
அன்று பெய்த மழையில்
புது இலையாய் ஜ்வலிக்கும்
அது
பாதி பச்சையாய்
மீதி பழுப்பாய்
வீசிய காற்றில் விருப்பம்
போல்
பயணிக்க
இது வரை காணாதொரு
ஆச்சர்ய வர்ணத்தில்
அரியணையாய்
ஆனதோ
அதன் மீதமர்ந்து
பச்சை மட்டும் உண்ட,
வர்ணப்புழுவிற்கு
இரையானது
தாய்க்கா
இல்லை
குஞ்சுகளுக்கா
ஏதொரு
நிச்சயமும்
அழிந்த நிகழ்வது
இறக்கை
விரித்து
வந்த
பறவையொன்றின்
அலகு
கொத்திய
தருணம்
மீதமிருந்தது
ஒற்றைக் கேள்வி
எனை
எப்போதும்
கொத்தித்
தள்ளும்
பறவை எங்கே?

அருமை …சுரேஷ் அருமையான கவிஞர் …அவரது பல கவிதைகள் வார இதழ்களில் வெளிவரும் காலங்களில் படித்து மகிழ்ந்துள்ளேன் …அவர் கவியூரான் என்ற புனைப்பெயரிலும் எழுதிய ஞாபகம் ..அவர் இதுபோல ஊடக வெளியிலும் எழுதுவது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது ….
கவிஞர் சுரேஷின் கவிதை மொழி அலாதியானது.. எளிதில் சுட்டிக் காட்டிவிடுகிற சோகத்தை அது சொல்லிவிடாது எனினும் அதில் இழைகிற வருத்தம் உணரப்பட முடியாதது அல்ல..
ஒரு குழந்தையைப் போல எளிதில் குதூகலம் அடைகிற மழலையாக அவர் எப்போதும் இனங்காணப் பட்டாலும், அளவில் குறுகிய அழகான கவிதைகளில் மனதை எளிதில் என்னவோ செய்ய வைக்கிற கவிதைகளை எழுதுவதில் அவர் நிபுணத்துவம் அடைந்து இருக்கிறார்.
அவரை எப்பவும் கொத்திக் கொண்டு இருக்கிற பறவை பொதுவானது தான். நாம் எல்லோரும் இந்த, எளிதில் கண்டுபிடித்து விட இயலாத, பறவையின் சிறகடிப்பில் மயங்கி இருக்கிறோம்.
சுவர்க்கோழியின் ரீங்காரத்தைத் தவிர்க்க இயலாது கடந்து போகிற நாம் ஓரிரு முறை அவ்வாறு காலமெல்லாம் சப்தமெழுப்பும் உயிரினம் அல்லது அற்ற இனம் இருக்கும் சுவற்றினை அடையாளம் கண்டு கொள்ள முயலாமல் இருந்தது இல்லை. காலமெல்லாம் அதை நம்மால் கண்டடைந்து விட இயலாது. அதற்கு உரிய, அதற்குக் கூடத் தெரியாத, ஒரு பெயரை, அதற்கு அளித்ததை அன்றி நம்மால் வேறெதுவும் செய்து விட முடியவில்லை.
இந்தப் பறவைகள் முடிவற்றவை. நம் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டவை போல நமக்கு உள்ளும் புறமும் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்தக் குரல், கவிஞர் சுரேஷின் கை வண்ணத்தில் மற்றும் ஒரு கவிதையாக வடிவமைந்து இருக்கிறது.
அருமை