யமுனா ராஜேந்திரன் முகநூலில்..

நான் எழுதிய முதல் திரைப்படக கட்டுரை பாலச்சந்தர் படங்கள் தொடர்பானது. தோழர். அறந்தை நாராயணன் நடத்திய ‘கல்பனா’ இதழில் வெளியானது.

அது எழுபதுகளின் இறுதி என ஞாபகம்.

திரைப்படம் எனும் சாதனத்தை மட்டுமல்ல, வெகுஜன ஊடகங்களை இந்திய-தமிழக மார்க்சியர் அதன் வலிமையை உணர்ந்து சரியாகக் கையாளவில்லை என்பது எனது எண்ணம்.

திரைப்படக் கோட்பாடு, படைப்பு என உலகின் மகத்தான சாதனைகளை நிகழ்த்திவர்கள்-நிகழ்த்தி வருபவர்கள் மார்க்சியர்கள் என்பதை என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும். இதனைத் தமிழ்ச் சூழலுக்கு அறிவிக்கவே நான் தொடர்ந்து திரைப்படம் குறித்து எழுதுகிறேன்.

இனியும் எழுதுவேன்.

கோட்பாடு போலவே கலை, இலக்கியம், திரைப்படம் என இவற்றிலும் வலது-தாராளவாத- இடது பார்வைகள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பூக்கோ, காம்யூ, தார்க்காவ்ஸ்க்கி போன்றவர்கள் தாராளவாதிகள். அல்தூசர், சார்த்தர், தியோ ஆஞ்சல பெலோஸ் போன்றவர்கள் இடதுசாரிகள்.

வலதுசாரிகளை நான் அதிகம் பொருட்படுத்தவதில்லை.

நான் எழுதி இன்னும் தொகுக்கப்படாத இடதுசாரி நோக்கிலான திரைப்படக் கட்டுரைகள் 4,000 பக்கங்களில் இருக்கின்றன. இத்தனைக்குப் பின்பும் பெத்ரோ கோஸ்தா, லாவ் டயாஸ், இதனோடு கிழக்கு ஐரோப்பிய சினிமா பற்றி நான் எழுதவில்லை எனும் குறை எனக்கு உண்டு.

நான் தொழில்முறை சினிமா விமர்சகனோ அல்லது திரை வரலாற்றாசிரியனோ அல்லது அதனைப் பயுற்றுவிப்பவனோ அல்ல. நான் விரும்புகிற சமூக மாற்றத்தின் பகுதியாகவே நான் சினிமாவை அணுகிக் கொண்டிருக்கிறேன்..