வன்முறை பற்றி...
கேள்வி: உங்களை வன்முறை கொண்டு யாரேனும் தாக்கினால், என்ன செய்வீர்கள்?
கிருஷ்ணமூர்த்தி : உங்களை, அல்லது உங்கள் முன்னாடி வைத்து உங்கள் சகோதரியை, யாரேனும் வன்முறை கொண்டு தாக்கினால் என்ன செய்வீர்கள்? நான் திருப்பித் தாக்குவேனா? கராத்தே அடி கொடுப்பேனா? கராத்தே என்பதன் உண்மையான பொருள், ‘நான் அற்ற நிலை’. இதனை, ஒரு அன்பர் எனக்கு விளக்கி இருக்கிறார். அடிப்படையில், தற்காப்புக்கான போர்க்கலை அல்ல கராத்தே. இது ஒரு புறம் இருக்கட்டும். உங்கள் முன்னாடி உங்கள் சகோதரி தாக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயமாக, உங்களது இயற்கையுணர்வு அப்போது செயல்படும்; திருப்பித் தாக்குவீர்கள் – கராத்தே அல்லது யோகவித்தை அல்லது ஏதும் ஒரு விதத்தில். இது, இயற்கையான விஷயம். நான் என்ன செய்வேன் என்பது கேள்வி. அத்தகைய நிலையில் ஒருவர் செயல்படும் விதம், அவரது வாழ்க்கை முறையினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. வன்முறை மயமான வாழ்வு, வன்முறையாகவே செயல்படும். எனது வாழ்வு வன்முறையை ஆதாரமாகக் கொண்டதல்ல. இரண்டு சமயங்களில் மட்டும், நான் பொறுமை இழந்திருக்கிறேன். அவை, நடந்திருக்கக் கூடிய இயற்கை நிலைகள். மற்றபடி, எனது வாழ்வில் வன்முறை இல்லை. வன்முறை அற்ற இந்த வாழ்வு தான், வன்முறை சம்பந்தப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில் செயல்படும்.
(சானன் - சுவிட்சர்லாந்து, 'கேள்வி-பதில்', 1985 )
திசைநான்கு, 1989.
(பிரமிள் நூலகம் 8/7/22 பதிவிலிருந்து……)
கால சுப்பிரமணியம் முக நூலிலிருந்து
