பின் நவீனத்துவ கவிஞன்/ #விக்ரமாதித்யன்


முன் வரிசையில் இடம் பிடிக்க
மனம் சம்மதிப்பதில்லை.
முன் வரிசைக்கு
முயன்றதில்லை ஒரு போதும்.
முன் வரிசையில் இருக்க
பிரமுகராக வேண்டும்.

பின் வரிசைதான்
பெரிதும் சௌகரியம்.
நினைத்த போது
எழுந்து போய் விடலாம்.
தேனீர் குடிக்க
சிகிரேட் பிடிக்க
சலித்துப் போனால்
ஓயின் ஷாப் கூடச் சென்று விடலாம்.

முன் வரிசையென்றால்
இருக்கையை காபந்து பண்ண வேண்டும்.
மிக முக்கியமானவர்கள்
வருகை புரிந்தால்
இடத்தை ஒழித்துக் கொடுக்க வேண்டும்.
தோன்றினால்
எழுந்து போக இயலாது.
சம்பிரதாயம் மரபு நாகரிகம்
விடமுடியா(து).

பின் வரிசையில்
எந்த பிரச்சனையும் கிடையாது.
யாரும்
கவனிக்கமாட்டார்கள்.
எழுந்து நின்று
வணக்கம் போட வேண்டியதில்லை.
அசதியாயிருந்தால்
சற்றே கண்ணுறங்கலாம்.
பின் வரிசைதான்
பிடிக்கிறது.

முன் வரிசைக்கு ஒரு நாளும்
முண்டி மோதியதில்லை.
தொடக்கப் பள்ளியிலிருந்தே
பின் வரிசை தான்.
கவிதையிலும் வாழ்விலும்
அதே கதை தான்.
முன் வரிசை விட்டு விடுவதும்
பின் வரிசை இடமளிப்பதும் தாம்
இது நாள் வரையில் சதாசிவா!!!!
★★★

கவிதையை சொல்புதிது என்ற புலத்தில் வெளியிட்ட நண்பர் அனங்கனுக்கு நன்றி