கவிஞர் பிரமிள் கட்டுரைகள்/கால சுப்ரமணியம்

               மெய் நலம் 
  திருவள்ளுவரின் மருந்து 

 'உடலுக்கு மருந்தே வேண்டாம்' என்று அடித்துச் சொல்கிறார் திருவள்ளுவர்: "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு".

  நோய் உள்ள உடலுக்கே மருந்து. நோய் இல்லாத உடலுக்கு, மருந்து அப்போதைக்கு வேண்டாம். ஆனால் வள்ளுவரின் இந்தக் குறளில், அவரது குரல் மேலும் ஒரு அழுத்தம் பெறுகிறது. 'மருந்தென வேண்டாவாம்' என்கிறபோது, 'மருந்தே வேண்டாம்' என்ற அழுத்தத்தை உணரலாம். நோய், அப்போதைக்கு இல்லாததுடன் எப்போதுமே இல்லாத நிலையில்தான், 'மருந்தே வேண்டாம்'. இப்படி எப்போதுமே, நிரந்தரமாக மருந்து தேவைப்படாத நிலை, உடலுக்கு எப்படி ஏற்படுகிறது?

  "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - அருந்தியது அற்றது போற்றி உணின்."

  'சாப்பிட்ட உணவு கழிவாக வெளியேற பின்பு மட்டுமே சாப்பிடுகிற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால், உடலுக்கு மருந்து என்று எதுவுமே வேண்டாம்.' என்பது இக்குறளின் பொருள்.

 அருந்தியது அற்றது, உட்கொண்டது இல்லாமல் ஆகிய நிலையாகிறது. உட்கொள்ளப்பட்ட பொருள் உடலில் இல்லாத நிலை; அது கழிக்கப்பட்ட பின்பே ஏற்படும். இந்நிலையைக் கடைபிடித்து, அதன் பின்பு உண்டால் -  அருந்தியது அற்றது போற்றி உணின்' -  இப்படி உண்ணும் பழக்கம் இருந்தால், மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு.

 இதன் விரிவுரை இது: "உட்கொள்ளப்பட்ட உணவு முதலில் கழிக்கப்பட வேண்டும். அதற்குப் பின்பே, அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். இந்த ஒழுக்கம் இருந்தால், உடலுக்கு மருந்து என எதுவும் தேவையில்லை; நோயே வராது. இப்படிக்கின்றி, உட்கொண்டது உடலுக்குள்ளேயே இருக்கும் போது அடுத்த உணவையும் உள்ளே அனுப்பினால், அது நோய் வருவதற்கு மூலக் காரணம் ஆகும்."

  இவ்வளவு பொருள் மண்டலமும் மேற்படி நிலையைக் குறிப்பிடும் தோரணையில், அதன் விரிவாக்கம் பொதிந்து நிற்கிறது. ஒரு காரியத்தைச் செய்யாதிருப்பவன் பலனைக் கூறும் தோரணையிலேயே, அந்தக் காரியத்தைச் செய்தால் 'என்ன பலன்' ஏற்படும் என்பதைக் கூட அர்த்தப்படுத்தி விடலாம். திருக்குறளின் சிறப்பம்சங்களுள் இது ஒன்று. மேற்படி குறலில், இந்த அம்சம் அற்புதமாக அமைந்திருக்கிறது. 

 தவறு செய்து விட்டோம்; எதைச் செய்தால் நோயே வராது என்று சொல்லப்பட்டதோ, அதைச் செய்துவிட்டோம்; ஏற்கனவே உட்கொண்டது உள்ளே இருக்கும் போதே, அடுத்த உணவை உட்கொண்டு விட்டோம்! 'இதில் என்ன பெரிய தவறு? இப்படிச் செய்தால் என்ன குடி முழுகிவிட்டது? ஆரோக்கியம், சுறுசுறுப்பு எல்லாம் தொடர்ந்து எங்களுக்கு இருந்து கொண்டுதானே இருக்கின்றன?' இப்படி எதிர்வாதங்கள் கிளம்புகின்றன. 

