
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட குழு இந்த தேர்வை செய்துள்ளது.
விருது பெற்றுள்ள ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூல், பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி எழுதியுள்ள ‘Chronicle of a Corpse Bearer’ என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு. குஜராத்தில் வாழும் பார்சி சமூகத்தில் புறக்கணிப்பிற்கும் ஒதுக்கலுக்கும் உள்ளான பிணந்தூக்கிகளின் வாழ்வைப் பின்புலமாகக் கொண்ட ஒரு காதல் கதை இந்நாவல்.
பார்சி மதத்தவர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். மேல்நிலையில் புரோகிதர்கள், இடைநிலையில் சாதாரண பார்சிகள், கீழ்நிலையில் பிணம் தூக்குபவர்கள் என்னும்படி பார்சி சாதி அமைப்பு உள்ளது. இறந்தவர்களின் பிணங்களைக் குளிப்பாட்டிச் சடங்குகளை நடத்திய பிறகு, பார்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் அமைதித் தோட்டத்திலுள்ள உயரமான கோபுரங்களின் உச்சியில் பிணத்தைக் கழுகுகளுக்கு இரையாக வைப்பது பார்சிகளின் வழக்கம். சாகும் நேரத்தில் இயற்கைக்கு ஒரு பார்சி செய்யும் இறுதிக் கொடையாக இச்செயல் பார்க்கப்படுகிறது. இதற்காக பிணம் தூக்கும் வேலையை பார்சிகளிடையே ஒதுக்குதலுக்கு உள்ளான பிணந்தூக்கிகள் என்ற ஏழை சாதியினர் செய்கிறார்கள். இவர்களை ஏனைய பார்சிகள் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள்.
இந்த நாவலில் பிணம் தூக்கும் சமூகத்தைச் சேர்ந்த செப்பியா என்ற பெண்ணை, பார்சி மத குருக்களின் மகனான ஃபெரோஸ் எல்சிதனா தனது 17 வயதிலே காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறான். அந்த பெண் அவனுக்கு ஒன்றுவிட்ட தங்கை முறையுமாவாள். இதனாலும் அவளது தந்தையின் பிணம் தூக்கும் சாதி பின்புலத்தாலும், ஃபெரோஸ் எல்சிதனா தந்தையும் சமூகமும் அவளை ஒதுக்குகிறது.
பார்சி சமூக அரசியல், அதன் பின்னணியில் அன்றைய இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், பார்சி மதத்திலுள்ள பழமைவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே மதச் சடங்குகளைக் குறித்த விவரங்களை ஒட்டி நிகழும் பூசல்கள் என்று இந்த நாவல் 1990கள் வரை நீள்கிறது. பார்சிகள் பிணத்தை சாப்பிடும் பாறு கழுகுகள் அருகி வருவதும், பிணத்தை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கட்டிடம் கட்டப்படுவதற்காக விற்கப்படுவதும் போன்ற சமகால பிரச்சினைகளையும் இந்த நாவல் பேசுகிறது.
இந்த நாவலை எழுத்தாளர் மாலன், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
“ஒவ்வொரு சமூகத்திற்கும் இருண்ட பக்கங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க பலர் மறுக்கும்போது அந்தப் பகுதியை வெளிப்படுத்துவது ஒரு எழுத்தாளனது கடமை. அந்த வகையில் சைரஸ் மிஸ்திரியின் நாவல் அனைவரும் படிக்க வேண்டியது” என்கிறார் எழுத்தாளர் நோயல் நடேசன்.
இந்த நாவல் ஆங்கிலத்தில் வெளியான போதே 2015ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது மற்றும் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது என்ற சர்வதேச விருது உட்பட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாலன் பதில் :
உங்கள் இணைய தளத்தில் பதிவிட முடியாததால் இங்கு சில விளக்கங்கள். 1. கதை மும்பையில் நடக்கிறது, குஜராத்தில் அல்ல 2 நான் சாகித்ய அகாதெமியின் நிர்வாகக் குழுவில் இல்லை. அதன் முழு நேர ஊழியனும் இல்லை. 3.சாகித்ய அகாதெமி விருதுகள் தேர்வு முறை அதன் இணையதளத்தில் உள்ளது (விருது தேர்ந்தெடுக்கப்படுவதின் நடைமுறைகள் பற்றி நீங்கள் திலகவதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் அவர் விருதாளர், மேனாள் பொதுக் குழு உறுப்பினர்) இங்கு சுருக்கமாக : மூன்று நிலைகள் கடந்த் பின்னர்தான் ஒரு நூல் தேர்வாகிறது. Ground list என்பது முதல் நிலை. முப்பதற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள் தலா இரு நூல்களைப் பரிந்துரைக்குமாறு கோரப்படுகிறார்கள் இதிலிருந்து வல்லுநர் குழு வடிகட்டி 5 நூல்கள் கொண்ட குறும் பட்டியலைத் தயாரிக்கிறார்கள் இந்தக் குழு preliminary panel என்றழைக்கப்படுகிறது. இதில் அகாதெமியின் ஆலோசனைக் குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழுவினர் இடம் பெற முடியாது. இந்தக் குறும்பட்டியலிருந்து நடுவர் மூவர் நேரில் கூடி விவாதித்து முடிவு செய்கிறார்கள் பொதுவாக இந்த மூவரும் வேறு வேறு சார்புகள் பார்வைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் இதிலும் அகாதெமியின் குழு உறுப்பினர்கள் நடுவர்களாக இருக்க முடியாது இவர்கள் நியமனம் ரகசியமானது. அகாதெமியின் தலைவரே நேரடியாக நியமிப்பார் குழு உறுப்பினர்களுக்கு இது தெரியாத வண்ணம் ரகசியம் காக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அகாதெமியின் தலைவர் நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்று விருது பெறும் நூலை அறிவிக்கிறார் விருது நூலுக்குத்தான்.4 நான் ஐந்தாண்டுகளாகப் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன் அகாதெமியின் எந்த விருதுக்கும் பொதுக்குழுவிற்கும் தொடர்பு இல்லை அவர்கள் நடுவர்களோ, குறும்பட்டியல் தயாரிப்பவரோ இல்லை இதற்கு முன்னரும் பொதுக்குழு உறுப்பினர்களது நூல்கள் பரிசு பெற்றிருக்கின்றன நான் முன்னுதாரணம் இல்லை. 5 அகாதெமி பரிசுகளுக்கும் அரசிற்கும் சம்பந்தம் இல்லை கடந்த சில ஆணடுகளில் பரிசு பெற்ற சிலர்: சசி தரூர் (ஆங்கிலம்) -காங், வீரப்ப மொய்லி (கன்னடம்)-காங், இமயம் (தமிழ்) -திமுக, சு.வெங்கடேசன்(தமிழ்) -மார்க் கம், கடந்த ஆண்டு மம்தா அரசின் கல்வி அமைச்சர் வங்க மொழிக்குப் பெற்றார். ஜாதிக்கும் விருதுக்கும் தொடர்பில்லை அம்பைக்கு முன்னால் அகாதெமியின் நான்கு வகை விருதுகள் பெற்றவர்கள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதாரே

சாகித்ய அகாதெமி எப்பட நூல் தேர்வு செய்கிறது என்ற விவரம் மாலன் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது