அதிகமும் புறக்கணிக்கப்பட்ட கவிஞர் /செந்தில் குமார்

தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் அதிகமும் புறக்கணிக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன். குறிப்பாக நவீன இலக்கிய உலகம் பாரதிதாசனைப் பொருட்படுத்தவே இல்லை. இத்தனைக்கும் ‘மணிக்கொடி’ இதழில் எழுதிய கவிஞர் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் படைப்புகள் குறித்து ரசனை சார்ந்தோ விமர்சன ரீதியாகவோ சிறுபத்திரிகைகளில் ஒரு கட்டுரையும் படித்த நினைவில்லை.
பாரதிதாசன் அரசியலைத் தாண்டியும் அழகியல் குறித்து அதிகம் எழுதிய கவிஞர். ‘பொதிகைமலை விட்டெழுந்து’ போன்ற பல கவிதைகளில் அழகியலின் உச்சத்தை அடைந்தவர். ‘அழகின் சிரிப்பு’ என்ற அவர் தொகுப்பே உதாரணம். மரபுக்கவிஞராக இருந்தபோதும் அவருடைய ‘பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது’, ‘பாரடா உனது மானிடப்பரப்பை’ போன்ற கவிதைகளில் நேரடியான நவீன மொழியைக் காணலாம்.
தொடக்ககால புதுக்கவிதைகள் படிமத்தை அடிப்படையாகக் கொண்டவை. பாரதிதாசனின் ஒரு காதல் கவிதையில் காதலன் காதலியிடம்
‘நாயின் நாக்கு போன்று சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்’ என்பான்.
காதலியின் சிவந்த பாதத்தை வர்ணிக்கும் இந்த வரிகளைப் படிக்கும்போது மூச்சிரைக்கத் தொங்கும் நாயின் நாக்கு படிமமாய் நம் நினைவில் வரும். பாரதிதாசனின் இத்தகைய அழகியல் குறித்துகூட ஆழமான கட்டுரைகள் சிறுபத்திரிகைகளில் வந்ததில்லை.
வானம்பாடி இலக்கிய மரபுகூட பாரதியாரை உயர்த்திப் பிடித்த அளவுக்கு பாரதிதாசனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இன்று தமிழகத்தில் எந்த ஒரு ஊரிலும் பாரதி என்ற பின்னொட்டு கொண்ட நான்கு கவிஞர்களையாவது பார்க்க முடியும். ஆனால் பாரதிதாசன் ஒரு முற்போக்கு அடையாளமாகவும் மதிக்கப்படவில்லை.
சாகித்ய அகாடமியோ கவிஞரான பாரதிதாசனுக்கு அவர் நாடகமான பிசிராந்தையாருக்கு விருது அளித்தது, அதுவும் அவர் இறந்தபிறகு.
தமிழ் சினிமாக்களைச் சொல்லவே வேண்டாம். திராவிட சினிமா செல்வாக்குடன் இருந்த காலகட்டத்தில் ‘வாழ்க வாழ்கவே வளமார் எங்கள் திராவிடநாடு’, ‘துன்பம் நேர்கையில்’, ‘சங்கே முழங்கு’ போன்ற பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெற்றன. பிறகு பாரதிதாசன் பாடல்கள் பெரிதும் தமிழ் சினிமாக்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. பெண்ணியம், பெண்ணுரிமை என்றாலே பாரதியின் புதுமைப்பெண், மனதில் உறுதி வேண்டும் போன்ற வரிகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் பெண்ணியத்தில் பாரதியைத் தாண்டிச்சென்றவர் பாரதிதாசன். பாரதியின் பெண்ணியம் இந்து சனாதனப் பண்பாட்டில் சிக்கி நின்றுவிட பாரதிதாசனோ ‘காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்த கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?’ என்றார். பாரதிதாசனுக்கே வராத தமிழ்ப் ‘பெண்ணிய’ சினிமாக்கள் பெரியாரை எங்கு சென்றடைய?
ஓர் அரசியல் கவிஞராகத் தமிழ்ச்சமூகத்தின் அத்தனை பரிமாணங்களையும் முன்வைத்ததுடன் உலகு தழுவிய மானுடக்கவியாகவும் விளங்கியவர் பாரதிதாசன்.
அவரது
‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே’ என்ற வரியை முன்வைத்து, அருந்ததியர் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களைத் தமிழர்களின் எதிரிகளாக முன்வைக்கும் திராவிட எதிர்ப்பு தமிழ்த்தேசியத்துக்கு சார்பாக நிறுத்துகின்றனர். ஆனால்
‘நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
நாவெல்லாம் தேன்’ என்றவர் பாரதிதாசன். பெரியாரின் போர்வாளாய் அவரது கருத்துகளை இலக்கியத்தில் எடுத்துச்சென்றவர் பாரதிதாசன்.
மொழி, இலக்கியம், தமிழ்ப்புலவர்கள் குறித்த பெரியாரின் கருத்துகளை முன்வைத்து அவரை நிராகரிப்பவர்கள் உண்டு. ஆனால் ஒரு கவிஞராக பெரியாரின் விமர்சனங்களில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டவர் பாரதிதாசன். தமிழறிஞர்கள், இலக்கியங்கள் குறித்த பெரியாரின் நிலைப்பாடுகள் பற்றிய பாரதிதாசனின் விரிவான கருத்துகளைப் ப.திருமாவேலன் ‘இவர் தமிழர் இல்லையென்றால் வேறு எவர் தமிழர்?’ நூலில் பதிவு செய்துள்ளார்.
புரட்சிக்கவிஞரின் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு, அம்பேத்கர் குறித்த கவிதை ஆகியவை இன்று பேசப்பட வேண்டியவை.
பன்முக அடையாளங்கள் அழிக்கப்பட்டு மதவாத பாசிசமும் சாதிவெறியும் தலைதூக்கும் சூழலில் சாதி ஒழிப்பு, மொழியுரிமை, பெண்ணியம், பொதுவுடைமை, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றைப் பாடிய பாரதிதாசனை மறுவாசிப்பு செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். suguna Divagar

இவரும் பாரதியை பாரதியார் என்று மரியாதை ஒட்டு போட்டு சொல்கிறார்.
மகிழ்ச்சி.
ஆனால்,
பாரதிதாசன் என்றே சொல்கிறார்.
முதலில் பாரதிதாசனை உண்மையில் மதிப்பவர்களாவது
பாரதிதாசனார் என்று சொல்வது தானே முறையாக இருக்கும்.

இவர்கள் இருவரையும் உச்சரிக்கும் வேறுபாடு தமிழ் நவீன இலக்கிய போக்கைப் புரிந்து கொள்ள உதவும் என்பார்.