 மேலும், ஒவ்வொரு வேளை உணவுக்கும் பிறகு, நாம் கழிவறைக்குப் போய்க்கொண்டிருப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான், உண்ட உணவை நாம் கழிக்கிறோம் (இந்த ஒழுக்கம் கூட இல்லாதவர்கள் இருக்கிறார்கள்).

 திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி, அபிப்ராய போதங்கள் உண்டு. இரண்டாயிர வருஷங்களுக்கு முன் என்ற பார்வை பரவலானது. இது எப்படி இருந்தாலும், 'ஒரு பழைய கருத்துதான் திருவள்ளுவருடையது.  அடுத்த உணவுக்கு முன்பு முந்திய உணவைக் கழிப்பது அசாத்தியம்' என்று, ஆட்சேபணை எழுப்பலாம். சரியானது என்று தான் அவதானங்களை  அடிப்படையாகக் கொண்ட அறிவியல் கூறுகிறது 

 இதற்கு வருமுன், உண்டது எவ்வளவு காலம் உடலினுள் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

  வயிற்றுப்பையை உணவு அடைந்ததும், அங்கே அது உணவுக் கூழாக மாற்றப்படுகிறது. இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அடுத்து, சிறுகுடலில் ஜீரணம், செரிமானம் நடக்கிற காலம், மூன்று மணி. மிஞ்சிய சக்கை வெளியே அனுப்பப்படுகிறது. பெருங்குடலினுள் 12 மணி நேரம். ஆக 1+3+ 12 =16 மணி நேரம். உணவு கொள்ளப்பட்டதுக்கு, 16 மணி நேரத்துக்குப் பின்பே அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். இதில் கூட, ஒரு எட்டு மணி நேர இடைவெளியை விடலாம். அப்படி இடைவெளி விட்டால், 24 மணி நேரம் ஆகிறது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்ண வேண்டிய நிலை இது 

  "ஒரு வேளை உண்பவன் யோகி".

   'யோகி' என்றால் யோகாசனம் செய்கிறவனோ தவம் செய்கிறவனோ அல்ல; 'சேர்ந்திருப்பவன்'. இயற்கையுடன் 'சேர்ந்திருப்பவன்' என்றே, இந்த இடத்தில் பொருள் காணவேண்டும். ஒருவேளை மட்டும் உண்டு பழகினால், அதன் அடிப்படை, 'அருந்தியது அற்றது போற்றி' இருக்க வேண்டும். அருந்தியது அற்றாவதற்கு, சுமார் 16 மணி நேரம். அதற்கு மேல், 8மணி நேர இடைவேளை. மொத்தம் 24 மணி நேரம். இப்படிப் பார்த்தால், 

   "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு -  அருந்தியது அற்றது போற்றி உணின்."

   இந்தத் திருக்குறளுக்கு, அதன் விரிவுரை மண்டலங்களுக்குச் சமமான கருத்துத்தான்,

  " ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூவேளை உண்பவன் ரோகி."

     திருக்குறளில் சுருக்கமாக, உள்ளர்த்தங்களைக் கொண்டு சொல்லப்பட்டதன் விரிவாக்கமே, பிந்திய வாக்கியம். ஆனால் இப்படி ஏன் உண்ண வேண்டும் என்ற காரணத்தை திருக்குறளில் காணலாம். பிந்திய வாக்கியத்தில் அது இல்லை. அதுதான், 'அருந்தியது அற்றது போற்றல்' - உட்கொண்டதை வெளியேற்றுதல். இப்படி வெளியேற்றப்படும் முன்பே உண்பவர்கள் தான் போகியும் ரோகியும் - ருசிக்காக உண்கிறவனும் வியாதியாளனாக மாறிவிட்டவனும்.

