நடமாடும் தையற்காரர்

சிறுகதை:

  • கு. மா. பா. திருநாவுக்கரசு

  • தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். கூன் விழுந்த முதுகுடன் அதைத் தள்ளிக்கொண்டு வந்து, அதே மரநிழலில் தான், வெய்யில் அடிக்கும் திசைக்கு ஏற்ப இருக்கையை அமைத்துக்கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து இருப்பார். நான்கு புறமும் உள்ள தெருவாசிகளில் சிலர் எப்போதாவது பழுது பார்த்துத் தருவதற்காக பழைய ஆடைகளைத் தருவார்கள். காற்சட்டைகளில் கழண்டுபோன பல்லிணைவுப் பட்டிகளைச் சரிசெய்து தருவது, இடுப்பளவை தளர்த்தித் தருவது, பொத்தான்களைப் பொருத்துவது, பெண்களின் அளவு மாறிய ரவிக்கைகளுக்கு மாற்றங்களைச் செய்து தருவது போன்ற வேலைகளைத் தான் அவரை நம்பி கொடுப்பார்கள். ஒரு நாளில் அவருக்கு ஐம்பது ரூபாய் ஊதியம் கிடைப்பதே அரிதாக இருக்கும். அதனால், வயது முதிர்ந்த அவருக்கு அண்மைக் காலமாக மறதி நோயும் சேர்ந்துகொண்டது. இருந்தாலும்,அனைத்து வேலைகளையும் அவரே தான் செய்வார். பணத்திற்குச் சிரமப்பட்டால் கூட கையேந்தி யாரிடமும் காசு கேட்கும் வழக்கம் மட்டும் அவருக்குக் கிடையாது.
  • மாமன்ற நகராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு சூடுபிடிக்கத் துவங்கிய நேரம் அது. அந்த வட்டத்தில் தான் பிரதான எதிர்க்கட்சியைச் சார்ந்த பகுதிச் செயலாளர் குடியிருந்தார். திடீரென்று ஒருநாள் அவர் அந்த வட்டத்தில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளருடன் தாகீர் பாய் கடை முன் மகிழுந்தை நிறுத்தினார். வண்டியில் அமர்ந்தபடியே ஒரு தொண்டரிடம் பத்து புடவைகளைக் கொடுக்கச் சொன்னார். அளவுக்கு தன் கட்சிக் கொடி ஒன்றையும் கொடுத்து அதே அளவில், கொடிகளைத் தைத்துத் தருமாறு கட்டளையிட்டார். தாகீருக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டிக்காமல், " எப்போ வேணும் அய்யா? எவ்வளவு கொடிகள் வந்தாலும் தைத்துவிடவா?" என்று கேட்டார். "ஆமாமாம்... இரண்டே நாளில் ரெடி பண்ணனும்... தலைவர் வர்றாரு.. மீட்டிங்குக்கு வழிநெடுக கட்டியாகணும்! " "மூணு நாளில்.. தந்திடறேன் சாமி... கொடிக்கு பத்து ரூபாய்னு போட்டுத் தருவீங்களா?" என்று தலையைச் சொறிந்தார் தாகீர். "முதல்ல வேலையை முடிச்சு கொடு... இந்தா... " என்று இருநூறுயை முன்பணமாக நீட்டினார், அவருடன் வந்த வேட்பாளர் மனோகர். தனக்குள்ள மூலநோய் அவதியையும் சகித்துக்கொண்டு, மூன்றே நாட்களில் ஏறக்குறைய முன்னூறு கொடிகளை தைத்துமுடித்தார் தாகீர் பாய். எதிர்க்கட்சி வேட்பாளர் மனோகர் அனுப்பியதாக அவருடைய ஆட்கள், தாகீரிடம் கொடிகளை வாங்கிச் செல்ல வந்து நின்றனர். "கூலி கொடுத்து அனுப்புனாரா?" என்று வினயமுடன் பாய் கேட்க, "இந்தா... முன்னூறு ரூபாய் வைச்சிக்க! மீதியை அய்யா வந்து தருவாரு!" என்று தயாராகக் கட்டி வைத்திருந்த மூட்டைகள் மூன்றையும் தூக்கிக்கொண்டு, பதிலை எதிர்பார்க்காமல் பறந்தனர் வந்த ஆட்கள். மொத்த பணமும் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த தாகீர் அதிர்ச்சிக்கு உள்ளானார். தன் உடல்நலத்திற்கு மருத்துவ செலவு கூட செய்துகொள்ளாமல், நலிவுற்றிருந்த அவருக்கு இந்த மீதத் தொகை கிடைக்குமா? என்ற அச்சம் பற்றிக்கொண்டது. அவரது மனநிலை புரியாமல், அந்நேரம் பார்த்துதானா எதிர்வீட்டிலிருந்து வந்த மீனாம்பாள் ஆச்சி சத்தமிட வேண்டும். கட்டைக்குரலில் "என்னா பாய் ஆச்சு உனக்கு...? என் ரவிக்கைகளுக்கு ஊக்கு வைச்சுத் தரச்சொன்னா... சிப்பு வைச்சுத் தச்சிருக்கியே..." என்று தையல் இயந்திரத்தின் மேல் தூக்கி எறிந்தார். "மன்னிச்சிடு தாயி... சாயந்திரத்துக்குள்ள சரிசெய்ஞ்சு கொடி கட்டிடறேன்..." என்று வாய் தவறி உளறிவிட்டு, "இல்லை... இல்லை ஊக்குவைச்சு தைச்சிடறேன்! " என்று தலையில் அடித்துக் கொண்டார். மறுநாளே தெருவெங்கும் அவர் தைத்துக் கொடுத்த கட்சிக்கொடிகள் காற்றில் உற்சாகமாக படபடத்தன. வேட்பாளர் மனோகர் ஒரு மூவுருளியில் கைக்கூப்பி வாக்குகள் சேகரிக்க அந்தத் தெருவுக்குள் பரப்புரை செய்தபடி வந்தார். தாகீர் பாய் பரிதாபத்துடன் அவரைப் பார்த்து கைக்கூப்பியபடி நின்று கொண்டிருந்தார்.