போடிநாயக்கனூர்/பாரதி பாலன் 

போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.

அது ஜமீன்தாரணி காமுலு அம்மாள் சமாதி. 1888 முதல் 1921 வரை போடி ஜமீனாக இருந்த பெண்.இவர்தான் பல பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் அப்பகுதி மக்களுக்காக உருவாக்கியவர், இன்றும் இவைகள் உள்ளன. பல கோயில்களையும் கட்டியுள்ளார் என்றாலும் இவர் அதிகம் கவனம் செலுத்தியது மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் பள்ளிகளையும்;மருத்துவ வசதிகளை இலவச மாகப் பெற மருத்துவமனைகளையும் உருவாக்கியது நினைக்கத்தக்கவை.

பல சத்திரங்களையும் உருவாக்கியுள்ளார்.

விக்டோரியா நினைவுப் பள்ளிக்கு மிகுந்த பொருளுதவியும் வழங்கி அதற்கு அடிக்களும் நாட்டியவர் இவரே!

ஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவருடைய மகளை சாப்டூர் ஜமீன்தாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவர் தான் போடிப்பகுதி விவசாயிகளுக்கு காபி பயிரிடும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவருடைய தந்தை காமராஜ பாண்டியர் 1862 முதல் 1888 வரை போடி ஜமீனாக இருந்தவர். இவர்தான் “பூபால சமுத்திர கண்மாயை” வெட்டியவர்.

இவருக்குப் பின்பு 1921 முதல் 1941 வரை போடி ஜமீனாக இருந்தவர் டி.வி.கே காமராஜபாண்டிய நாயக்கர் 1930 இல் ஆங்கிலேயே ஆட்சியில் சென்னை மாகான சட்டப் பேரவையில் தமிழில் பேசி கவனம் பெற்றவர்.

சென்னை மாகான சட்டப் பேரவையில் தமிழி M.L.C ஆக இருந்தவர் .இவர் தான் சட்டப்பேரவையில் தமிழில் பேசிய முதல் உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றவர்.

ஸ்ரீ காமுலு அம்மாள் சமாதி மண்டபத்திற்கு பக்கத்தில் மிகத் தொன்மையான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இது காசியில் இருந்து பிடிமண் எடுத்துவந்து கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர். அதிகம் எழுதப்படதா இந்த வரலாற்றினை ஆராய்ந்தால் பல தரவுகளும் உண்மைகளும் வெளிவரும்.

One Comment on “போடிநாயக்கனூர்/பாரதி பாலன் ”

Comments are closed.