மூளையும் இதயமும்/லிடியா டேவிஸ்

தமிழில் :  க மோகனரங்கன் 

இதயம் அழுகிறது
மூளை முயல்கிறது இதயத்திற்கு உதவிட
மூளை சொல்கிறது இதயத்திடம்
இது இப்படிதான் இருக்கிறது ,
நேசிப்பவர்களை நீ திரும்பவும்
இழக்கக்கூடும்.
அவர்கள் எல்லோரும் சென்றுவிடுவார்கள்
ஏன் இந்த உலகமும்கூட ஒருநாள் மறைந்துபோகும்
இதயம் ஆறுதலாக உணர்கிறது, பிறகானால்
மூளையின் அவ் வார்த்தைகள்
இதயத்தின் காதுகளில் நெடுங்காலம்
தங்கியிருக்கவில்லை.
இதயத்திற்கு இது மிகவும் புதிது
எனக்கு அவர்கள் மீளவும் வேண்டுமென்கிறது இதயம்
இதயத்திடம் இருப்பதெல்லாம் மூளை மட்டுமே
மூளையே உதவு இதயத்திற்கு உதவு.