
அதோ அந்த ஆத்துப் பாலத்துல
ரயில் வருது
பொடியாத் தெரியுது
அந்த வயக்காட்டத் தாண்டி
வளைஞ்சு, கன்னடியன் கால்வாய்
சின்னப் பாலத்து மேல
கூக்கூன்னு கத்திக்கிட்டு வருது
இப்ப சின்ன ரயில்வே கேட்டத் தாண்டி
நடேசன் கம்பெனி
பின்னங்கேட்டத் தொட்ட மாறி
அதே கூக்கூன்னு கத்திக்கிட்டு
எங்க ஊர் ஸ்டேஷனுக்குள்ளயே
பக்கத்துல ஒரு பெரிய யானை
கத்திக்கிட்டுப் போறாப்ல
என்னைத் தாண்டி வேகமாப் போயி
மொள்ள மொள்ள
நின்னுச்சி ரயில் வண்டி.
கொத்து கொத்தா சனங்க
எறங்கி நடந்து வாராங்க
தாத்தாவும்
ரயில விட்டு எறங்கி வாறாரு
கையில ஒரு பலாப்பழத்தத் தூக்கிட்டு
தாத்தா என்னை
அணைச்சு முத்தமிட்டாரு
நான்
அந்தப் பலாப்பழத்தை
வாசம் புடிச்சேன்
ரயில் வண்டி
கூக்கூன்னு கத்திக்கிட்டு
கிழக்குநீக்கி
வேகமா நடைய கட்ட
அது ஒரு கரும்புள்ளியா
மறையும் வரை
நான்
கைகாட்டிக் கிட்டே இருந்தேன்
“வாவா
இப்படித்தான் நெதமும்
ரயிலு வந்து போயிட்டிருக்கும்
நாமளும்
அது கண்ணுக்குப் பொடியாத்
தெரிஞ்சு
மறஞ்சுருவோம்ல்லா “
தாத்தா தன் பேராண்டியுடன்
பேசிக்கிட்டே நடந்தாரு.
வீட்டு வாசலை நெருங்கும் போது
மீண்டும்
கூக்கூன்னு கத்திக்கிட்டு
ரயில் வரும் சத்தத்தை
காத்து
புழுதியைக் கிளப்பிட்டு
அந்தத் தெரு முழுதும்
வாரி ஏறச்சுக்கிட்டு போவுது.
