
சமீப காலமாக ஊடகங்களில் அடிக்கடி பயன்படுத்துகிற ஒரு வார்த்தை “கந்துவட்டி”.என் பையன் என்னிடம் கந்துவட்டி என்றால் என்னப்பா என்று கேட்டான்.கொஞ்சம் விவரமாகவே சொன்னேன்.எங்கள் ஊரில் ஒரு நபருண்டு.அவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் தோசைக்கல் மோதிரம் அணிந்திருப்பார்.கழுத்தில் பாம்புத்தண்டி செயின் சட்டைப் பட்டன் திறந்தே இருக்கும்.புல்லட் வண்டியில் இப்போது அவர் இருக்கும் கட்சியின் கொடி பறக்கும்.சரி…எப்படி தொழில் செய்கிறார் என்பதற்கு இரண்டு சம்பவங்களை சொன்னேன்.
ஒரு ஆசாரி குடும்பம்.ஒரு அவசரத்திற்காக பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்.அவரும் தருவதாக சொல்லியிருக்கிறார்.வேறு ஏதோ ஒரு வகையில் ஆசாரியாருக்கு பணம் கிடைத்து விட்டது போலும்.கடன் வாங்கவில்லை.ஆறு மாசம் கழித்து இந்த வட்டிக்காரர் ஆசாரியாரைச் சந்திக்கிறார்.
“யேல…என்ன ஆறுமாசமாச்சு ஒம்பாட்ல வட்டி குடுக்காம இருக்கே .ஒம்மனசுல என்னலே நெனச்சிருக்கே”
“ஐயா நான் பணம் வாங்கலையே.அப்புறம் எதுக்கு வட்டி”
“பணம் கேட்டையில்லே “
“பணம் பத்தாயிரம் கேட்டது வாஸ்த்தவம்.ஆனா வாங்கலியே ஐயா”
“அட..லூசுப் பயலே நீ வந்து கேட்டவுடனேயே பணத்தை எடுத்து தனியா வச்சிட்டேன்.நீ வாங்குனா என்ன வாங்காட்டா என்ன.அது ஆறு மாசமா வட்டியச் சொமந்துக்கிட்டு இருக்கு .ஒழுங்கா வட்டி 12000 கொடு.மொதல் எப்பனாலும் கொடு”
பாவம் ஆசாரியார் மூன்றே மாதத்தில் தன் சொந்த வீட்டை கந்துவட்டிக்காரரிடம் கொடுத்து விட்டு ஊரை விட்டே ஓடிவிட்டார்.
அடுத்து ஒரு சம்பவம்.
தெருவில் ஒருவர் இறந்து விட்டார்.கந்து வட்டிப் பேர்வழி இறந்தவரின் பிள்ளைகளிடம் ஒரு பெரிய தொகையை கேட்கிறார்.உங்கள் அப்பன் வாங்கிய தொகை என்று.அப்பன் கடன் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.வார்த்தை முற்றுகிறது.
“எங்கப்பன் தானே கடன் வாங்கினான்.அவனிடமே வாங்கிக் கொள்ளுங்கள்”
என்று மகன் ஒருவன் சொல்கிறான்.அவ்வளவுதான் .நான் உங்கள் அப்பனிடமே வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி இறந்தவரின் தலைமாட்டில் சேர் போட்டு அமர்ந்து கொள்கிறார் கந்து வட்டிக்காரர்.இறந்தவருடன் அடிக்கடி உரையாடுகிறார்.
“டே…..ய். மாடசாமி ரூவாயக் குடுத்திட்டு வெளிய போடா.இல்லனா வீட்டை விட்டு வெளியே போகமுடியாது பாத்துக்கோ.”
விவகாரம் போலீஸ் நிலையம் செல்கிறது.அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை சொல்ல முடியாது.குடும்பத்துடன் மண்ணை வாரி தூத்தி விட்டு தங்கள் வீட்டை கொடுத்து விட்டு போன கதை பெரிய சோகம்.
என்னுடைய “தூர்வை”நாவலில் ஒரு கந்து வட்டிக்காரி பணம் வசூல் பண்ணுகிற முறையை எழுதியிருப்பேன்.மிகச் சரியாக முற்றம் தெளிக்கிற அதிகாலை நேரத்தில் வாசலில் வந்து நிற்பாள்.
“ஏ…தேவிடியா.பலபட்ரை முண்ட ..என்ன சொல்லி ரூவா வாங்குனே.யே…தாயி எம்மக எவன் கூடப் போனாலோ வகுத்துல மூனு மாசம்.ரெண்டாம் பேருக்கு தெரியாம பிள்ளை கழிக்கணும்.இல்லனா மானம் கப்பலேறிரும்.நல்லாயிருப்ப என் மானத்தை காப்பாத்து தாயின்னு கால்ல விழுந்தியே போயி அரவமில்லாம தாயும் மகளும் பிள்ளையை கழிச்சிட்டு வந்தீகளே வாங்குன ரூவாயக் குடுக்க வலிக்குது”
. தெருவெல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்கும்.கந்துவட்டிக்காரி வீசிய அணுக்குண்டு அந்த குடும்பத்தையே சாம்பலாக்கும்.எல்லாமே பொய்.கடன் வசூல் பண்ணுகிற தந்திரங்களில் இதுவும் ஒன்று.மறுநாளே அந்தக் குடும்பம் கண்காணாத இடத்திற்கு போய்விடும்.அந்த வீட்டில் இருக்கும் குமரிப் பெண்கள் வாழ்க்கை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
இதுதான் கந்து வட்டி என்று சொல்லி முடித்தேன் பையனிடம்.இந்த மாதிரியானவர்களைப் பற்றிய பதிவுகள் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகமிகக் குறைவு.காரணம் முற்போக்கு முகாமில் இருக்கும் எழுத்தாளர்கள் வட்டிக்கு வாங்குகிற ஆட்களாக இல்லாததே காரணம்.