 திருவள்ளுவரின் மேற்படி கூற்றும் 'யாரோ' தந்த மேற்படி வாக்கியமும், இன்றைய அறிவியலின் படி மிகவும் சரியானவை; மறுக்க முடியாதவை. இரண்டு கூற்றுக்களுடன், அறிவியல் அவதானத்தையும் சேர்த்து மேலே சொல்வோம்.

  உடலிலுள்ள கழிவுப் பொருளாக மாறிய உணவு, பெருங்குடலில் மூன்று பகுதிகளைக் கடந்தே வெளியேறுகிறது. உண்டது செரிமானமாக நான்கு மணி நேரம், பெருங்குடலின் இரண்டு பகுதிகளையும் கடந்து மூன்றாம் பகுதியை அடைய எட்டு மணி நேரம்; ஆக 4+8=12 மணி நேரங்கள்.

 ஏற்கனவே, 24 மணி நேரத்தில், ஒரு வேளை உண்ணும் யோகியை சந்தித்து விட்டோம். அவன் பெருங்குடலையும் விட்டுச் சக்கையாகிவிட்ட கழிவு வெளியேறிய 16 மணி நேரத்திற்குப் பின்பும், 8 மணி நேரம் பொறுத்திருந்து உண்பவன். இவனே, இயற்கையுடன் ஒன்றிய யோகி.

  உணவு உட்கொண்ட 12 வது மணி நேரத்தில், அதாவது 24 மணி நேரத்தினுள் இரண்டு வேளை உண்பவன் போகி. ருசிக்காக உண்ணும் இவன், உணவில் இன்பம் தேடி உண்பவன். இவன், இயற்கையிலிருந்து பிரிந்துவிட்டவன். இவனுடைய நிலையிலேயே, பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஏனெனில், இன்னும் கழிவு அகற்றும் வேலை நிறைவேறாத சமயத்தில், இவன் அடுத்த உணவையும் உட்கொள்கிறான். இதனாலேயே இவன் போகி.

  இவனையே, 'களிபேறிரையான்' என்கிறார் திருவள்ளுவர், இன்னொரு குறளில். 'களிபேறு' என்றால், இன்பத்தைப் பெறல்; 'களிபேறிரையான்'  இன்பத்தைப் பெறுவதற்காக உண்பவன்.

                         -தொடரும்....

[11:28 am, 02/07/2022] +91 99429 77813: கவிஞர் பிரமிள் கட்டுரைகள்:

              மெய் நலம்        
  திருவள்ளுவரின் மருந்து        
               தொடர்ச்சி 
               --------------------

 'யோகி' என்றால், 'இணைந்தவன்'. 'போகி' என்றால் 'அநுபவிப்பவன்'. இன்பத்தை மட்டுமல்ல, துன்பத்தை அநுபவிப்பவன் போகி தான். அதுவே அகராதிப் பொருள். ஆனால் இன்பத்தை அநுபவிப்பவனை மட்டுமே நாம் 'போகி' என்கிறோம். இன்பம், துன்பத்துக்கே இட்டுச்செல்லும். "களிபேறிரையான்  கண் நோய் நிற்கும்," என்கிறார் திருவள்ளுவர். இங்கே களிபேறு -  அதாவது இன்பம் - துன்பமாகிவிடும் ஆபத்து உணர்த்தப்படுகிறது. இது, முதல் உணவை உட்கொண்ட 12-வது மணி நேரத்தில் - அதாவது கழிவு, பெருங்குடலில் மூன்றாம் பகுதியினுள் செல்லும் சமயத்தில், உணவு உட்கொள்பவனின் நிலை. கழிவு அகற்றப்படுவதற்கு நான்கு மணி நேரம் உள்ள நிலை இது.

