திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்

இலக்கிய வீதியும்

நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் சஃபையர் தியேட்டரும் இல்லை.

புகுமுக வகுப்பில் சேருவதற்காக, சென்னை மாநகரத்தில் 1975 கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்து, மேற்கு மாம்பலம் அனுமார் கோயில் தெருவில் தாய்மாமன் குடியிருந்த போர்ஷனில் (அப்போது தான் 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டிருந்தது, மாத வாடகை!) குடியேறிய போது, 250 மீட்டர் தொலைவில் இருந்தது நேஷனல்.

ஆட்டுக்கார அலமேலு மூன்று வாரங்களுக்கு மேல் ஓடியது முக்கிய வரலாறு. பழைய படங்களே திரையிடப்படும் கொட்டகையில் அவ்வப்பொழுது ஏதேனும் ஒரு படம் ரசிகர்களது பேராதரவுக்கு இணங்க வெற்றிகரமான இரண்டாவது வாரம் என்று போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த காலமது (விநியோகஸ்தன் இனி யோகஸ்தனே என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட காலம்).

அந்த தியேட்டரில் இரண்டு முக்கிய படங்கள் பார்க்கப் போனது மட்டுமே இங்கே பார்க்க இருக்கிறோம். அதிலும் அந்த இரண்டாவது படம் பார்க்கவே இல்லை, அது ஏன் என்பதையும் !
நேஷனல் தியேட்டருக்கு நேர் எதிரேதான் ஸ்மித் என்கிற ஆங்கிலோ இந்திய மகப்பேறு மருத்துவரது எளிய குறு மருத்துவமனையும் இருந்தது. அந்த மருத்துவமனையும் இப்போது அங்கே இல்லை. அதன் தல விசேஷம், எங்கள் மாமிக்குத் தலைச்சன் குழந்தை பிறந்தது அங்கே. பின்னர், எங்கள் அத்தையின் இரண்டு மகள்களுக்கு ஏக காலத்தில் (முதலாமவளுக்கு இரண்டாம் பிரசவம், இரண்டாமவளுக்கு முதல் பிரசவம்) மகப்பேறு வாய்த்ததும் அப்படியான காலத்தில் கூடமாட ஓடியாடி ‘ஒத்தாசையாக’ இருக்க வாய்த்ததுமான காலம் இளவயதின் பொற்காலம்.

பத்தாணி பாட்டி, ஸ்மித் என்று உச்சரிக்க மாட்டாள், மிட்டு ஆஸ்பத்திரி என்று தான் சொல்வாள். (அப்ரென்டீஸ் என்பது அப்பரசண்டி என்று வடிவேலுவிடம் மரூஉ ஆனது மாதிரி). அது எங்கே இருக்கிறது என்றால், இலக்கிய ரோடு என்பாள், ஏரிக்கரை சாலை எனும் லேக் வியூ சாலையின் மரூஉ தான் இலக்கிய சாலை.

நேஷனல் தியேட்டரில் இரவுக் காட்சி போவது என்று என் அண்ணன் ரவி எனும் ரங்கராஜன் செட் சேர்க்க ஆரம்பித்தார். பொதுவாக, அந்நாட்களில் எங்கள் வீதிகளில் திருட்டு பயம் இருந்த காலம். நாங்கள் குடியிருந்தது கீழே ஐந்தும், மேலே ஐந்துமாக பத்து போர்ஷன் குடித்தன வீடு (அப்பார்ட்மெண்ட் என்று அழைக்க முடியாது, அது வேறு ரகம்). மன்னிக்கவும், உங்களை அழைத்துக் கொண்டு காட்ட முடியாது, அந்த வீடும் இப்போது அங்கே இல்லை!

அந்த ஆறாம் நம்பர் இல்லத்தின் முதல் தளத்தின் ஐந்து குடியிருப்புகளில் கடைசி போர்ஷனில் எங்கள் மாமா குடியிருந்தார். ஐந்து வீட்டாருக்குமான கழிப்பறைகள் எங்கள் பகுதியைக் கடந்து பின் பக்கக் கதவுகளைத் திறந்து கொண்டு போய்ப் பயன்படுத்த வேண்டும். பித்தளைக் குழாய்கள் பொருத்தப்பட்ட பைப் வழி தண்ணீர் போக்குவரத்து. மொட்டை மாடியில் பெரிய நீர்த் தொட்டி. கீழே பெரிய கிணறு இருந்தது. விளையாட ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் பாதியளவு இடமுண்டு. முதல் தளத்திற்கான மாடிப்படிகள் முன் கட்டிலும், அங்கே வசிப்பவர்கள் தோட்டப்பகுதிக்கு இறங்கிப்போகப் படிக்கட்டுகள் பின் கட்டிலும் உண்டு.

