The stories may be identical, but with different perspectives…!/Bharathan Venkat

சுஜாதாவின் ‘அடிமை’ என்ற விஞ்ஞானச் சிறுகதை.. வீட்டு வேலை செய்ய ‘சேகர்’ என்ற ஒரு கம்ப்யூட்டர் வீட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.அதன் தொணதொணப்புகளை ஹீரோ ‘ஆத்மா’வால் தாங்க முடியவில்லை. அது கொடுக்கும் வெட்டி மரியாதை எல்லாம் ஆத்மாவுக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை.

தன் மனைவி நித்யா மேல் அந்த சேகருக்கு ஒரு மயக்கம் இருப்பதாக ஒரு பிரமை ஆத்மாவிற்கு. நித்யா குளிக்கும் போது,

“சேகர் நான் குண்டாகிவிட்டேனா?” என அவள் கேட்க,

“போனவாரம் 54.5 கிலோ இருந்தீர்கள், தற்போது 56 கிலோ, எனவே தாங்கள் குண்டாகிவிட்டீர்கள். மேலும் தங்களது இடுப்புச் சுற்றளவு..” என்று சேகர் ஆரம்பிக்க, ஆத்மா படு டென்ஷனாகி, “நிப்பாட்டுடா சேகர்” என கத்துகிறான்.

“ஆத்மா! சேகர் என்பது ஒரு யந்திரம், ஒரு குரல், அது மனிதனல்ல. அதனோடு நீ போட்டி போடாதே” என அவன் மனைவி நல்லதனமாகச் சொல்கிறாள். ஆனாலும் ஆத்மா-சேகர் முரண் அதிகரித்துக் கொண்டே போகும். இனி கதையின் கிளைமாக்ஸை சுஜாதாவின் வார்த்தைகளில் தான் பொருத்தமாக இருக்கும்.

“சேகர் நீ எப்படி இயங்குகிறாய்?”

“என் கம்ப்யூட்டரினால்”

“உன் கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது?”

“சோலார் பானல்களிலிருந்நு சக்தி கிடைக்கிறது”

“கம்ப்யூட்டர் எங்கே இருக்கிறது?”

“மாடிப்படிகளுக்குக் கீழ் சுவரில் பதிந்திருக்கிறது”

“அதைத் திறக்க முடியுமா?”

“முடியாது”

“அதற்கு சக்தி தரும் இணைப்புகள்?”

“மேலேயிருந்து கம்பிகள் வழியாக வருகின்றன”

“எத்தனை கம்பிகள்?”

“இருபத்தியிரண்டு”

“அவைகளை வெட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?”

“வெட்டுக் கத்தி வேண்டும்”

“நம் வீட்டில் அந்தக் கத்தி இருக்கிறதா?”

“இருக்கிறது எஜமானரே,

சமையலறையில் மைக்ரோ அவனுக்கு மேலே இடது அலமாரியில்”

சமயலறைக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டான்.

“இந்தக் கத்தியை வைத்து அந்த இருபத்தியிரண்டு இணைப்புக் கம்பிகளை வெட்டினால் என்ன ஆகும்?”

“என் சகல சக்திகளும் மடிந்து விடும்”

“அந்த இணைப்புக் கம்பிகள் எங்கே இருக்கின்றன, காட்டுகிறாயா?’

” நல்லது எஜமானரே, மாடிப்படிக்கு வாருங்கள், காட்டுகிறேன் “

ஆத்மா மெதுவாக மாடிப்படியை நோக்கி நடந்தான். – கதை முடிகிறது.

அடுத்து, ‘மாலன்’ எழுதிய “வித்வான்” என்ற, இதுபோன்ற கதை.

ஒரு வயலின் வித்துவான் வீட்டில் இது போலவே வீட்டு வேலைகள் செய்ய ஒரு கம்ப்யூட்டரை ஒரு வெளிநாட்டு சிஷ்யன் பொருத்திவிட்டுப் போகிறான். வீட்டு வேலைகளை அத்தனை கவனமாகச் செய்கிறது. அதாவது பவழமல்லிக்கு உரம் வைத்தல், அமாவாசைக்கு வீட்டில் எள் இல்லை என்பதை ஞாபகப் படுத்துதல் என அக்கறையாக வீட்டைப் பார்த்துக் கொள்கிறது.