 மூவேளை உண்பவன் ரோகி - ஒவ்வொரு ஐந்து மணி நேரமும் இவன் உண்கிறான். முதல் உண்டது, பெருங்குடலின் முதல் பகுதியிலிருந்து இரண்டாவது பகுதிக்குள் போகும் சமயம் இது. உண்டது முழுவதும் வெளியேற, இன்னும் ஐந்து மணி நேரம் இருக்கிறது. இந்நிலையில் உண்டால் என்ன ஆகும் என்பதையே, 'ரோகி' என்ற பதம் குறிக்கிறது.

 'யோகி' என்றால், 'இணைந்தவன்'. 'போகி' என்றால், இன்பத்தை அநுபவிக்க நாடி, துன்பத்தை 'அநுபவிப்பவன்'. 'ரோகி' என்றால்?  'ரோகி' என்றால், நோயாளி என்றே பொதுவாய்ப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நோய் எப்படி வருகிறது என்பதையும், 'ரோகி' என்ற பதம் உணர்த்துகிறது. உறுதி உடைதல் என்பதே ரோகம். யோகத்தில் ஏற்படும் இணைப்பு நிலை - உறுதி. இதனையே 'கல்பம்' என்கிறோம். இந்த உறுதி உடையும் நிலை, 'ரோகம்'. உடைந்தால் பிரிவினை ஏற்படுகிறது. மனிதனை உருவாக்கி ஊட்டி வளர்க்கும் இயற்கையிலிருந்து மனிதன் உடைபட்டு, பிரிந்து நிற்கிறான்  அவனையே, ரோகி-  நோயாளி - என்று அழைக்கிறோம். 

 இவ்வளவு பழைய இந்திய -  தமிழ் பாரம்பரியக் கருத்தையும் அறிவியல் அவதானத்தையும் இணைத்துச் சொல்லப்பட்டது. இருந்தும்கூட, உணவு கொடுக்கப்படாத நிலையில் அடுத்த உணவை உட்கொள்வது, எப்படி இன்பத்திலிருந்து துன்பத்துக்கு இட்டுச் செல்லும்? எப்படி உறுதியை உடைக்கும்? இதை இங்கே பார்ப்போம். 

 உணவின் ஜீரணமும் கழிவும், ஒரே இயக்கத்தின் இரண்டு வேலைகள். இந்த இயக்கம், ஒரு சமயத்தில் ஒரு வேலை மட்டும் செய்யும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. உடல், கழிவு வேலையைச் செய்த பின்பே, ஜீரண வேலைக்குத் தயாராக இருக்கும். இதனைப் பற்றிய அறிவுப் பின்னணியை, "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்ற திருக்குறளில் கண்டோம்.

 அருந்தியது அற்றதாகாமல் உள்ள நிலையில், அடுத்த உணவை உட்கொண்டால் உடலின் இயக்கம், கழிவு வேலையை அரைகுறையாக நிறுத்திவிட்டு ஜீரணவேலைக்குத் திரும்பிவிடும். கழிக்கப்படாத சக்கை, உடலில் ஊற ஆரம்பிக்கிறது. உணவாக உட்கொள்ளப்பட்டது, விஷமாக மாறுகிறது.

  ஒருவேளை உண்பது தான் இதற்கு விடுவிப்பு என்று நாம் சொல்லவில்லை. திருவள்ளுவர் வேறு ஒரு விடுவிப்பையும் தந்திருக்கிறார். அதுதான், 'இழிவறிந்து உண்ணல்.'

 "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் களிபேறிரையான் கண் நோய்." 

 எதை எல்லாம் உண்ணக் கூடாது என்று அறிந்து, அவற்றை விலக்கி, உண்ண வேண்டியதை மட்டும் உண்பவனிடத்தில், ஆரோக்யம்  நிலைநிற்கும். இதேபோல் உணவின்பத்துக்காக மட்டும் உண்ணக் கூடாததை உண்பவனிடத்தில், நோய் நிற்கும்," என்பது இதன் பொருள்.