எந்த வழி வந்தான் என்று தெரியாது திருடன், ஓர் இரவில் சொரேலென்று தண்ணீர் பொங்கிப் போகின்ற சத்தம் கேட்காமல் உறங்கி இருக்கிறோம் கடைசி போர்ஷன் அப்பாவிகள், காலையில் போய்ப் பார்த்தால் அத்தனை கழிப்பறையிலும் தலை வெட்டப்பட்டு, பித்தளைக் குழாய்கள் காணாமல் போயிருந்தன, செய்கூலிக்கு அந்தத் திருடனுக்கு என்ன காசு தேறி இருக்குமோ தெரியாது, அன்றைக்கு அரை நாள் காத்திருந்தோம் பிளம்பர் வந்து வேலையை முடிக்க!

இரவு நேரங்களில் தெருக்களில் பாரா போட்டு நடப்பது என்கிற முடிவை அந்தக் குறுந்தெருவின் பெருந்தலைகள் சிலர் எடுத்தனர். நாங்களும் அதில் இணைந்து நடைபோட்டோம், ஓர் இரவு நேரத்தில் வீட்டோரத்தில் (எதற்கோ) கழற்றி வைத்த செருப்புகளைக் காணோம் என்றார் தெருக்காரர் ஒருவர், மற்ற எல்லோரது கால்களையும் உற்றுப் பார்க்கவும் செய்தார், நல்ல வேளை அதே மாதிரி ஜோடிகள் வேறு யார் காலிலும் இல்லாமல் போகவே தப்பித்தோம், ஆனால் களவாடியது யார்… ‘இத்தனை பேர் உலாத்தும் நேரத்திலேயே ஒருவன் செருப்புகளைத் திருடிச் செல்ல முடியும் எனில், என்ன கழுதைக்கு நாம் பாரா போட்டு நிற்கவேண்டும்?’ என்று கேட்டார் மற்றொருவர், அன்றோடு அந்தத் திருப்பணி நிறைவு பெற்றது.

இதற்கிடையே தான் சினிமா பார்க்கும் ஆசை வந்தது. வீட்டுக்கு மிக அருகே தியேட்டர், விடுவோமா? தவிரவும், பழைய படங்கள், குறைந்த கட்டணத்தில் டிக்கெட். இரத்தத் திலகம் என்று போஸ்டர் பார்த்ததும், அண்ணன் தம்பிகள் சிவாஜி பித்தர்கள் எல்லாமாக இரவு ஒன்பது மணி போல டிக்கெட் கொடுக்குமிடத்தில் போய் நின்றோம், கவுண்டரில் இருந்தவர் எரிச்சலோடு ஒன்று சொன்னார். உடனே சோகமாக வெளியேறினோம்.

நாங்கள் திரும்புவதைப் பார்த்து, பின்னால் வந்த யாரோ மூன்று நான்கு பேர், “டேய் டிக்கெட் எல்லாம் தீர்ந்துருச்சு போல…நாளைக்கு வரலாம்” என்று அப்படியே யு டர்ன் போட்டு நடக்கலாயினர். உடனே நாங்கள் அவர்களை நோக்கி உரத்த குரலில், “ஹலோ…நில்லுங்க….” என்று கத்திக்கொண்டே விரைந்து போனோம்.

ஏனென்றால், தியேட்டர் ஆள் எங்களிடம் சொன்னது, ‘ரெண்டு மூணு பேருக்கெல்லாம் படத்தை ஓட்ட முடியாது, இன்னும் ஆளுங்க வந்தால் தான்’ ! திரும்ப நினைத்த ரசிகர்களையும் ஓடிப்போய்த் தடுத்தாட் கொண்டு, மேலும் ஏழெட்டு பேர் சேர்ந்தவுடன் கவுண்டரில் துணிந்து பேசி டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

எங்கள் பின்னால் வந்த ஒரு பெரியவர், எங்களுக்குப் பின் வரிசையில் ஒரு மஞ்சள் பையை வைத்துவிட்டு, என்னிடம், “தம்பி இந்த சீட்ல யாரும் உக்காராம பாத்துக்க….தோ வந்துர்றேன்” என்றாரே பார்க்கணும். அத்தனை கோபம் வந்துவிட்டது, எங்களுக்கு – தியேட்டரில் டிக்கெட் வாங்க ஆளைக் காணோமாம். இவருக்கு இங்கே சீட் பிடித்து வைக்கணுமாம்…’பெரியவரே ஏதாவது சொல்லிடப் போறேன்’ என்றார் ஓர் ஆள்.
அந்தப் படம் பார்த்து வந்தாயிற்று. ஆனால், இன்னொரு படத்திற்குப் போய் கியூவில் நின்றோம், அநேகமாக, தில்லானா மோகனாம்பாள் ஆக இருக்க வேண்டும், அது தான் அப்போது வெற்றிகரமான மூன்றாவது வாரம் ஓடிக்கொண்டிருந்த நினைவு.

