சுவரில் ஒலிக்கும் ரீங்காரம்
தேடினும் காணா சுவர்க்கோழி
யாரோ இட்ட தன்பெயரை
எதற்கென எண்ணிக் கலையாமல்
சப்தமெழுப்பும் செயல் ஒன்றை
கடமையாய்ப்
பயிலும்
த்யானம் போல்
இறையின் இருப்பு புரியாது
உணரும் உணரா தருணமிது
வருத்தம் சோகம் கவலையென
வாழ்வின் சுவரில் ரீங்காரம்
சுவரைக் கடக்கும் நேரத்தில்
புலன்கள் குவித்துப் பார்த்தாலும்
அகல்வதும் உழல்வதும் தேடலது
அவரவர் அகந்தையின்
அனுபவம் போல்
ஒலியில் ஒளியும் மாயமான்
வேட்டை ஒன்றே விளையாட்டு
வாழ்வை நகர்த்தும் சிறுகூத்து

ஒரு நல்ல படைப்பு பல படைப்புகளைத் தூண்டும் என்பதற்கு இது ஒரு உதாகரணம்.. சுரேஷ் எழுதிய ‘அதனதன் போக்கில்’ எனும் அபூர்வக் கவிதை…(https://daily.navinavirutcham.in/?p=8802) . அதற்கு கணேசராமனின் பின்னூட்டம் பல அடுக்குகளைக் கொண்ட பல ஜன்னல்களைத் திறக்கிற வல்லமை கொண்டது.. இவைகளின் பாதிப்பில் சட்டென்று வந்த வார்த்தைகளின் கோர்வைதான் இந்தக் கவிதை … நன்றி சுரேஷ், கணேஷ்..