 உண்ட வேண்டியது இன்னதுதான் என்று தேர்வு செய்யும் போது, உடல் என்ன விதமான உணவைத் தேர்வு செய்ய வேண்டும்? கழிவகற்றல் நடைபெறாவிட்டால், நாம் தேர்ந்து கொள்ள வேண்டிய உணவுகள் வெகு சீக்கிரத்தில் ஜீரணமாகக் கூடியவை ஆக இருத்தல் வேண்டும். இந்த குணங்கள் அற்ற, கடினமான உணவுகளை விலக்க வேண்டும். 24 மணி நேரத்தில், ஒரு வேளைக்கு அதிகமாக உண்போருக்கு, இந்தக் குறளில் ஒரு விடுவிப்பு உண்டு என்றால், அது இதுதான்.

 'மருந்து' என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவரது காலத்திலேயே உயர்தர உணவு ஒழுக்கம் ஒன்று இருந்தவை நமக்குப் பறைசாற்றுகின்றன. இந்த ஒழுக்கம், இயற்கையை மதித்து அதன் இயக்கத்தோடு இணையும் இயக்கம்.

 ஆனால் அதில் இன்னொரு பிரச்சனை. திருவள்ளுவரும் அதனை அறிவியலும் சொல்கிறபடி நாம் உணவை உட்கொண்டால் பசி ஆறாது.     24 மணி நேரத்திற்கு ஒரு தடவை உண்டாலும் சரி, இலகுவாகச் செரிமானம் ஆகக்கூடியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வேளைகள் சாப்பிட்டாலும் சரி, பசி என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு விடுவிப்பு ஒன்றுண்டு. அது, இதற்கு விடுவிப்பு வேண்டவே வேண்டாம் என்பதுதான். அதாவது பசியைப் பூரணமாக அடக்குவதற்காக உணவு கொள்ளக்கூடாது; பசி இருக்கிறது என்றால், உடலில் கழிவகற்றல் பணி தீவிரமாக செயல்படுகிறது என்றாகும்.

 ' பசித்திரு' என்றார் வள்ளலார் ராமலிங்கம். இறைமைப்பசி, அறிவுப்பசி, காதல்பசி, உணவுப்பசி, காமப்பசி - உணவுப்பசியையும் காமப்பசியையும் எளிதாகத் தீர்த்துவிடலாம். இவற்றை எளிதாக தீர்த்துக்கட்டிவிட்டால், காதல்பசி இருக்காது; அறிவுப்பசி பிறக்காது; இறைமைப்பசி தோன்றாது. இதனாலேயே வள்ளலார், சூத்திரமாகச் சூன்யசம்பாஷணை முறையில், 'பசித்திரு' என்றார்.

  இழிவறிந்து, அருந்தியது அற்றதான பின்பு உண்டால், பசித்திருக்கும் உயர்நிலை இருக்கும். ஒரு ஆழ்ந்த, உறுதி கொண்ட உந்நத சமூகம் பிறக்கும்.


                     லயம், ஜூலை 1998.

[11:24 am, 03/07/2022] +91 99429 77813: கவிஞர் பிரமிள் கவிதைகள் :

          உள்த் தகவல் 

முதலில் சுருங்கி
மஹிஷ முகமாகியது
மனித இதயம்.

பிறகு விரிந்த
அதனுள் கிளர்ந்த
மூவிலைத் தளிராய்
மலர்ந்தன முட்கள்.

வினாடித்துளி அறுபது
சேர்ந்து நிமிஷத்துள்
மூவாயிரத் தறுபதாய்
பெருகி மணிக்குள்
பிரவஹித்தது உதிரம்.

பௌர்ணமிக் கடிகார
இலைகளில் இருளும்
வெள்ளியும் பதற
‘வயது நூற்றெட்டு எனக்கு’
என்றது மரநிழல் !

அதன் வலைவழிகளில்
‘த்சொ த்சொ’
என்று துடித்தது ரத்தம்.

