரும் வினை என்பது புரிகிறது. இன்று நமக்குப் பழகி விட்ட பல தமிழ்ச் சொற்கள் ஆரம்பத்தில் விநோதமாகவும் கிண்டலாகவும் அணுகப்பட்டவைதான் என்பது வரலாறு. ஆனால் நாளாவட்டத்தில் அவை நடைமுறை வாழ்க்கையோடு இணக்கமாகி விட்டன. இம்மாதிரியான புதிய உருவாக்கங்களில் சில அதீதமாகவோ பொருந்தாதாகவோ இருந்தால் காலம் அவற்றைக் களைந்து விடும்.

நண்பர் மகுடேசுவரன் போன்ற மொழிப்பற்றாளர்களும், விடாமல் தமிழில் பேசும் அந்த வாகனயோட்டி போன்றவர்களும் நமக்கு அவசியம் தேவை. மொழியை வைத்து அரசியல் சர்க்கஸ் செய்து ஆதாயம் தேடுபவர்களுக்கு இடையில் உண்மையாகவே மொழிப்பற்றுடன் செயல்படும் இம்மாதிரியான அறிஞர்களின் சேவை பாராட்டத்தக்கது. நட்பு அல்லது அந்த நேரத்து மனநிலையில் இவர்களை யாராவது கிண்டல் செய்து விடலாம். இவர்களும் அவற்றை பெருந்தன்மையுடன் கடந்து விடலாம். ஆனால் உண்மையாகவே இவர்களை எவரேனும் மலினமாக எண்ணுவார்கள் / எதிர்ப்பார்கள் எனில் அவர்கள்தான் உண்மையில் மொழித் துரோகிகள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதாவது ஐயமில்லை.

இந்தப் பதிவின் சுருக்கமாக நான் சொல்ல விழைவது. மொழிக்காக உண்மையாகவே செயலாற்றுபவர்களை நான் வணங்குகிறேன்; போற்றி மகிழ்கிறேன் என்பதே. பல நண்பர்களின் மனவோட்டங்களும் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.

Magudeswaran Govindarajan <3 (Y)

One Comment on “இதை முன்பே எழுதி விட்டேனா/சுரேஷ் கண்ணன்”

Comments are closed.