நாரணோ ஜெயெராமன் ‘வேலிமீறிய கிளை‘ கவிதை நூலும் பிரமிள் முன்னுரையும்/கால.சுப்ரமணியம்

கவிதையும் ரசனையும் – 18 – 1
அழகியசிங்கர்

ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.
தமிழில் எழுதியிருக்கும் அவருடைய கட்டுரையை இன்னொரு முறை யாராவது முயற்சி செய்து தமிழ் படுத்தினால் நன்றாக இருக்கும். அவர் எழுதிய இரண்டு இடங்களை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

     ‘இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன.  காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜன வாதமாகியதும் ருசிகரமான காதல் கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது.’ 
     -  மேலே குறிப்பிட்டது பிரமிளின் வாசகங்கள். 

இன்னொரு இடத்தில்
‘வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான். புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத்தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான். ஆனால், ருசிகரமான அனுபவமோ மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது.’

1976ல் இப்படி எழுதுவதுதான் ஒரு ஸ்டைல் போலிருக்கிறது. அதில் பிரமிள் கடுமையாக இயங்கிக் கொண்டிருந்தார்.

Kaala Subramaniam
க்ரியாவில் நாரணோ ஜெயராமன் கவிதைகள் வேலி மீறிய கிளை வந்தபோது பிரமிள் முன்னுரை அவசியம் என்று ஜெயராமன் வற்புறுத்தியதால் மறுக்க வழியற்று முன்னுரைக்கு இத்தனை (குறைந்த) பக்கங்கள்தான் ஒதுக்கமுடியும் என்று க்ரியா ராமகிருஷ்ணன் தட்டிக்கழிக்கப் பார்த்ததால் தான் எழுதிய நீண்ட முன்னுரையின் முதல் பகுதியை அப்படியே மிகவும் சூத்திரவடிவில் சுருக்கி அமைத்து அதை வெளியிட வைத்தார் பிரமிள். எனவே இந்த முன்னுரையின் முன்பகுதி தொல்காப்பியச் சூத்திரங்கள் போலிருக்கும், அதற்கு உரை எழுதத்தான் வேண்டும்.