சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! /முரளி சீத்தாராமன்

சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! அது இப்படி ஒரு மனிதனைக் கட்டிப் போடுமா?

செஸ் – சதுரங்க விளையாட்டை இப்படி சிலாகித்து- அதே நேரம் விறுவிறுப்பாக இப்படி ஒரு புத்தகம் நான் படித்ததில்லை!

முதல் பாகம் – ஒரு “மந்தமான” பையனைப் பற்றியது! அந்தப் பையனின் தகப்பனார் ஒரு மீனவர் – ஒருநாள் புயல் அவரைக் கடலுக்குள் வாரி சுருட்டிக் கொண்டது! அனாதரவாக நின்ற இந்த “மந்த புத்தி” பையனை அந்தச் சிற்றூரின் சர்ச் பாதிரியார் ஆதரவு தந்து வளர்க்கிறார்!

மந்தமான புத்தி என்றால் அப்படி ஒரு மந்தபுத்தி அவனுக்கு! பத்து வயதான பிறகும் தன் பெயரையே மெல்ல எழுத்துக் கூட்டிப் படிக்கவே நேரமாகும் அவனுக்கு! அவ்வளவு டல்! யாரிடமும் பழக மாட்டான் – தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட மாட்டான்!

ஆனால் பாதிரியார் இட்ட வேலைகளை – சர்ச்சை சுத்தம் செய்வது, சமையலறையில் பொருள்களை ஒழுங்குபடுத்துவது எல்லாம் பிசிறில்லாமல் செய்வான்!

பாதிரியார் தினமும் மாலை வேளைகளில் உள்ளூர் நண்பர் ஒருவரோடு செஸ் விளையாடுவார் – அதைப் பாதிரியார் தோளில் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் அந்த “மந்த” பையனின் ஓரே Activity!

ஒருநாள் மாலை ஆட்டத்தினிடையே பாதிரியாருக்கு அவசர அழைப்பு – ஊரில் யாரோ மரணம் – இவர் போய் FUNERAL SERVICE செய்ய வேண்டும் – பாதிரியார் பாதி ஆட்டத்தில் வெளியே போய்விடுவார்! இவன் மீதி ஆட்டத்தை ஆடி – பாதிரியாரின் நண்பரைத் தோற்கடித்து விடுவான்!

மறுநாள் இதைக் கேள்விப்பட்ட பாதிரியாருக்கு மிகுந்த வியப்பு – இவனா? தன் பெயரை எழுதிப் படிக்கவே தடுமாறும் இவனிடம் இப்படி ஒரு திறமையா? வியந்து போவார்!

அவனை உள்ளூர் செஸ் க்ளப்புக்கு அழைத்துப் போவார் பாதிரியார்! அந்த ஊரிலேயே சிறந்த செஸ் ஆட்டக்காரனுடன் இந்தப் பையனை ஆட வைப்பார்! 3 ஆட்டங்கள். ஒன்றில் தோல்வி – அடுத்தது டிரா – அடுத்ததில் வெற்றி என்று அசத்துவான் பையன்!

பிறகென்ன – குறுகிய காலத்திலேயே பெரிய பெரிய சாம்பியன்களை எல்லாம் தோற்கடிப்பான் – பதினெட்டு வயதில் “க்ராண்ட் மாஸ்டர்” ஆகிவிடுவான்!

ஆனால் அவனது ஒரே களம் – 64 கட்டங்கள் கொண்ட செஸ் போர்டும், எதிராளியுடையதும் சேர்த்து அதன் 32 COIN களும் மட்டும்தான்! அதைத் தவிர வேறெதுவும் தெரியாது! மற்றபடி அவன் அதே “DULL BOY” தான்!

சதுரங்கத்தில் “க்ராண்ட் மாஸ்டர்”- ஆன அவன், யாருடனும் பழகாத, தன் கையையே பார்த்தபடி சிந்தனையில் தனித்து மூழ்கிப் போகும் அதே டல் ஆசாமிதான்! அறிமுகப் படுத்தினால் “ஹலோ” சொல்லக் கூடத் தெரியாது!

அந்த “க்ராண்ட் மாஸ்டர்” இப்போது கப்பலில் பயணிக்கிறான்!

இங்குதான் கதை களம் மாறுகிறது! நமது கதாநாயகன் அந்த DULL BOY அல்ல! இதோ இப்போது வரப் போகிறான்!

