
ஒற்றைக்காலால் தவமிருந்து தவமிருந்து
இன்னொரு காலை
வரமாகப்பெற்றுவிட்டன மரங்கள்
இப்போது எந்த மரமும்
ஓரிடத்தில் நிற்பதில்லை
உறங்கும் நேரம் தவிர
மரங்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு
நடந்து போகின்றன
நேற்று சாலையில்
வாடிய முகத்தோடு நடந்துபோய்க்கொண்டிருந்த
ஐந்து மரங்களைக் கண்டேன்
அவை
ஊரோரத்திலிருக்கும் குளத்துக்கு
தண்ணீர் குடிக்கச் சென்றுகொண்டிருந்தன
இன்றும் வரும் வழியில்
சில மரங்கள்
வேக வேகமாக சென்றுகொண்டிருந்தன
ஒரு மரத்திடம் கேட்டதற்கு
பக்கத்து மாநிலத்தில் அடிக்கடி மழைபெய்வதால்
அங்கே குடியேற முடிவு செய்து
சென்று கொண்டிருப்பதாகச் சொன்னது
ஊருக்குப் போவதற்கு முன்
நான் குடியிருக்கும் தெருவில்
ஆறு மரங்களிருந்தன
ஊருக்குச் சென்றுவிட்டு
ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால்
ஒரு மரத்தையும் காணவில்லை
இதே தெருவில் வசிப்போருக்கும்
அவை எங்கே சென்றன
எனத்தெரியவில்லை
மரத்தை வெட்டிப் பிழைத்தவர்களெல்லாம்
எங்கோ சென்று பதுங்கிக்கொண்டார்கள்
தங்கள் இனத்தை வெட்டுபவர்களுக்குத்
தண்டனை நிறைவேற்றவேண்டுமென
மாநாடு கூட்டிய மரங்கள்
தீர்மானம் போட்டிருக்கன்றனவாம்
சட்டென மாறிப்போனது உலகம்
மரங்களுக்கு மற்றொரு கால்
கிடைத்துவிட்டதால்

புதிய சிந்தனை.