
தபால்காரர்
வருவதாயில்லை.
புங்கமர நிழல்கூட
வெறுமையாய்
சோகமாய்.
ஆப்பக்கிழவிக்கு
தவறாது வரும்
அஞ்சலட்டை
இன்று காணவில்லை.
பேரன் மிலிட்டரியில்
இருக்கிறானோ
இல்லையோ?
தகவலில்லை.
காதலர்களுக்குத்தான்
தபால்காரர்கள் வரம்.
தாபச்சுவையறிந்து
இரகசியமாய்க்
கொடுத்துச் செல்வார்.
ஆறுமணியிலிருந்தே
கால்கடுக்க
வாசலில் நின்று
திரும்பும் அம்மணி
காத்திருப்பதில்லை.
இப்போது.
ஏழு வருஷமாச்சு
ஓடிப்போன கணவன்
இனிவரமாட்டான்
எனப் புரிந்தது.
பிள்ளையார் கோயிலில்
கிடக்கும் குத்துக்கல்லில்
குந்தி ஓய்வெடுத்துக்
கிளம்பும் தபால்காரர்.
குத்துக் கல்லையும்
யாரோ களவாடி
விட்டனர்.
இண்டர்வ்யூ
தபாலை வழங்கும்
பரபரப்புப் போதில்
பசங்கள் முகத்துக்
குதூகலம் இவர்
முகத்திலும்
பிரதிபலிக்கும்.
துக்கச் செய்தி
தாங்கி வரும்
தபாலை வழங்குவது
தனிக்கலை.
லேசான தூறலில்
ஐம்பதாண்டு
காலடித்தடங்கள்
சுவடற்றுப் போயின.
என்றாலும்
கடைசியாக வந்த
தபால்காரர்
முத்தையாவின்
குரல் அழுத்தமாகவே
கேட்கிறது
‘சார் தபால்’