கப்பலில் பயணிக்கும் அந்த OTHERWISE DULL BOY ஆன க்ராண்ட் மாஸ்டருக்கும் – ஒரு பணக்காரருக்கும் பந்தயம் வைத்து செஸ் போட்டி நடக்கிறது!

அந்தப் பணக்காரர் உட்பட இன்னும் 4 அல்லது 5 பேர் ஒரு டீம்! அவர்களுக்குள் கலந்து பேசி எது நல்ல “மூவ்” என்று யோசித்து ஒரு காயை நகர்த்துவார்கள்!

நமது DULL BOY யாருடனும் பழகாமல் கப்பல் தளத்தின் ஓரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன்- இவர்கள் யோசித்து ஒரு “மூவ்” செய்தவுடன் சட்டென்று ஓடி வந்து தனது “மூவ்” செய்து விடுவான்!

நான்கைந்து ஆட்டங்கள் அந்தக் கோடீஸ்வரர் பெட் கட்டி ஆடி இழக்கிறார்!

இது கடைசி ஆட்டம்! மிகப் பெரிய தொகையை வைக்கிறார் அந்தக் கோடீஸ்வரர் – அவருக்குத் துணையாக நான்கைந்து பேர் Vs நமது “க்ராண்ட் மாஸ்டர்”- அதுதான் அந்த DULL BOY!

ஆட்டம் கடுமையாக நிலையை நோக்கி நகர்கிறது! அந்தப் பணக்காரர் தனது PAWN ஐ உயர்த்தி உயர்த்தி 7 ஆவது கட்டத்தை எட்டிவிட்டார்! இனி ஒரே மூவ்! 8 ஆவது கட்டத்தை எட்டிவிட்டால் அந்த PAWN ஐ எந்த PIECE ஆகவும் மாற்றலாம் – QUEEN ஆகவே ஆக்கலாம்! இதோ இவரது மூவ்! நகர்த்தும் முன்பு….

இங்குதான் நமது கதாநாயகன் அறிமுகம் ஆகிறான்! இனி இவனைப் பற்றியதுதான் கதை!

“நகர்த்தாதே! எட்டாவது கட்டத்துக்கு PAWN ஐ உயர்த்தினால் QUEEN ஆக்கலாம் வாஸ்தவம்தான்! ஆனால் அடுத்த 10 ஆவது மூவில் அவன் உன்னை ‘செக் மேட்’ செய்துவிடுவான்”- என்று குரல் கேட்கும்!

அந்தப் பணக்காரரும் அவரது 4 ஆலோசனை கூட்டாளிகளும் வியப்புடன் திரும்பிப் பார்ப்பார்கள்!

அந்தப் புதிய மனிதன் – ஒரு பேப்பரை எடுத்து ‘உனது மூவ் – எதிராளியின் மூவ்’ என்று எழுதிக் குறித்து – இப்போது நீ உன் PAWN ஐ QUEEN ஆக்க ஆசைப்பட்டு 8 ஆவது கட்டத்துக்கு உயர்த்தினால் அடுத்த பத்தாவது மூவில் நீ தோற்பாய் – என்று மூவ்களை வரிசையாக எழுதிக் காட்டுவான்!

மாற்றாக வேறு மூவ் செய்தால் எப்படி ஆட்டத்தின் போக்கு திசைமாறி – எதிராளிக்கு வேறு வழி இல்லாமல் டிரா கேட்பான் என்று சில “மூவ்” களை காகிதத்தில் எழுதிக் காட்டுவான்!

அதுவரை இவர்களைப் பற்றிய அலட்சியத்துடன் கப்பல் தளத்தில் ஓரத்தில் நின்றிருந்த “க்ராண்ட் மாஸ்டர்” ஆட்டத்தின் போக்கு மாறுவதைக் கண்டு ஐந்து மூவ் ஆன உடனேயே டிரா கேட்பான்!

இப்போது இந்தப் “புதிய மனிதனை” சூழ்ந்து கொண்டு – க்ராண்ட் மாஸ்டரையே பணிய வைத்த நீ யார்?- என்று மற்றவர்கள் கேட்பார்கள்!

அந்தப் “புதிய மனிதன்” தனது வாழ்க்கையைப் பற்றிச் சொல்வான்!

