
1
தள்ளாடி ஆட்டோவில்
வந்திறங்கும் தந்தையின் கையில்
பால் பாக்கட்
கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல
செல்கிறான்
தள்ளாடுகிறது குழந்தை
அத்தனைத் தள்ளாட்டத்திலும்
அவன் கை
குழந்தையை
கைவிடவில்லை
பால்பாக்கட் முனையை
சுருட்டிப் பிடித்திருக்கிறான்
பால்பாக்கட்டை எடுத்து
கொண்டு தருகிறேன்
என்று சொன்னவனை சீறி கொண்டே
உள்ளே
நுழைகிறது
பால் பாக்கட்
அனாதையில்லை செல்லமே நீ
குழந்தை ஏசு
2
“எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும்
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்
டியூப் லைட் முதுகில் கட்டி
தலைகீழாகவும்
சைக்கிள் ஓட்டுவேன்
விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில்
இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு
சைக்கிள் ஓட்டுவது எனக்கு
தண்ணீரில் நீந்துவது போல
முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை
மேலுயர்த்தும் போது
மேளதாளங்கள்
முழங்கட்டும்
ஆனால் நீங்கள் வேறென்னவோ
கேட்கிறீர்கள்
கரகரக்கும் குரலில்
தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு
பதிலாக
அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான்
வைத்திருக்கிறேன்