மாலையில் குடியிருப்பில் பேசினோம், யார் யார் வருகிறீர்கள் என்று. ரமேஷ் என்கிற எதிராஜன், சிவாஜி மீது வெறின்னா வெறி அப்படியான வெறி கொண்டிருந்தவன், காலேஜ் சீனியர். ஆனால், ரமேஷுக்கு அப்போது சின்னதாக ஓர் அறுவை சிகிச்சை நடந்திருந்தது, பார்த்து அழைத்துக் கொண்டு போகிறோம் என்று அவன் அம்மாவிடம் சத்தியம் செய்து கூப்பிட்டுக் கொண்டு வந்தோம், அதனால் அண்ணன் வேட்டியில் இருந்தார், நான் என்ன கொள்ளைக் காலமோ, லுங்கியில் சென்றிருந்தேன், இரண்டாவது ஆட்டம் தானே என்ற நினைப்பாக இருந்திருக்கலாம். சிறிய கூட்டம் நேஷனல் வாசலில். நாங்கள் கூட நினைத்தோம், சினிமாவுக்கு வந்தவர்கள் என்று…

கியூவில் போய் நின்றாயிற்று. இன்னும் கவுண்டர் திறக்கவில்லை. கூட்டம் இருக்கவே பயமில்லை, படத்தைப் போடுவான்கள் என்றார் கொஞ்சம் நடுத்தர வயதுக்காரர் ஒருவர்.

அப்போதுதான் அது நடந்தது. நடந்து முடிந்து விட்டது. எங்களுக்கு மிக அருகே, நேஷனல் தியேட்டர் முன்பாக, ஏரிக்கரை சாலையில், யாரோ யாரையோ ஓங்கி வெட்டித் தள்ளினார்கள். மேலும் சரமாரி வெட்டும் குத்தும், கத்தலும் கூச்சலும்! வீலென்று பெண்கள் சிலர் அலறிய சத்தம் கேட்டது. எல்லோரும் தபதப என்று தியேட்டரை நோக்கி ஓடிவந்தனர். அதற்குள் தியேட்டர் ஆசாமி முன் உணர்வோடு வேகமாக வாசலில் இரு பக்கத்திலும் பெரிய இரும்புக் கதவுகளை சார்த்தி இழுத்துப் பூட்டு போட்டுவிட்டுப் போய்விட்டார்.

எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்று இங்கே எழுத முடியாது, ஓடாமல் இருந்தால் அடியும் உதையும் நிச்சயம் என்ற நிலைமை தியேட்டர் வாசலில். ஒரே கவலை, ரமேஷின் பாதுகாப்பு, ரமேஷால் ஓடவும் முடியாது. டிக்கெட் கவுண்டர் என்பது அந்நாட்களில் கியூ வரிசையில் நிற்க இரட்டை வளைவு வெளிப்புறச் சுவரோடு பாதுகாப்பாகக் கட்டப்பட்டிருக்கும், ‘இந்த இடத்துலயே பத்திரமாக இரு, எங்கும் போய்விடாதே, எல்லாம் தணிந்தபின் நாங்கள் வரும்வரை இங்கேயே இரு’ என்று ரமேஷை அங்கே உள்ளே டிக்கெட் கொடுக்குமிடம் வரை போய் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கேட் பக்கம் ஓடினேன்.

மிகப் பெரிய இரும்புக் கதவுகள் வழியே உள்ளே குதித்து தியேட்டருக்குள் ஓடிவிட எண்ணம். ஏறி நிற்கும் வரை எல்லாம் சரியாக இருந்தது, மறுபக்கம் குதிக்கும் போது, லுங்கியின் ஒரு நுனி மேலே மெல்லிய கம்பி உடைந்ததில் குத்திக் கிழியத் தொடங்கி அங்கேயே லுங்கி சிக்கப் பார்த்து, என்னையும் நிலை குலைந்து கீழே விழ வைத்தது. அரைகுறை கிழிசல் லுங்கியை எப்படியோ வளைத்துக் கட்டிக்கொண்டு உள்ளே போனால், தியேட்டரில் நுழைய முடியாதபடி எல்லாக் கதவுகளும் இழுத்து சார்த்தப்பட்டு இருந்தன. ஓடிக் கொண்டே இருந்தேன்.