“நான் ஆஸ்திரியாவில் HABSBURG EMPIRE ஆண்டபோது அரச குலத்தவர்களின் வழக்கறிஞராக இருந்தேன். அரச குடும்பம் மட்டுமல்லாது, அவர்களது மந்திரி பிரதானிகள், பிரபுக்கள் என்று முக்கியஸ்தர்களுக்கும் நாங்கள்தான் வக்கீல்!

எங்களுடைய LAW FIRM நிறைய பொதுமக்களின் வழக்குகளை எடுத்துக் கொள்ளாது! சொல்லப் போனால் சிறிய பித்தளை போர்டுதான் அலுவலக வாயிலை அலங்கரிக்கும்! அதிகம் விளம்பரப்படுத்திக் கொள்ளாத ஆனால் மிக முக்கிய க்ளையண்ட்களைக் கொண்ட நிறுவனம்!

ராஜ வம்சத்தார் – பிரபுக்கள் – மந்திரிகள் இவர்களின் சொத்துக்களை உள்நாட்டிலும் இதர ஐரோப்பிய தேசங்களிலும் பராமரிப்பது – அவற்றுக்குரிய பத்திரங்கள், ஆவணங்கள் போன்றவற்றைத் தயாரிப்பது இதிலேயே கொழுத்த வருமானம் எங்களுக்கு!

ஆஸ்திரிய ராஜ வம்சத்தார் மீது தீராப்பகை கொண்டிருந்த ஹிட்லர் ஆஸ்திரியாவைக் கைப்பற்றினார்! ராஜவம்சத்தினரும் அவரைச் சுற்றியிருந்தோரும் பலர் கொல்லப்பட்டனர் – சிலர் தப்பியோடினர்!

ஹிட்லரின் நாஜிக்கள் எங்கெல்லாம் ராஜவம்சத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்பதைத் துருவித் துருவி ஆராய்ந்தனர்! ஆஸ்திரியாவைக் கைப்பற்றிய ஒரே வாரத்தில் என்னை மோப்பம் பிடித்துவிட்டனர்!

எங்கெங்கே எல்லாம் அரச குடும்ப சொத்துக்கள் உள்ளன என்பதை அறிய என்னையும் – என்போன்ற இதர சில அரச குடும்ப ஆடிட்டர்கள், அட்டார்னிகள் உதவி அவர்களுக்குத் தேவை!

எனவே எங்களைச் சித்ரவதை முகாமுக்கு அனுப்பி – விஷவாயுக் கூடத்தில் சாகடிக்க விரும்பாமல் – வியன்னாவின் ஹோட்டல்களில் அறைகளில் தங்க வைத்துப் பூட்டினார்கள்!

நான்கூட ஹோட்டல் அறை என்றால் சௌகர்யம் என்று நினைத்தேன்! ஆனால் “நாஜி” க்கள் செய்திருந்த ஏற்பாடு போன பிறகுதான் தெரிந்தது!

எனது அறையின் ஜன்னலில் நெருக்கமான கம்பிகள் வலைகள் போலப் பொருத்தப்பட்டு – ஜன்னலுக்கு சற்று வெளியே உயரமான சுவரும் எழுப்பப்பட்டு இருந்தது! காற்று வரும் வசதி மட்டும் உண்டு – எதையும் காண முடியாது!

பகலா, இரவா என்பதே தெரியாது! ஹோட்டல் அறைக்குள் ஒரு மின்சார விளக்கு மட்டும் எப்போதும் எரியும்!

அறையில் ஒரு கட்டில், மெத்தை, தலையண, போர்வை, குடிநீர் குடுவை, அறையுடன் இணைந்த பாத்ரூம் டாய்லெட் – அவ்வளவுதான்!

நாள் முழுக்க சுவரைப் பார்த்தபடி – உட்கார்ந்தோ படுத்தோ கிடக்கலாம்! மற்றபடி இன்று என்ன தேதி? அழைத்து வந்து எத்தனை நாள் ஆகி விட்டது? இரவா? பகலா? எதுவும் தெரியாது!

அறையில் காலண்டர், கடிகாரம் எதுவும் கிடையாது! பூட்டிய அறைக் கதவு இரண்டு மூன்று முறை திறக்கும்! “நாஜி” சீருடை அணிந்த SS படை ஆசாமி ஒருவர் வருவார்! மாற்று உடைகள், உணவு ஆகியவற்றை வைத்துவிட்டு அறையைப் பூட்டிவிட்டுப் போய்விடுவார்! எதுவும் கேட்க மாட்டார் – எதுவும் பேச மாட்டார்!

