
O
யோகி ஆஸ்ரம கட்டுமான நாட்களில் அங்கு பணியாற்றிய திரு சரவணன் அவர்கள் யோகி வெளியே அமர்ந்திருக்கும் போது அவருக்கு குடை பிடிக்கும் சேவையும் செய்து வந்தவர்.
O
யோகியின் சிலை பிரதிஷ்டையை யோகியின் ஆணைப்படி ஒரு இரவுக்குள் செய்து முடித்தவர். தினமும் யோகியின் அந்த சிலையை வணங்கியே தமது பணிகளை செய்து வந்தவர்.
O
ஒருநாள் அவருக்கு ஆயிரம் ரூபாய் அவசரமாகத் தேவைப்பட்டது. யோகியின் சிலைமுன் சென்று காலை வணங்கும் போது, சுவாமி ரூபாய் ஆயிரம் அத்யாவசியமாகத் தேவைப்படுகிறது. உதவுங்கள் சுவாமி என்று பிரார்த்தனை செய்து விட்டு, தமது பணிகளை கவனிக்கச் சென்றார்.
O
அன்று மாலை வழக்கம்போல் யோகிக்கு குடை பிடிக்கும் சேவையில் இருந்தார். அப்போது ஒரு பக்தர் யோகியை தரிசிக்க வந்தார். அவருக்கு யோகி அருளால் புதிய வேலை கிடைத்துள்ளது. அதற்கு நன்றி கூறி, முதல் மாதச் சம்பளம் வாங்கியதும் யோகிக்கு நன்றி காணிக்கை செலுத்துவதாக, யோகியின் திருவடிகளில் ஒரு கவரை வைத்துவிட்டு விழுந்து வணங்கினார். யோகி அவரை ஆசிர்வதித்து பழங்கள் கொடுத்து வழியனுப்பினார்.
O
சிறிது நேரம் சென்றதும் குடை பிடித்துக் கொண்டிருந்த சரவணனிடம் தமது காலருகே இருந்த கவரை எடுக்குமாறு யோகி சைகை காட்டியுள்ளார்.
குடை பிடித்துக் கொண்டிருந்த அவருக்கு குனிந்து கவரை எடுக்க முடியாது தயங்கி இருக்கிறார்.
O
யோகி ” பரவாயில்லை, குடையை கீழே வைத்து விட்டு கவரை எடுப்போம் ” என்று பணித்துள்ளார். யோகி கூறியபடி இவர் கவரை எடுத்து யோகியிடம் கொடுக்க நீட்டியுள்ளார். ” அதில் எவ்வளவு ரூபாய் இருக்கிறது Count it please ” என்று யோகி பணித்துள்ளார். புதிய சலவை நோட்.. சரவணன் எண்ணிப் பார்த்து ரூபாய் மூவாயிரம் என்றுள்ளார்.
O
ரூபாய் ஆயிரத்தை சரவணன் எடுத்துக் கொண்டு மீதியை கவரில் வைத்து அருகிலுள்ள தட்டில் வைக்கச் சொல்லியுள்ளார். சரவணன் ஆடிப் போய்விட்டார். காலையில் யோகி சிலைமுன் வைத்த பிரார்த்தனைக்கு மாலையில் நிறைவேற்றிக் கொடுக்கும் அவது கருணையை நினைத்து கண்ணீர் சிந்தினார்
O
திருவண்ணாமலை யோகி ஆஸ்ரமத்தில் நிற்பது வெறும் சிலையல்ல. அது சாட்சாத் யோகியே என்பதே நிஜம். அங்கு பிரார்த்தனை வைத்தால், தேவையறிந்து உதவும் தெய்வமாக யோகி திகழ்கிறார்
என்பதே சரவணன் போன்றோரின் எளிய திடமான நம்பிக்கை.
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா
