‘Combined Studies’ காலங்கள்…/இந்திரநீலன் சுரேஷ்

திருச்சியில் பள்ளியிறுதி படிக்கும் காலத்தில், பொதுவாக மாணவர்களிடையே நடக்கும் ஒரு வைபவம் ‘Combined studies’.. அதுவும் (என்) நண்பர் குழாம், ER, St.Joseph, நேஷனல், பிஷப் ஹீபர் என இருக்க, அறிவுப் பரிவர்த்தனை என்ற பெயரில் நடக்கும் இந்த ‘Night studies’ மிகப் பிரபலம் (இரவுப் படிப்பு என்பதால் பெரும்பாலும் மாணவிகளுக்கு இந்தக் கொடுப்பினை இல்லை..சாரி ) 

“எனக்குக் கை வேலையா இருக்குடி.. அண்ணா…க்குக் கொஞ்சம் தோசை வார்த்து(ப்) போடறயா..?, பாவம் ராத்திரியெல்லாம் படிக்கிறதுக்காக ப்ரண்ட் வீட்டுக்குப் போறது..”- என்பாள் அம்மா 

“எந்தப் படம்..னா..?” – இது தங்கை 

“படம் இல்லை தங்கையே.. பாடம்..!” 

“சாரி, கொஞ்சம் ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக் ‘ஆயிடிச்சு…”

“பேசும் போதே, ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடற ஒரே நபர் நீதான்..” – இப்படிப் போகும் எங்கள் பேச்சு.. 

நாங்கள் பொதுவாக ‘சுண்டு’ வின் வீட்டில்தான் திரளுவோம்.. அதற்கான காரணம் அடுத்த வரியில்.. அவன் அம்மா ‘பாவம் குழந்தைகள் ‘ரா முழிச்சுப் படிக்கிறதே..’ என, ரிப்பன், தேன்குழல், தட்டை போன்ற தீனி வகையறாக்கள் செய்து வைப்பாள்.. 

உள்ளே நுழைந்ததும், முதல் அதகளம் இந்த snacks தான் .. – இனி எங்கள் சம்பாஷணைகள்;

“என்ன சப்ஜெக்ட் முதல்ல ஆரம்பிக்கலாம் சொல்லு..?”

“English..”

“ஏய், இவனுக்கு நல்லா வரும்கிறதால நாங்க அதைப் படிக்க முடியாது..”

“சரி தமிழ் படிப்போம்.. – “நான் மாட கூடலில் நிற்கின்றேன். .நானிலம் போற்றும் மதுரையில்…!”

“ஹலோ…, மொழியை விடு, முழி பிதுங்கிற கணக்கை எடு…!”

“கப்பியை (கற்பகத்தை) பார்த்தத்திலேயிருந்தே, இவனுக்கு எப்பவும் கவிதை நடைதான்..”

“அதான் இவனைப் பார்த்தாலே அவ ஓடறாளா..?!”

“விடுறா.. இன்டக்ரேஷன் (அ) டிபரன்சியேஷன் .. எதைப் போடுவோம்..?” 

“இன்டக்ரேஷன் வேணாம்…, ஒரே ‘கொக்கி, கொக்கியா’ இருக்கும்..”

“மேலும் , பொதுவா ராத்திரி கணக்கு போட்டா ‘ Hence proved ..’ கரெக்ட்.. ஆ.. வராது, மாப்..ளை..

“சரி ‘சயின்ஸ்’..ஐ முடிக்கிறோம்..”

“கிட்டப்பா குழியில் விழுந்தான்..”

“எப்போ ..? “

“கிட்டப் பார்வைக்கு… குழி லென்ஸ்’ அதைத்தான் சொன்னேன்..

“உங்க ஸ்கூலை, இந்த மாதிரி ஷார்ட் கட்.. டிப்ஸ்..ல அடிச்சுக்க முடியாதுடா..”

“சரி நம்ம ‘கிட்டு’..வை எங்க காணும் ‘”

“இதோ வர்றானே.. எங்கடா போனே..?”

‘பதினாறு வயதினிலே’..! – அடுத்த லெவல் மச்சான்..! டைட்டில்..லே அசத்தல்..’சப்பாணி, மைலு, பரட்டை, குருவம்மா..னு..