நேரம் தெரியாது! இரவா பகலா தெரியாது! எத்தனை நாள் ஓடியது தெரியாது! படிக்க செய்தித் தாளோ, புத்தகமோ கிடையாது! யாரும் பேச்சுத் துணை கிடையாது!

நான், கட்டில், மெத்தை, போர்வை, சுற்றி 4 சுவர்கள், கம்பி வலை போட்ட ஜன்னல்! இது ஒரு வகையான மென்டல் டார்ச்சர் என்பது நாள்பட நாள்படப் புரிந்தது!

இதில் திடீரென்று – அது இரவா, பகலா, எந்தக் கிழமை என்று தெரியாத காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் – என்னை அவ்வப்போது “விசாரணை” க்கு அழைத்துச் செல்வார்கள்!

ஒரு நீண்ட வராந்தா – இருபுறமும் துப்பாக்கி ஏந்திய நாஜி காவலர்கள் – வராந்தாவின் முடிவில் ஜன்னல்கள் மூடப்பட்ட அறை…

அதனுள்தான் நாஜி அதிகாரிகள் தங்கள் “விசாரணை” யை நடத்துவார்கள்! சுற்றிச் சுற்றி அதே கேள்விதான் – “அரச குடும்ப சொத்துக்கள்”- ஆனால் அந்தக் கேள்விகளுக்கு ஊடாகவே மிரட்டல்கள், கொச்சையான கேள்விகள், ஆபாசமான வசைகள்…. இப்படி நிறைய!

நான் முழு விவரங்களையும் சொல்லி முடித்துவிட்டால் – எனது “உபயோகம்”- முடிந்து போனால் – பிறகு நான் காலி! அடுத்து எனக்கும் சித்ரவதை முகாம்தான்! விஷவாயுதான்!

எனவே என்னால் முடிந்தவரை “இழுத்தேன்”- மாற்றி மாற்றி பதிலளித்தேன் – “தடுமாறினேன்”- கொஞ்சம் கொஞ்சமாக “விசாரணையை” இழுக்கடித்தேன்!

இழுக்கடித்து என்ன பயன்? மீண்டும் அதே தனிமை அறை – நாலு சுவர், ஒரு கட்டில், ஒரு மெத்தை, ஒரு போர்வை…

சுவரையே வெறித்துப் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்தவன் போல் ஆனேன்! நாஜி காவலன், விசாரணை அதிகாரிகள், நாலு சுவர்… இதைத் தவிர ஏதோ ஒரு அன்னிய முகமோ – அச்சடித்த எழுத்தோ கண்ணில் படாதா? – என்று ஏங்கினேன்!

அந்தப் பொன்னாளும் வந்தது!

வழக்கம்போல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்! எப்போது அழைத்துச் செல்லப்பட்டாலும் அறையில் நிற்க வைத்துவிட்டு வாசலில் நாஜி படைக் காவலன் நிற்பான்!

விசாரணை அறையில் எனக்கு உட்கார அனுமதி இல்லை – சுவரில் நின்றபடி சாய்ந்து கொள்ளலாம்! விசாரணை என்று அழைத்துச் சென்று நிற்க வைத்துவிடுவார்கள்! இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோ நின்றபடி இருந்தால் அதிகாரிகள் மெல்ல வருவார்கள்!

அன்றும் அப்படித்தான்! வெளியே மழை என்பது மூடிய கண்ணாடி ஜன்னலின் வெளியே தெறித்த துளிகளின் மூலம் தெரிந்தது!

சுவரில் நான்கைந்து ஈரமான கோட்கள் கழற்றி மாட்டப்பட்டு இருந்தன! அதில் ஒன்றின் காலரில் இருந்து ஒரு சிறிய நீர்த்துளி குமிழ் போல ஆகி – மெல்லக் கீழே சொட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது! அது சொட்டுமா? அல்லது கோட்டுக் காலரிலேயே பரவி ஈரமாக்குமா என்று எனக்கு நானே பெட் கட்டிக் கொண்டேன்! அந்த அளவுக்கு “வெளிக் காட்சி” எதையும் இத்தனைக் காலம் காணாமல் மனம் பேதலித்து இருந்தேன்! அப்பாடா! அது சொட்டிவிட்டது!

