பெட்ரோ அல்மோடோவர் – இந்தப் பெயரை அறியாதவர்…/சுரேஷ் கண்ணன்

பெட்ரோ அல்மோடோவர் – இந்தப் பெயரை அறியாதவர் உலக சினிமா ரசிகராக இருக்க முடியாது. இந்த ஸ்பானிய இயக்குநர் கவனத்துக்குரிய பல திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்படம் இது.

கதையின் ஒன்லைன் என்று பார்த்தால் பீம்சிங் காலத்து சென்டி கதைதான். ஆனால் அதை சொல்லிய விதம் இருக்கிறதே, அடடா!.. கவிதை.. கவிதை. நிதானமாக நகரும் டிராமா என்றாலும் என்னால் ஒரு நொடியைக் கூட சலிப்பாக உணர முடியவில்லை. அங்கே இங்கே திரும்ப முடியவில்லை. அத்தனை சுவாரசியம். ஒரு சீனை எங்கே ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்பது ஒரு இயக்குநருக்குத் தொிந்திருக்க வேண்டும்.

இது சென்டிமென்ட் படம் மட்டுமல்ல. அதனுடன் ஒரு வரலாற்றுப் பின்னணியையும் கச்சிதமாக இணைத்திருக்கிறார்கள் பாருங்கள்.. அங்குதான் இந்தத் திரைப்படம் ஒரு கலையாக மாறுகிறது.

oOo

அல்மோடவரின் ஆஸ்தான நடிகை பெனோலப் க்ரூஸ் வழக்கம் போல் கலக்கியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

அது இசையைமப்பாளரின் பிரச்சினையா அல்லது சவுண்ட் மிக்சிங் பிரச்சினையா என்று தொியாது. நம்மூர் திரைப்படங்களில் பின்னணி இசை என்பது வினுச்சக்ரவர்த்தியின் குரல் போல உரக்க அலறிக் கொண்டேயிருக்கும். ஆனால் சிறந்த அயல் திரைப்படங்களில் Background Score என்பது மிக மெலிதாக, ஆனால் அழுத்தமான உணர்ச்சிகளைக் கடத்தும் வகையில் காதிற்கு இதமாக ஒலிக்கும். அந்த இனிய மாயம் இதிலும் நிகழ்கிறது.

oOo

எனக்கு ஸ்பானிய கலாசாரத்தில் மிகவும் பிடித்தது நிறங்களை பயன்படுத்தும் விதம்தான். அவர்களின் உடை முதற்கொண்டு பலதும் அடர்நிறங்கள். நாய் துரத்தினாலும் பரவாயில்லை, அடர்பச்சை நிறத்தில் ஒரு பேண்ட், சட்டை வாங்கி விடலாமா என்று அத்தனை ஆசையாக இருக்கிறது.

இந்த இயக்குநரைப் பற்றி உங்களுக்கு அறிமுகமே இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். இதர படங்களை தானாகவே தேடத் துவங்கி விடுவீர்கள். சென்னை பிலிம் பெஸ்டிவலில் பார்க்கத் துடித்து இயலாமல் போன மனக்காயம் இப்போதுதான் ஆறியது.

எங்கே பார்க்க முடியும் என்றெல்லாம் கேட்டு spoon feeding-ஐ எதிர்பார்க்காதீர்கள். ஆர்வமிருந்தால் தானாகவே கிட்டும்.