ஸ்ரீதேவி, வெள்ளை பாவாடை தாவணில ‘செந்தூரப் பூவே’.. ஒரு பாட்டு.. – இன்னிக்கு முழுக்க பாக்கலாம்.!

கதை..?

கிட்டா.., பாரதி ராஜா எடுத்ததையும், எடுக்காததையும் + கிட்டா வின் சொந்த சரக்குகளையும் சீன் விடாமல் சொல்ல, ‘ஜனம்’ வாய் மூடாமல் கேட்க.. ‘ கமலை’ ஒருவழியாக ரயில் ஏற்றி விட்டுத்தான் முடித்தான்..

திடீரென (ஒன்று கூடிய நோக்கம்) நினைவுக்கு வர ‘சீமாச்சு’, பரிட்சைக்கு வர்ர நாலு கேள்வியாவது பாப்போம்டா..

“காபி எங்கே கிடைக்கிறது..?”

“NSB ரோட்ல ‘நரசுஸ்’, பெரிய கடை வீதி ‘ஜோசப்..”

“மக்கு, பிரேசில்…கொலம்பியா ..”

“மச்சான், காபி ன்..னு செல்லும்போதுதான் தோணுது.. ஒரு டீ ‘ அடிச்சுட்டுப் பிரெஷ்..ஆ ஆரம்பிப்போமா..?” 

“இந்த ராத்ரில கிடைக்குமா ..?”

“சின்னக் கடை வீதி முடிஞ்சு, கீழண்டார் தெரு முனைல ராத்திரி 2 மணிவரை கிடைக்கும்..”

நண்பர் குழு , கடையை அடைய.. “மச்சான், இங்க ‘பனங்கல்கண்டு பால்’.. பேமஸ் !”

“எல்லாருக்கும், அதையே கொடுத்துடுங்க..”

மீதி அரட்டை முடிந்து, வீடு திரும்பும் போது ‘மாப்ளை.. எனக்குத் தூக்கம்(மா) வருதுடா.. அதான் டீ..யே குடிக்கலாம்..னேன்..”

“எனக்குக் கூட தூக்கம், தூக்கமா வரது ..”

“சரி, கலையறோம்.. ஆனா நாளை கூடறோம், படிக்கிறோம்..!,’ தினத்தந்தி ‘ முதல் பக்கத்தில நம்ம பேர் வர்றது..என்ன..?

அடுத்தநாள் காலை ,

மணி 7:30 ஆச்சு.. இன்னுமா அண்ணா தூங்கறான்..” -தங்கை 

“எழுப்பாதடி, பாவம்.. குழந்தை ராத்திரி எல்லாம் படிச்சிருக்கு..”

“அம்மா, இன்னும் எத்தனை நாளுக்கு நீ இப்படி அப்ராணியா, இவனை நம்புவ..?!”

எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம்… இந்தத் தங்கைகளுக்கு மட்டும், கூட இருந்து பார்க்காம எல்லாமே கண்டுபிடிக்க முடிகிறதே எப்படி..? உங்களுக்கு ஏதேனும் idea உண்டா..?)

3 Comments on “‘Combined Studies’ காலங்கள்…/இந்திரநீலன் சுரேஷ்”

  1. அதே அதே. என் நண்பன் நான் படிக்க கம்பெனி குடுப்பதாய் குமுதம் விகடன் படித்தபடி இருப்பான். அக்ரஹாரத்தில் இரண்டு வீடு தள்ளி இருக்கிற அவன் அம்மா புள்ளைங்க படிக்குதுன்னு பதினொன்றரை மணியளவில் வெண்கல சிறு கூஜாவில் (ஜடை டம்ளர் இணைப்பு) சுடச்சுட டீ போட்டு புடவைத்தலைப்பில் சூடு தாங்கி கொண்டுவருவார். “டேய்! அம்மா வரங்காடா! படிக்கற மாதிரி நடி!”
    அந்த தாய் அவனிடம் தராமல் “ராமு! முதல்ல நீ குடிச்சுட்டு நல்லா படி!” மறக்க முடியாத நாட்கள் பள்ளி/கல்லூரி காலங்கள். பதிவின் மூலம் என்னையும் காலம் பின்னோக்கி அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

Comments are closed.