அடுத்த கோட்டின் மேல் எனது கவனம் தாவியது! ஆஹா! என்ன இது? அதன் பாக்கெட்டில் செவ்வக வடிவில் ஏதோ ஒரு சிறிய உப்பல் தெரிந்தது! ஏதோ புத்தகமோ? இல்லை சிறை விசாரணை அதிகாரியின் டைரியா? ஏதோ ஒன்று – அதை லவட்ட வேண்டும்! எழுத்து என்பதைப் பார்த்தே எத்தனை யுகமாயிற்று!

சுவரில் கால் மாற்றி சாய்ந்து கொள்ள அனுமதி உண்டல்லவா? காவலன் வெளியில்தானே நிற்கிறான்! மெல்ல சுவரில் சாய்ந்தபடி – நகர்ந்து அந்த கோட் பாக்கெட்டில் இருந்த – ஆமாம்! புத்தகம்தான்! – அதை கவர்ந்து எனது பேன்டுக்குள் செருகி பனியன் சட்டையை நன்றாக இழுத்துவிட்டேன்!

என்ன புத்தகம் அது? எதுவாக இருந்தால் என்ன? ஏதோ ஒரு புத்தகம்! விசாரணை முடியும் வரை பேன்ட்டுக்குள் செருகிய புத்தகம் கீழே விழாமல் சமாளித்து – அறைக்குத் திரும்பி – கதவு நாஜி காவலனால் பூட்டப்பட்டதும் – கட்டிலில் ஒருக்களித்த மாதிரி படுத்து புத்தகத்தை உருவி எடுத்தேன்!

அதற்குள் எத்தனை பரபரப்பு! அது சிறுகதைகள் அடங்கிய புத்தகமா? நாவலா? கவிதையா? சிறுவர்களுக்கான ரைம்ஸ் புத்தகமா? எதுவானாலும் பரவாயில்லை! தனிமைச் சிறையில் ஒரு துணைவன்! மயான அமைதியில் காகிதம் வழியே பேசும் ஒரு துணை!

ஆர்வத்துடன் எடுத்தால்…

அடச்சே! பக்கத்துக்குப் பக்கம் செஸ்போர்டின் கட்டங்கள்! பல சாம்பியன்கள் விளையாடிய ஆட்டங்கள்! a4, e4, e4 × f5, …Rh5, B×Ne6… இப்படி என்னென்னவோ புரியாத குறியீடுகள்! வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் “சனியனை” வீசி எறிந்திருப்பேன்!

ஆனால் இப்போது எனது ஒரே துணை இதுதானே? சிறு வயதில் செஸ் விளையாடி இருக்கிறேன் – சாம்பியன் இல்லாவிட்டாலும் இந்தக் குறியீடுகளும் அதற்கான மூவ்ககளும் அவ்வளவு பரிச்சயமில்லை!

மேலும் செஸ் போர்டுக்கும் – COIN களுக்கும் எங்கே போவது? ஒரு ஐடியா!

எனக்கு வழங்கப்பட்ட போர்வையில் கட்டங்கள் இருந்தன! மடித்து மடித்து அதை 64 கட்டம் வரும் வகையில் அமைத்துக் கொண்டேன்! உதிர்ந்து கிடந்த BREAD துணுக்குகள், ரொட்டியின் சிறு துண்டுகள் இவைதான் CHESS COINS! அதை வைத்து புத்தகத்தில் போடப்பட்ட மூவ்களை ஆடிப் பார்ப்பேன்! ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக இருந்தது!

உணவு வழங்க நாஜி காவலன் அறைப் பூட்டைத் திறக்கும் சப்தம் கேட்டால் செஸ் புத்தகத்தை தலையணை அடியில் ஒளித்துவிடுவேன் – அவன் அறையை சுத்தம் செய்யும்போது ப்ரெட் துணுக்குகள் போய்விடும்! நான் புதிய உணவில் இருந்து சில ப்ரெட் துணுக்குகளைப் பிய்த்து CHESS COIN ஆக்கிக் கொள்வேன்! மறுபடியும் போர்வைக் கட்டங்களையே a1, a2….h1, h2 இப்படி கணக்கிட்டு புத்தகத்தில் கண்டுள்ள கேம்களை ஆடிப் பார்ப்பேன்!

