நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

எப்போதும் அவருடைய நினைவு எனக்குள் நறுமணமெனக் கமழ்ந்தபடியே இருக்கிறது. என்னுடைய நேர்மையில், உண்மையில், பெருந்தன்மையில் அவர் உறைந்திருக்கிறார்.
திருத்தணியைக் காத்தவர், தெற்கெல்லை கன்னியாகுமரியை மீட்டதில் பெரும்பங்கு வகித்தவர், தமிழகத்தின் தலைநகர் சென்னையை மீட்டவர், தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதற்குக் காரணமானவர், இன்றைய தமிழகத்தை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர் என்பதெல்லாம் இன்றைய இளம் தலைமுறைக்குத் தெரியாது. நாம் வரலாறு மறந்தவர்கள். மறைக்கப்பட்ட வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்கள். அதையொரு பொருட்டாகவே நினையாதவர்கள்.
தாத்தாவின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்தியபோது அவரைப்பற்றிக் கூடுதலாகச் சில செய்திகளை அறிந்தோம். தேப்பெருமாநல்லூரில் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த இளங்கோ சகோதரர்கள் தானே முயன்று நூற்றாண்டு விழா மலரை ஏராளமான படங்களுடனும் கட்டுரைகளுடனும் தன் சொந்தச் செலவில் வெளியிட்டனர். அவர்களுக்கு என்றும் நன்றியுடையோம்.
சேலத்திலிருந்து பொறியாளர் சங்கம் ம.பொ.சிக்கு விழா மலர் வெளியிட்டதுடன் அவர்களது அலுவலகத்தில் மார்பளவு சிலை வைத்து இன்றளவும் நினைவுகூர்கிறார்கள். தமிழ்வழியில் பட்டயப் பயிற்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் சேர அப்போதைய துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமியிடம் வாதாடி அனுமதி பெற்றுத் தந்தவர் ம.பொ.சி என்பது அவர்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொண்டது. இதை அவர் எங்கும் எந்த இடத்திலும் பதிவு செய்ததில்லை.
மொழிப்பாடமெடுப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் கைவினை ஆசிரியர்களுக்குரிய ஊதியமே அளிக்கப்பட்டது. மற்ற பாடங்களை எடுப்பவர்களுக்கும் தமிழாசிரியர்களுக்குமிடையில் ஊதிய வேறுபாடு இருந்தது. இந்தச் சிக்கலிலும் தலையிட்டு அப்போதைய அரசிடம் பேசிச் சரி செய்தாரென்பது என்னுடன் பணியாற்றிய மூத்த தமிழாசிரியர் ஒருவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். இதையும்கூட ம.பொ.சி எந்த இடத்திலும் பதிவு செய்ததில்லை.
தமிழ், தமிழர், தமிழினத்தின் வளர்ச்சி என்பதே அவரின் வாழ்நாள் சிந்தனையாய் இருந்தது. தான் வகித்த பதவிகளின் அதிகாரத்தையும்கூட அவர் இவ்விதமே பயன்படுத்தியிருந்தார்.
தமிழ் இந்துவில் வெளிவரும் எம்ஜிஆர்
பற்றிய தொடரொன்றில் இவ்விதமாகப் பதிவாகியிருக்கிறது. என் நினைவு தெரிந்தவரையில் ராமாவரம் தோட்டத்துக்கு எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரும் சென்றது கிடையாது. தாத்தா வெளிநாடுகள் பல சென்றிருந்தபோதிலும் பொருட்கள் வாங்கி வரும் பழக்கம் அவரிடம் கிடையாது. இது பற்றி அவருடைய பயண நூல்களில் அவரே எழுதியிருக்கின்றார். ஆனால் அமெரிக்காவில் அவர் கேட்டதையெல்லாம் வாங்கித் தரும்படி பழனி ஜி. பெரியசாமியிடம் எம்.ஜி.ஆர் சொல்லியதாகவும் அவரும் அப்படியே செய்ததாகவும் தமிழ் இந்துவில் பதிவாகியிருந்தது. எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கலாம். ஆனால் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம் தாத்தாவிடம் எப்போதுமே இருந்ததில்லை.
ம.பொ.சி அதிகம் சொத்து சேர்த்திருந்ததாக மதிப்பிற்குரிய தோழர் மார்க்ஸ் முகநூலில் எழுதியபோது பெரிதும் வருந்தினேன். எங்கிருக்கிறது என்று சொன்னால் எங்களை வளப்படுத்திக் கொள்வோம் என்று நான் கேட்டதற்குப் பதில் வரவில்லை. வராது.
இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
அவர் வாழ்ந்த காலம் வரையிலும் தன் செயல்பாடுகளைப் பெருமையாய்ப் பேசிக் கேட்டதில்லை. மக்களால் அது எண்ணிப் பார்க்கப்படாதது பற்றிய பொருமலும் இருந்ததில்லை. எந்நேரமும் தொடர்ந்த சமூக வழிமுறைகளைப் பற்றிய சிந்தனையும் இலக்கிய விவாதங்கள், மகன் விட்டுச் சென்ற கடமைகள் எனத் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட அந்த அரிய மனிதருக்கு நான் பெயர்த்தி என்பது என் பிறவிப்பயன். என் வாழ்விலும் பணியிலும் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் அவரை வணங்கியபடியே கடக்க முயல்கிறேன். அவர் வாழ்வே எனக்கு வழிகாட்டுதல்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!

One Comment on “நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி”

  1. சிலம்புச் செல்வர் ஐயாவின் தமிழ்ப் பணிகள், அரசியல் அர்ப்பணிப்பு, எல்லை மீட்புப் போராட்டங்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள இது நல்ல பதிவு.

Comments are closed.