அரங்கேற்றம்../ கே.பாலச்சந்தர்

அரங்கேற்றம் கதையை என் ஙதிரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று ஓடிக் கொண்டிருந்தேன். விளைவு ஹார்ட் அட்டாக். ஆறு மாதம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள்.அந்த ஓய்வில் யோசனை பண்ணியதில் இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கோம்.. இனி என்ன பண்ணப் போகிறோம் என்ற மனத்தின் அலசலில் விளைந்ததுதான் “அரங்கேற்றம்’. கிருஸ்துவுக்கு முன்.. கிருஸ்துவுக்குப் பின் என்பதுபோல ஹார்ட் அட்டாக்குக்கு முன் ஹார்ட் அட்டாக்குக்குப் பின் என என் படங்களைப் பிரித்துவிடலாம். அதற்கு முன்னாடி 15, 20 படங்கள் எடுத்திருந்தேன். ஹார்ட் அட்டாக் என்னை முற்றிலுமாக புரட்டிப் போட்டுவிட்டது. என்ன மாதிரியான படங்களை எடுக்கப் போகிறோம் என்பதற்கும் கூட “அரங்கேற்றம்’ முன் மாதிரியாக அமைந்துவிட்டது.

‘அரங்கேற்றம்’ உங்களுக்குத் தெரியும். அது பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போது எனக்கு சின்ன வயது. இப்போது கேட்டால் அப்படியொரு படத்தை எடுப்பேனா என்பது சந்தேகம்தான். பிராமண சமுகத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு சிரமப்படுவதுதான் கதையின் மையம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் நிறைய பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை கரையேற்ற முடியாமல் அவதிப்படுவதைச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம். என் மகள் புஷ்பா ஒரு பேட்டியில் சொல்லும்போது அந்தக் கதை அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஓர் உண்மைச் சம்பவமாக இருந்திருக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்…. இருந்திருக்கலாம் என்றுதான் சொன்னார்கள். உண்மைச் சம்பவம் என்று சொல்லவில்லை. இப்போதும் அது உண்மையில் நடந்த சம்பவமா? என்பதைச் சொல்ல நான் விரும்பவில்லை.

அந்தக் கதையைச் சொல்வதற்கு எனக்கு மிகவும் தெரிந்த பழக்கமான சமூகத்தைக் கையில் எடுத்துக் கொள்வதுதானே சரியாக இருக்கும்?அந்தச் சமூகத்தைப் பற்றித்தான் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, நடை, உடை, பாவனை எனக்கு அத்துப்படியாக இருந்தது. 15 -20 ஆண்டுகள் அதிலேயே ஊறி வளர்ந்தவன். என்னுடைய கதையைச் சொல்லுவதற்கு அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்கள் எளிமையாக இருந்தன. அதுவுமில்லாமல் எனக்குத் தெரியாத இன்னொரு சமூகத்தைக் கையில் எடுத்து விமர்சிப்பதும் சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்தக் கதையில் நான் என்ன சொல்ல விரும்பினேனோ அதை ஆணித்தரமாகச் சொன்னேன் என்பது எனக்குப் புரிந்தது. எனக்கு மட்டுமல்ல, அது யாருக்குப் புரிய வேண்டுமோ? அவர்களுக்கும் புரிந்தது. தமிழக அரசும் கூட குடும்பக் கட்டுப்பாட்டை இதைவிட அழுத்தமாக யாரும் சொல்லிவிடமுடியாது என்று பாராட்டி, கௌரவித்தது.

அரங்கேற்றம்’ படத்துக்குப் பிறகு “அவள் ஒரு தொடர்கதை’, “அபூர்வ ராகங்கள்’, “அவர்கள்’ என என் படங்கள் அணிவகுத்தன. ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் பிராமண சமுதாயத்தை மட்டுமே வைத்துப் படம் எடுக்கிறீர்கள் என்றார்கள். நான் பிராமண சமுதாயத்தை வைத்து “அரங்கேற்றம்’ என்கிற ஒரே ஒரு படம்தான் எடுத்தேன். நான் எடுத்தவை எல்லாமே நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய படங்கள்தான். ஆனால் பிராமண சமூகத்தை நடுத்தர வர்க்கத்துடனேயே அடையாளப்படுத்திப் பார்க்கிறார்கள். அதில் நியாயமே இல்லை. “அரங்கேற்றம்’ தவிர வேறு எந்தப் படத்திலுமே ஜாதியைப் பற்றிச் சொன்னதே இல்லை.”அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ஒரு ஜாதிக் கலவரம் நடப்பதாகச் சொல்ல நேர்ந்தபோதுகூட அவர்கள் என்ன ஜாதி என்பதைச் சொல்லவே இல்லை. “எதிர் நீச்சல்’ என்றால் உடனே அது பிராமணக் கதை என்று நினைக்கிறார்கள். அதில் ஒரு குடும்பம்தான் பிராமணக் குடும்பம். ஒரு நாயர் குடும்பம், ஒரு முஸ்லிம் குடும்பம் என்று எட்டுக் குடும்பங்களை அதில் காட்டினேன். பட்டுமாமி கேரக்டர் பேசப்பட்டதால் உடனே அது பிராமணக் கதை என்று நினைத்து விடுகிறார்கள். அப்படியில்லை.

கே. பாலச்சந்தர்
நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்

முகநூல் பதிவு : ஆர்.கந்தசாமி