மருத்துவத்தில் சில விநோதங்கள்!/டாக்டர் ஜெ.பாஸ்கரன்

பாஸ்கரனின் பக்கங்கள்! (ஸ்வர்ணகமலம் இதழில் வெளியான என் கட்டுரை).

நான் மருத்துவனானதே ஒரு விபத்து! அன்றைய பி.எஸ்.சி. படித்து மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆவதற்கே விருப்பம் இருந்தது. காலில் ஷூ, டை சகிதம், கையில் பெட்டியுடன், மருத்துவருக்கே மருந்துகள் சொல்லும் மெட் ரெப்ஸ் எனக்கு வசீகரமாக இருந்தனர். போதாக் குறைக்கு, மாதத்தில் இரண்டு வாரம் டூர் வேறு. நினைத்தாலே இனித்தது. (இன்றைய ரெப்ஸ் உடையிலும், தங்கள் சேவையிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது சோகம்). ஆனால் விதி யாரை விட்டது? மருத்துவனாகி, மேஜையின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்து, ரெப்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

இப்போதெல்லாம் நிறைய கம்பெனிகள். அதே மருந்துகள், காம்பினேஷன்கள்; விலையிலும் அதிக வித்தியாசமில்லை. எல்லாக் கம்பெனி ரெப்ஸும், நண்பர்கள்தான். மருந்தினைத் தேர்வு செய்வது ஒரு பெரிய பிரச்சனைதான்! விலை குறைவான அல்லது பெயர் வாங்கிய பெரிய கம்பெனியின் மருந்தினைத் தேர்வு செய்யலாம் என்றால், அப்படி ஒரு வேறுபாட்டினைக் காணவே முடியாது. எல்லாமே கிட்டத்தட்ட ஒரே விலை, ஒரே இடத்தில் அதே குவாலிடியில் தயாரிக்கப் படுபவை. ஒரு சோர்வான நேரத்தில் இரண்டு மூன்று ரெப்ஸ் அதே காம்பினேஷன் மருந்துகளைச் சொல்லும் போது நான் அவர்களிடம் சொல்வது: “ஒரு நாள் முதல்வர் மாதிரி, ஒரு நாள் டாக்டராக என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள். எப்படி, எந்தக் கம்பெனி மருந்தை, ஏன் தேர்வு செய்கிறீர்கள் என்று எனக்குச் சொல்லிக்கொடுங்கள்!” – அமுக்கமாகச் சிரிப்பார்கள், வேறென்ன செய்ய முடியும்? போட்டிகள் அப்படியிருக்கின்றன!(வெளியில் போய் திட்டுவார்களோ என்னமோ, நேராக ஒன்றும் சொல்லமாட்டார்கள்!).

டாக்டர்களைப் போல நகைச்சுவைத் துணுக்குகளில் மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள் வேறு எந்தத் துறையிலும் பார்க்கவே முடியாது! தேவன், தி.ஜா. க நா சு, பாக்கியம் ராமசாமி போன்றவர்களின் எழுத்துக்களில் நகைச்சுவை டாக்டர்கள் அதிகமாகத் தென்படுவார்கள்!

“ஒரு சமயம் ஒரு கிராமவாசி மனைவியின் சிகிச்சைக்காக டாக்டர் ஒருவரை அழைத்து வருகிறார். டாக்டர் அவள் வாயில் தெர்மாமீட்டர் வைத்து, பத்து நிமிஷத்துக்குப் பிறகு எடுத்தார். அவள் புருஷன், இதுவரை சேர்ந்தார்போல் இவ்வளவு காலம் தன் மனைவி பேசாமல் இருந்ததைப் பார்த்ததில்லையாதலால், டாக்டரிடம் சென்று, காதோடு,”ஸார்! இப்போது ஒரு ஆயுதத்தை என் மனைவியின் வாயில் வைத்தீர்களே! அது என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்டானாம்! (தேவன் அவர்களின் படைப்பிலிருந்து).

டாக்டர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். அது இல்லாதவர்கள் வாழ்க்கை மிகவும் இறுக்கமான ஒன்றாக இருக்கும்!

அன்று என் கிளினிக் உள்ளே நுழைந்த பாட்டிக்கு எண்பது வயதிருக்கலாம் – அரக்கு நிறப் புடவையில் பச்சை நிற பார்டர். காதில் பெரிய பாம்படம், ‘எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன்’ என்று பயமுறுத்தியது.

“கொழந்தைக்குப் பாக்கணும். வந்துகிட்டே இருக்காங்க” என்றபடி எதிரில் வந்து அமர்ந்தார். பின்னாலேயே வந்த அவர் மகன் (அப்படித்தான் இருக்க வேண்டும் – ஐம்பது வயதிருக்கலாம்), பாட்டிக்கருகில் இன்னொரு சேரில் அமர்ந்தார். சிரித்தபடி, நானும் குழந்தைக்காகக் காத்திருந்தேன். யாரையும் காணாததால், ‘வந்துகிட்டு இருக்காங்களா?’ என்று பொதுவாகக் கேட்டு வைத்தேன்.

