
சொல்லிப் பழகிய வார்த்தைகளை
இம்முறை உபயோகிக்க முடியாது
சலித்துவிட்ட நாளினை
அனுபவிக்காமல் விட்டாலும் அது நிகழ்ந்துவிடும்
தெருவில் நின்று கொண்டு
அதே வீட்டை பார்த்தால்
இம்முறை என் வசிப்பிடமென தோன்றவில்லை
வீட்டினுள் நின்று கொண்டு பார்த்தால்
தெருவில் மாற்றமில்லை
பேசாமல் அமர்ந்து கொண்டு
தெருவில் செல்லும் பழகியிராத
பெயர் அறிந்த
இன்னொருவரைப் பார்த்தாலும்
இருவருக்கிடையிலும்
பெரும் வித்தியாசம் தென்படவில்லை
நடமாட்டமில்லாத தெருவில்
நிழல்பதிக்கும் முதல் தருணமாய்
கொட்டாவியுடன் துளிர்த்தெழும்
அன்றாட விழிப்பு
ஞாயிற்றுக் கிழமையின்
முதல் தேநீர் உறிஞ்சலில் தோன்றும்
வரும்வார ஆறாம் நாளின்
பின்மாலை அசதியின் கருமையிலிருந்து
தெளியும் இந்நாளை
தாமதமாக கழிப்பதில்
அடுத்த வாரத்தை சில மணிநேரம்
ஒத்திப் போடலாம்.
