அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு/Bharathan Venkat 

The greatest happiness in the world is to make others happy.

ஒரு தந்தையும் அவரது மகனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதை ஓரமாக இருந்த ஒரு புதருக்கருகில் மறைவாக ஒரு ஜோடி செருப்புகள் இருந்தன.

அந்தச் செருப்புகளைப் பார்த்து விட்ட அந்த குறும்புக்கார மகன், புதர் அருகே சென்று, செருப்புக்கு உரியவர் பக்கத்தில் இருக்கிறாரா என்று சுற்றிலும் பார்த்தான். தூரத்தில் வயலில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

உடனே அந்தச் சிறுவன் அந்த இரு செருப்புகளை எடுத்துக் கொண்டு போய் தூரத்தில் இருக்கும் இன்னொரு புதருக்குப் பக்கத்தில் மறைத்து வைத்தான்.

அதைக் கவனித்த அவன் தந்தை, ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டார்.

“அந்த ஆள் வந்து செருப்பைத் தேடித் தேடி நொந்து போவார். அது தமாஷாக இருக்கும் அப்பா!” என்றான்.

“உடனடியாக அந்தச் செருப்புகளைக் கொண்டு வந்து, அவை இருந்த இடத்திலேயே வை” என்று கோபத்துடன் கர்ஜித்தார். அவனும் பயந்து சொன்னபடி செய்தான்.

பிறகு மகனை கனிவுடன் அருகில் அழைத்து, இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை அவன் கையில் கொடுத்து,

“இவற்றை அந்தச் செருப்புகளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு வா” என்றார். அவனும் அவ்வாறே செய்தான்.

பிறகு நடந்து கொண்டே அவர், “மகனே அடுத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி மகிழ்வது சரியான செயலா? இதே போல் அடுத்தவர் உன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி மகிழ்ச்சி அடைந்தால் அது உனக்குப் பிடிக்குமா? அந்த உழைப்பாளி வேர்க்க விறுவிறுக்கப் பணி முடிந்து வந்து பார்க்கையில் தன் செருப்பைத் காணவில்லை என்றால் அவர் மனம் என்ன பாடுபடும் என்பதை எண்ணிப்பார். அதே உழைப்பாளி தன் செருப்புகளுக்குப் பக்கத்தில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களைக் கண்டால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்? அடுத்தவர்களுடைய அந்த எதிர்பாராத மகிழ்ச்சியை நினைத்துப் பார். அந்த மகிழ்ச்சியையும் நம்மால் தான் அடைகிறார் என்பதையும் நினைத்துப் பார்! அது உன் மனதுக்கு எவ்வளவு இனிமையைக் கொடுக்கும் என்பது உனக்குத் தெரியாது. கொடுத்துப் பார், மகனே!அதற்கு ஈடு இணை எதுவுமில்லை” என்றார்.

ஒரு கணம் தன் தந்தையையே உற்றுப் பார்த்த அந்தச் சிறுவன் அந்தச் செருப்புகளை நோக்கி திரும்பி ஓடினான். சற்று நேரத்தில் அவன் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து ஓடி வந்தான். அவன் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்!

“எதற்காக அங்கு ஓடினாய் மகனே?”

“இல்லை அப்பா அந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து விடாமல் இருக்க அவற்றின் மேல் ஒரு கல்லை வைத்து விட்டு வந்தேன்”

May be an image of 2 people, child, people standing, grass and tree