“யாரு?”

“குழந்தைதான்; பேஷண்ட் வருவதாகச் சொன்னீங்களே”

என்னைப் பூச்சியைப் பார்ப்பதைப் போலப் பார்த்து, காவிப் பல் தெரிய சிரித்த பாட்டி, “இவந்தான் கொழந்தை, என் ரெண்டாவது மகன்” என்றார்.

சில வீடுகளில் குழந்தை என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, பாட்டி, “பேரு சண்முவம் – என் ரெண்டாவது கொழந்தை” என்றார்.

நல்ல வேளை, ஐம்பது வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கி வராமல் இருந்தாரே – நம்ம ஊர்த் தாய்ப்பாசம் நம்மை வியக்கத்தான் வைக்கிறது!

கைக் கட்டைவிரலில் அடி பட்ட நண்பருக்குக் கட்டு போட்டபிறகு, ‘நான் ஃபுட் பால் ஆடமுடியுமா?’ என்று கேட்டார். நான் சற்று வியப்புடன், ’கையில், அதுவும் கட்டை விரலில்தானே அடி; ஃபுட் பால் தாராளமாக ஆடலாம்’ என்றேன். அவர் சிரித்தபடியே, ’ஆனா, எனக்கு ஃபுட் பால் ஆடத்தெரியாதே’ என்று ஜோக் அடித்தார். ‘ஙே’ என்று முழித்தேன்!

எதிரில் வந்து அமர்ந்து, ‘என்ன உடம்புக்கு?’ என்று கேட்டவுடன், “நீதான், பட்சிக்கிறியே, இன்னான்னு கண்டி பிடியேன்” என்று என்று சவால் விடும் அப்பாவிகளைப் பார்த்திருக்கிறேன்!

“சார் எனக்குக் கண்ணெல்லாம் எரியுது, வாய் காயுது, உடம்பெல்லாம் வலிக்குது – ‘ஜாக்ரன் ஸிண்ட்ரோம்’ ஆ இருக்கும்ன்னு நெனைக்கிறேன் (கூகிள் சாமியிடம் பாடம் கேட்டு வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!), கொஞ்சம் செக் பண்ணி சொல்றீங்களா?” என்னும் அறிவு ஜீவிகளும் வருவதுண்டு!

ஒருமுறை என் உறவினர் ஒருவர் கல்யாண ரிசப்ஷன் டின்னர் முழுவதும் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து, அவசரம் அவசரமாக சப்பாத்திக்கு மாவு பிசைந்தார். சிறிது ஆச்சரியாக நான் காரனம் கேட்க, அவர் அளித்த பதிலில் எனக்கு மயக்கமே வந்து விட்டது. “ராத்திரிலெ ரெண்டு சப்பாத்தி சாப்பிடச் சொல்லி எங்க ஃபேமிலி டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாரே பார்க்கலாம்…..

ஒரு மாதம் மருந்துகள் சாப்பிட்டு, திரும்பவும் டாக்டரிடம் ரிவ்யூ வுக்கு வந்தார் அவர்.

“எப்படி இருக்கீங்க? எல்லா மருந்தும் ஒழுங்கா சாப்பிட்டீங்களா?”
“ஒங்க புண்ணியத்துல, நல்லா இருக்கேன் டாக்டர். எக்சர்சைஸ், டயட் எல்லாம் நீங்க சொன்ன படிதான்”
“குட். அப்ப ஒங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது”
“ஆனா டாக்டர், ‘ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் மட்டும்’ – இது மட்டும் முடியலெ டாக்டர்.
“நோ, நோ… அதுக்கு மேல நாட் அலவ்ட்”
“அதில்லே டாக்டர். ஒரு சிகரெட்டே முடியலை எனக்கு. நீங்க சொன்னீங்களேன்னு ட்ரை பண்ணினேன். முடியலை டாக்டர்.”
“என்ன சொல்றீங்க நீங்க?”
“எனக்கு சிகரெட் பழக்கமே இல்லை டாக்டர்; நீங்க சொன்னீங்களேன்னு முயற்சி பண்னினேன், முடியலை”
டாக்டர்: ‘ஙே’ …

சரியாகத் தெளிவாக நோயாளியிடம் வழிமுறைகளை விவரிக்காவிட்டால் வரும் தொல்லைகளை விளக்க நான் கூறும் நிகழ்ச்சி இது. நோயுடன், நோயாளியையையும் அறிந்து கொள்வது அவசியம்!

டாக்டர்களைப் பற்றிய ஜோக்குகள் பிரபலமானவை! எப்போதும் ‘ஸ்ட்ரெஸ்’ ஸுடன் பணி புரியும் டாக்டர்களுக்கு இப்படிப்பட்ட பேஷண்டுகள் கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை தலைவலியையும் கொடுப்பார்கள் என்பது!