இப்படியே எத்தனை நாள் – எத்தனை மாதம் கழிந்ததோ நினைவில்லை! என்னுடைய ஒரே COMPANIAN அந்த செஸ் புத்தகம்தான்!

ஒரு கட்டத்தில் போர்வை – கட்டங்கள் – ப்ரெட் துணுக்குகள் எதுவும் தேவையற்றுப் போய்விட்டது!

நானே கண்ணைமூடி அந்தப் புத்தகத்தில் போடப்பட்ட கேம்களை – அவற்றில் ஒவ்வொரு காயின் நகர்வுகளை – மனக்கண் முன்னே ஆடிப் பார்க்கத் தொடங்கி விட்டேன்!

அந்தப் புத்தகத்தில் சுமார் 200 கேம்கள் இருந்தன – எல்லாம் பெரிய பெரிய சாம்பியன்கள், க்ராண்ட் மாஸ்டர்கள் ஆடிய கேம்கள்! மனப்பாடம்! மனப்பாடம்! அத்தனையும் “மனக்கண்ணிலேயே”- கொண்டு வந்து ஆடிப் பழகினேன்!

ஆட ஆட இந்த செஸ் விளையாட்டு வெறும் பொழுது போக்கல்ல! எவ்வளவு தர்க்க ரீதியானது! கற்பனை என்பதற்கு சிறிதும் இடம் தராமல் எதார்த்தமான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டது! தினமும் அனுபவித்து அனுபவித்து பெரிய சாம்பியன்களின் கேம்களை “மனக் கண்” கொண்டே ஆடினேன்!

அது என் திட்டமிடுதலை செழுமைப்படுத்தியது! எதிரி என்ன செய்வான் என்ற எதிர்பார்ப்பைக் கூர்மைப் படுத்தியது!

நாஜி அதிகாரிகள் என்னை “விசாரணைக்கு” அழைத்து – சகட்டு மேனிக்கு வளைத்து வளைத்துக் கேட்டாலும் – தடுமாறாமல் தற்காப்பாக – கோர்வையாக – அவர்கள் நம்பும் வண்ணம் – பதில் சொல்வதற்கு இந்த “மனக் கண்ணில்” ஆடிப்பார்த்த செஸ் கேம் உதவிற்று!

இப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது! எனக்கு அந்தப் புத்தகத்தில் இருக்கும் அத்தனை கேம்களும் மனப்பாடம்! ஒரு கேம் முழுவதையுமே MOVE BY MOVE என்னால் சொல்ல முடியும்! ஒரு கேமின் 12 வது மூவ் இப்படி இருந்தால் அந்த கேமின் 43 வது மூவ் இப்படித்தான் இருக்கும் என்ற அளவு மனப்பாடம்!

ஏன் நானே WHITE ? நானே BLACK என்று இரு தரப்பையும் ஆடக் கூடாது? அந்த விபரீத எண்ணமே ஆபத்தாக முடிந்தது!

கவனியுங்கள்! செஸ் போர்டு கிடையாது! நிஜமான காய்கள் கிடையாது! எதிர்ப் பக்கம் போய் உட்கார்ந்து காய் நகர்த்துவது கிடையாது!எல்லாம் உங்கள் மனதுக்குள்தான்!

என்னுடைய “வெள்ளை” காயை நானே மனதுக்குள் நகர்த்திவிட்டு – பிறகு நானே மனதுக்குள் எதிர்ப்பக்கம் நகர்ந்து எனது “வெள்ளைக்கு” எதிராக எனது “கருப்பு” காயை நகர்த்த வேண்டும்!

நானே இரண்டாகிப் போனேன்! “வெள்ளை” ஆகிய நான்! என்னையே எதிர்த்து “கருப்பு” ஆகிய நான்! இப்படியே ஒரு நாளைக்கு இரண்டு ஆட்டம்! ஒரு கட்டத்தில் இந்த வெறி அதிகமாகி எனக்குள் நானே பிளவுண்டு போனேன்!

பிறகுதான் புரிந்தது! “யாரோ இருவர்” ஆடிய ஆட்டத்தை மனக் கண்ணில் ஆடிப் பார்ப்பது என்பது வேறு! நானே “இரண்டாகி” ஆடுவது என்பது வேறு!

