
கண்ணாடியில் பார்த்துக்கொள்கிற முகம்
எப்போதும் என் முகமாகவே இருக்கிறது
எங்கோ போகும் பாவனை காட்டி
திடீரெனத் திரும்பி அதைப் பார்த்தாலும்
அது அசந்திருக்கும்போது மெல்ல
எட்டிப் பார்த்தாலும்
அலட்டிக்கொள்ளாமல் என் முகத்தையே
காட்டுகிறது கண்ணாடி
என் முகம் அதில் முன்பே பதிந்திருப்பது போல
கண்ணாடிக்கு ஓய்வொழிச்சலே இல்லை
இதுவரை என் மூஞ்சியை
அது சுமாராகக்கூடக் காட்டியதில்லை
கண்ணாடியே, நீ ஒன்றும்
என் புகைப்படம் இல்லையே
நான் பார்க்கிறேன் என்பதற்காக
என் முகத்தையே காட்டுவதேன்?
மற்றவர்கள் பார்க்கும்போது மட்டும்
நீ என் முகத்தையா காட்டுகிறாய்?