தியேட்டரின் எல்லைக்கோடு வந்து விட்டது. திரும்பிப் பார்த்தால், எனக்குப் பின்புறம் இன்னும் ஆட்கள் ஓடி வந்துகொண்டிருந்தனர். வேறு வழியே இல்லை என்று அப்படியே காம்பவுண்ட் சுவர் மீது தாவி ஏறிப் பின்பக்கம் குதித்தேன், அது குப்பையா செட்டித் தெரு வீடு ஒன்றின் பின்புறக் கட்டு. அங்கே குடித்தனம் இருந்தவர்கள் கதி கலங்கிப் போயிருந்தனர். இப்படி எனக்கு முன்பும் என்னோடும் எனக்குப் பின்பும் குதித்துக் கொண்டிருந்தவர்களைப் படு மோசமாகத் திட்ட ஆரம்பித்தனர், நாங்களோ சட்டென்று அந்த வீட்டினுள் நுழைந்து ஓடி முன் பக்கம் திறந்திருந்த வாசல் வழியே வெளியேறி விட்டோம்.

நான் நேரே அனுமார் கோயில் தெரு வீட்டுக்கு ஓடி, மாடியில் எங்கள் போர்ஷனில் நுழைந்து பேண்ட் எடுத்து மாட்டிக் கொண்டு, கிழிந்த லுங்கியை மூலையில் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் தியேட்டர் பக்கம் இலக்கிய வீதிக்கு (ஆம் இலக்கியக் காப்பிய வீதி தான்!) ஓடினேன், கூட்டம் அலைமோதிய இடம் சற்று மெல்ல இயல்பு நிலைக்கு மீண்டு கொண்டிருந்தது.

ரமேஷ் கவுண்டருக்குள் பத்திரமாக இருந்தான். நடுக்கம் யாருக்கும் இன்னும் அடங்கவில்லை. மெல்ல அவனை அழைத்துக் கொண்டு பத்திரமாக வீடு திரும்பிய பிறகும், நெடு நேரம், அந்த வெட்டுக் குத்துக் காட்சிகள் உள்ளே திகில் பறக்க ஓடிக் கொண்டிருந்தது. காசு கொடுக்காமல் பார்த்த சண்டைக் காட்சி, இனி எப்போதும் பார்க்க விரும்பாத காட்சி.


5 Comments on “திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்”

  1. கடந்த காலம் எல்லோருக்கும் சுவாரஸ்யமானதுதான். ஆனால் அது எஸ்.வி.வி எழுத்தில் படிக்கும் போது தான் காலம் கடந்த இலக்கிய தகுதி பெற்ற சுவாரசியமான கதையாகிறது. ஒரு வேளை இக்கதை நிகழ்ந்த சற்றேறக்குறைய 70 களில் பள்ளி சிறுவனாகவும் 80 துவக்கத்தில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பை முடித்து இலக்கிய கதைவாசிப்பு செம்மலர் படிக்க துவங்கிய எனது வாழ்க்கை அனுபவங்களோடு இன்னும் ஈர்ப்போடு ரசிக்க வைக்கிறதோ? தொடருங்கள் தோழா!

  2. நான் ராமகிருஷ்ணா புரம் இரண்டாம் தெருவில் வசித்த காலம் பழைய்மாம்பலம் சபையரில் ஜூலி..இரண்டாம் காட்சியுன் போது..பாடல்கள்..கசிந்து வரும்..கேட்டு ரசித்த காலமது..ஸமித் ஆஸ்பத்திரியில்..எனது இரண்டாவது அக்காளுக்கு பெண் குழைந்தை பிறந்து நான் இன்னொரு முறை மாமாவானேன்

  3. 1974இல் நான் மாம்பலம் வாசியானேன். எவ்வளவோ படங்கள் நேஷனல் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். கூட்டம் இருக்காது. மூட்டைப்பூச்சிகள் இருக்கும்.

  4. அருமை. எனக்கும் நேஷனல் தியேட்டருக்கும் ஆன பந்தம் பற்றி நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது! ஸ்மித் மகப்பேறு ஆஸ்பத்திரி, ஏதோ ஒரு மிஷன் நடத்தி வந்ததாக நினைவு… அங்குதான் என் கடைசி தம்பி பிறந்தான்!

Comments are closed.