
எனக்கு உறவு விட்டே
எங்கும் செல்லும் எண்ணம்
கனக்கும் என்ப தாலே
கடினம் துறவு வாழ்க்கை !
தினத்தில் கோடி ஆசை
திசைகள் தோறும் ஓடும்
மனத்தின் அடிமை என்னுள்
மௌனம் என்று கூடும்?
ஒன்றில் வைத்த பற்று
உடனே கிடைக்க வேண்டி
நன்றி மறந்து நாளும்
நான்செய் காரி யங்கள்
பன்றி சாக்க டைக்குள்
பழத்தைத் தேடும் வேட்டை
என்ற நிலையில் உள்ளேன்
எனக்குள் திருப்பம் என்றோ?
வண்ணப் பூச்சி யாக
வட்டம் அடித்து நித்தம்
எண்ணம் போலச் சுற்றி
இருக்கும் பொழுதை வீணாய்
மண்ணில் கழிப்ப தற்கா
வந்தேன் என்று நானும்
கண்ணீர் சிந்திக் கேட்டேன்
கடவுள் மௌன மானான்.
(06.07.2022 07.25 am)

புழுதியில் வீணையா என்ற கேள்விக்கு இறைவன் ஏன் மௌனமானான்..? அல்லது நீங்கள் சொல்லும் மௌனம் சித்தியா? நன்றக உள்ளது..