இதயத்துக் கால்வாய்
உள்வெளியாய்
உதிரத்தை விழுங்கி
உமிழும் துடிப்பில்
நிலவு பெருகப் பெருகி
வடிய வருகிறது கடல்.

கரையின் ஈரம்
கண்ணாடியாய் நிலைத்த
ஒரு நிமிஷத்துக்குள்
பிரதிபலித்த
நிலவின் மேல்கிடக்கும்
மீன்கள் மூன்றும்
மூச்சிலே காலத்தைக்
கவ்விப் பிடிக்க
வாய் பிளந்து
துடிதுடிக்கின்றன.

துடிப்பற்று நிற்கிறது
இக்கணம்.
நடிக்கிறது அதில்
காலாதீதம்.

(1996 )
லயம், ஜூலை 1998.

கவிஞர் பிரமிள் கவிதைகள்:

  காலமுகம் : ஸ்ரீலங்கா ஜூலை 1983 

ஆகாயப் பாதைகளின்
முச்சந்தி நிலையத்தில்
ஐரோப்பிய அரசுகளின்
தூதுவர் இருவர் –
கைகுலுக்கல் –
பல்தெரியாப் புன்னகைகள் –
பரஸ்பரத்தை விசாரிக்கும்
உச்சகட்ட நாகரிக
உயிரின்மை.
இத்தனையும் ராஜ
தந்திரத்தின் சரக்கூடம்.
ஊடே பறந்துவந்து
உயிரில் தைத்து
எரிகிறது இன்று
காலமுக அக்கினியை
தாங்கிவரும் செய்திஒன்று.
இருவரின் கண்களிலும்
மானுடத்தின் தத்தளிப்பு.
தந்திரத்தின் தடங்களிலே
தேய்ந்து உயிரிழந்த
சொல்லின் பருப்பொருளாய்
சொற்களையும் பற்களையும்
சிதறடித்த
சிறுதாதுத் திடுக்கீடு!
சுவடுபிறழ்ந்து,
மாறியது பரிமாணம்.
சரித்திர வெளியில்
சந்தித்து நின்றன
ராஜதந்திரிகளின் கபாலங்கள்:

‘உன் மொழியில்
நான் மனிதன்
என் மொழியில்
நீ மனிதன்.
எல்லா மதங்களுக்கும்
உயிர்மீது பெருநேசம்.
உனக்கும் எனக்கும்
ஒருமித்த மூதாதைத்
தர்சிகளில் பார்வையிலே
நான் நீ என்றெழுந்த
முகமூடிப் பட்டங்கள்
அடையாளம் ஏதுமற்ற
அந்தரத்தில் தான் ஆடும்.
இருந்தும் எரிகிறது
காலத்தில் ரஸ்தாவில்
புகைமடியாத் தேதிஒன்று
என்னை நீ
சின்னாபின்ன மிட்ட
ஸ்ரீலங்கா ஜூலை 1983.
சரித்திரக் கருவினுள்
சந்திர கலசத்தைக்
குதறிய ஒன்பது
ஓநாய்த் தினங்கள்’.
மறுகணம் –
பிறழ்ந்த வெளிதிரும்ப
மறைந்த உதடுகள்
இறுகித் தோன்றி
உதிர்கின்றன
உபயோகம் ஏதுமற்ற
சொற்கள், அவற்றில்
அரசாங்க முத்திரை
பதிக்கிறது புன்னகை.
அதே கணம் –
ராஜீயக் கடப்பாறைத்
தாக்குதலில் எங்கோ
வீறிடுகிறது ஒர்
சின்னஞ்சிறு குழந்தை
அதன் உதிரவெளி
மானுட இரவாகி
உலகை மூடுகிறது.
மரணத்தை மீறி
உதிக்கிறது அங்கு ஒரு
அணையாத சுடர்.

                                  (ஜூன் 1985). 
     லயம், ஜனவரி - மார்ச் 1986.