ஒருநாள் வித்வானிடம் அது சங்கீதம் கற்றுத் தரச் சொல்லிக் கேட்க, அவர்,

“சங்கீதம் தெய்வீகமான விஷயம், புனிதமானது. அதை இயந்திரங்களுக்கெல்லாம் கற்றுத்தர முடியாது” என சர்வ அலட்சியமாகக் கூறி விடுகிறார்.

ஆனால் அது, இவர் சிஷ்யர்களுக்குக் கற்றுத் தருவதைப் பார்த்து, தானே கற்றுக் கொண்டுவிடுகிறது.

ஒருநாள் வித்வான் வீட்டில் நுழையும்போது அத்தனை சுத்தமான, அற்புதமான பைரவி ராகத்தை யாரோ வாசிக்கிறார்கள். கம்ப்யூட்டர் தான் வாசித்தது. அவர் எப்படி இது சாத்தியம் என்று கேட்கும்போது,

“ராகம் என்பது நோட்ஸ்களின் முன் தீர்மானித்த அடுக்கு. ஜஸ்ட் ஒரு பார்முலா. நோட்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட ஒலியளவு. இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் வெவ்வேறு பார்முலாக்களை அமைத்து வெவ்வேறு ராகங்களை விவரிக்க முடியும்” என மிக எளிதாகச் சொல்கிறது அந்தக் கம்ப்யூட்டர்.

வித்வான் மிகவும் தவித்துப் போய்விடுகிறார். ஆக சங்கீதம் என்பது வெறும் கணக்குதானா? தனது ஐம்பது வருட உழைப்பை ஒரு யந்திரம் ஒரு நொடியில் எளிதாகக் கற்றுக் கொண்டு விடுமா? சங்கீதம் தெய்வப் பிரசாதம் என்பது வெறும் பிரமையா? கண்ணில் நீர் வழிய இரவெல்லாம் வித்வானுக்கு இப்படியாக ஒரே யோசனை.

நல்ல சங்கீதத்தை யார் பாடினால் என்ன, ஒரு யந்திரம் பாடினாலும் ஏற்க வேண்டியது தானே என்று அவருக்குத் தோன்றுகிறது. சங்கீதத்தில் உன்னதத்தை அடைய நாம் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் போது, ஒரு கம்ப்யூட்டர் அதைச் சாதித்தால் அதற்கு நமஸ்காரம் பண்ணுவதுதானே முறை! மறுநாள் காலை தன் கம்ப்யூட்டரை அழைத்து,

“இது விஞ்ஞானத்தை தெய்வமாகக் கும்பிட வேண்டிய காலம். உன் மேல் நான் கோபம் கொண்டது தவறு” என்று கூறி, மன்னிப்புக் கேட்டு, நேற்றைய அந்த பைரவியை வாசிக்கச் சொல்கிறார். அதன் ‘இன்பில்ட் இன்ஸ்ட்ரக்ஷன்’படி, இவருக்குப் பிடிக்காதது அதற்கு மறந்து போய்விடும். அதனால் அது சங்கீதத்தை மறந்துவிட்டது. ஒரு கணம் யோசித்த வித்வான், இதுதான் ஸரளி வரிசை என்று அதற்குப் பாடத்தை ஆரம்பிக்கிறார். -கதை முடிகிறது.

இதில் நாம் வியக்க வேண்டிய விசித்திரமான வினோதம் என்னவென்றால்,

“விஞ்ஞானத்தை அனைத்து வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தும் அந்த வசதி, ‘விஞ்ஞானியான’ சுஜாதாவிற்குத் தொல்லையாக இருப்பதாகவும், ‘விஞ்ஞானியல்லாத’ மாலனுக்கு அது கும்பிட வேண்டிய தெய்வாம்சமாக இருப்பதாகவும் ஒரே கதை வேறுவேறுவிதமாகப் படைக்கப் பட்டிருப்பதுதான்!”