நான் தொடக்க கால பெண் எழுத்தாளர்களைப் பற்றி/கால.சுப்பிரமணியம்

நான் தொடக்க கால பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளையும் பல ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளேன். (பொதுவான தொடக்க கால படைப்புகளையும் தான். தமிழின் இரண்டாவது நாவலாக வந்த சாவித்திரி சரித்திரம் – முத்துமீனாக்ஷி – என்ற நாவல் தொடரையும் தேடிப்பிடித்து இரு ஆண்டுகளுக்கு முன் தமிழினி பதிப்பாக வெளியிட்டதும் அது இந்த ஆண்டு மறுபதிப்பாக வெளிவந்துள்ளதும் தெரிந்திருக்கும். இது போலவே 1915க்கு (அதாவது ’குளத்தங்கரை அரசமர’த்துக்கு ) முன்பு வந்த பல சிறுகதைகளையும் தேடிப்பிடித்து வைத்துள்ளேன். இவற்றை 5 ஆண்டுகளுக்கு வெளியிட்டிருக்க வேண்டும். வழக்கமான சோம்பல் /மெத்தனம். கடற்கரையின் பாரதி விஜயம் தொகுப்புக்கு முன்பே அதே போன்ற விஷயங்களை 1000 பக்கங்களில் தொகுத்துவைத்திருந்ததும், அது வந்ததால் தேங்கிவிட்டதும் மற்றொரு கதை.

இப்போது இந்த விசாரம் ஏன் என்றால், திலீப் குமார் முன்பு ஆங்கிலத்தில் தொகுத்திருந்த தமிழ்ச்சிறுகதைகள் தொகுப்பு மீண்டும் மறுபதிப்புப் பெற உள்ளது. அதில் விசாலாட்சி அம்மாள் பற்றி தவறாகத் தகவல் தந்திருந்ததை (மாதவையாவின் மகள் காசினி விசாலாட்சியின் கதையைப் போட்டுவிட்டு ஆசிரியர் பற்றிய குறிப்பில் பண்டிதை விசாலாட்சி பற்றியே தகவல் தந்திருந்தார்) திலீப்புக்குச் சொல்லியிருந்தேன். அவர் இப்போது ஞாபகமாக அதைக் கேட்டு வாங்கினார் சில நாள் முன். அம்மணி அம்மாள் பற்றியும் பண்டிதை விசாலாட்சி, காசினி விசாலாட்சி, மங்கை பத்திரிகையாசிரியை விசாலாட்சி என்ற திரிநிலைகளையும் விளக்கியிருந்தேன்.

தமிழ் விக்கியில் இல்லாத சிலபல தகவல்களும் இவற்றில் கலந்திருக்கும் ….