
மீள முடியாது என அறிந்தும்
இந்தக் கடலலைகள்
தினமும் முயற்சி செய்கின்றன.
கடற்கரையின் ரகசியங்கள்
அனைத்தையும் அறிந்ததால்
ஓவெனச் சத்தமிடுகின்றன.
தம் மீது ஆசைப்பட்டு
நனைத்துக் கொள்ளவரும்
பிஞ்சுப் பாதங்களை
முத்தமிடுகின்றன.
தினம்தோறும் வந்து பேசும்
காதலர்க்கு எல்லாம்
தித்திக்கும் வாழ்வமைய
வேண்டுகின்றன தம் ஒலியால்.
பலபேர்க்கு வாழ்வளித்தாலும்
பரிதாபப்படுகின்றன
சுண்டல் விற்கும்
ஏழைச் சிறுவனைப் பார்த்து.
அவை பேசுவதெல்லாம்
ஆடு தோணிகளோடும்
அழகு மீன்களோடும்தான்,
ஆமாம் நாம் போகாத
அர்த்த ராத்திரியில்தான்
அவை பேசிக்கொண்டிருக்கும்.
