தொழில் ரகசியம் /ஆர் வத்ஸலா

அம்மாவின் காபி அருமையாக இருக்கும்
அவள் காபி தயாரிக்கும் சமயம்
எனக்கு வீடு பெருக்கி துடைக்கும்
வேலை இருக்குமென்பதால்
அவள் தயாரிப்பதை
நான் நின்று பார்த்ததில்லை
குடிப்பேன்
ரசித்து

அண்ணா அண்ணி தனிக்குடித்தனம்
போன பிறகு
அம்மா சமையலறை பக்கம் வருவதை
நிறுத்தி விட்டாள்

காபி செய்முறை
அவளிடம் கேட்டறிந்து
கொண்டேன்

தினமும் அதிகாலையில் எழுந்து அவள் சொன்ன படி
தயாரித்த காபியை அவளிடம் தருவேன்

பாதி குடித்துவிட்டு
சுளித்த முகத்துடன்
மிச்சத்துடன்
டம்ளரை ‘டங்’கென்று
வைப்பாள் தரையில்

அப்பா முழுவதும் குடித்துவிட்டு
அசட்டு சிரிப்புடன்
‘என்ன இருந்தாலும் அம்மாது மாதிரி வராது’
என்பார்

எனக்கு என் காபி
ஏதோ பரவாயில்லை
எனத் தோன்றும்

அம்மா இறந்த பின்னர்
ஒரு நாள்
ஏதோ நினைவில்
ஃபில்டரில்
எப்போதும் போடுவதை விட
இரண்டு தேக்கரண்டி அதிகமாக
பொடி போட்டு விட்டேன்

அன்று வந்தது
அம்மாவின் காபி
அப்படியே
அச்சாக
17/7/22

2 Comments on “தொழில் ரகசியம் /ஆர் வத்ஸலா”

Comments are closed.