ஒரு கட்டத்தில் சுயநிலை இழந்து – டெலிரியம் என்னும் நிலைக்கு ஆளாகி மயங்கி விழுந்தேன்!

எத்தனை நாள், எத்தனை வாரம் மயக்கத்தில் கிடந்தேனோ?

கண் விழித்த போது….

ஒரு மருத்துவமனையில் இருந்தேன்! ஒரு மருத்துவர் மிக இனிமையான குரலில் என்னிடம் கேட்டார்:

“நீங்கள் கணித பேராசிரியரா? அல்லது ரசாயன ஆராய்ச்சியாளரா?”

“ஏன் கேட்கிறீர்கள்?”- என்றேன்.

“இல்லை ஒரு வாரமாக டெலிரியம் – a4×b5, b6- b7, Na6 ×…. என்றெல்லாம் உளறியபடி இருந்தீர்கள். கணித நிபுணரோ, வேதியியல் ஆராய்ச்சியாளரோ என்று நினைத்தோம்”- என்றார்.

நான் எனது – தனி அறைச் சிறை – விசாரணை – செஸ் புத்தகம் கடத்தியது… எல்லாம் விவரித்தேன்.

அந்த மருத்துவர் நல்ல வேளை – “நாஜி”- இல்லை! எங்கள் புகழ்பெற்ற வழக்கறிஞர் குடும்பத்தைப் பற்றியும், எனது வியன்னா உறவினர்கள் ஒரு சிலரையும் அறிந்திருந்தார்!

“இப்போது நீங்கள் தேறிவிட்டீர்கள் என்று நான் சர்டிஃபிகேட் கொடுத்தால் – நாஜிகள் உங்களை மீண்டும் ஹோட்டல் தனியறைக்குக் கூட்டிச் சென்று அடைத்துவிடுவார்கள்! எனவே நீங்கள் இன்னும் சில வாரங்கள் இங்கே நோயாளியாகவே இருங்கள்! உங்களுக்கு சித்தப்ரமை இன்னும் தெளியவில்லை! ஓ.கே.வா?” – என்று சிரித்தபடி போய்விட்டார்!

பிறகு சில தினங்களில் ஹிட்லரின் கவனம் ஆஸ்திரியாவை விட்டு – சோவியத் ரஷ்யா மீது படையெடுப்பில் திரும்பிவிட்டது! நாஜிக்கள் ஊரைக் காலி செய்துகொண்டு புறப்பட்டனர்!

நானும் விடுவிக்கப்பட்டேன்!

ஆனால் அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- “இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!”

“இதுதான் என் கதை”- என்று முடிப்பான் அந்தப் புதிய மனிதன்.

உடனே அந்தக் கோடீஸ்வரக் கப்பல் பயணியான பணக்காரரும் – அவரது நண்பர்களும் – “இன்னும் ஒரே ஒரு கேம் – அந்தக் ‘கிறுக்குப் பிடித்த’ க்ராண்ட் மாஸ்டரிடம் விளையாடி அவனை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்”- என்று வற்புறுத்துவார்கள்! அந்தப் புதிய மனிதன் மறுப்பான்! மீண்டும் இவர்கள் வற்புறுத்த….

மறுநாள் அந்த DULL BOY – GRAND MASTER உடன், இந்தப் “புதிய மனிதன்” – தனக்கு மருத்துவர் அளித்த எச்சரிக்கையையும் மீறி ஆடி ஜெயித்தே விடுவான்!

“இன்னும் ஒரு கேம்”- என்று பழைய ஆர்வம் – அதுவும் அசல் போர்டையும் காய்களையும் கண்ட ஆர்வம் உந்தித் தள்ள – மருத்துவரின் எச்சரிக்கையை மீறி ஆடி…

எஸ்! அதுதான் முடிவு!

அற்புதமான கதை ! செஸ் விளையாட்டின் மீது அதை அறியாதவர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டும் கதை! PENGUIN வெளியீடு! வாய்ப்பு இருப்போர் வாங்கிப் படியுங்கள்! அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு!

(படித்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்டது – புத்தகம் என்னிடம் இல்லை – நினைவில் இருந்தே பல பகுதிகளை தந்துள்ளேன் – எனவே அசல் புத்தகத்தைப் படிக்கும் போது சில தகவல்கள் விடுபட்டோ வேறுபட்டோ இருக்கக் கூடும்)