நடிகை சௌந்தர்யா/ஆர்.வி.உதயகுமார்

”இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார்” – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்

‘தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றே அழைத்தார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இன்னொருவர் மத்தியில் பேசும்போது சார் என்று கூப்பிடு என்றேன். ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல் கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன்.

என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும், அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா. பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படம் சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் அவரை சிபாரிசு செய்தேன். அதன்பிறகு அவர் பெரிய நடிகையாக்கி விட்டார். அவர் வளர்ந்து நடிகையாகி சந்தித்த பிரச்சினைகளிலும், காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான்தான் சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அதன்பின் அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார். ‘நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன்’ என்றெல்லாம் அவர் கூறியபோதும் என்னால் செல்ல முடியவில்லை. பிறகு மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். அப்போதும் என்னால் போக முடியவில்லை. பிறகு தமிழில் ‘சந்திரமுகி’யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் பி.வாசு எடுத்திருந்தார். அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார். அப்போது ஒருநாள் சௌந்தர்யா போன் செய்தார். ‘அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ‘ஆப்தமித்ரா’ தான் என் கடைசி படம்.

உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்’ என்று என்னிடமும், என் மனைவியிடமும் மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதில் தன் அண்ணனின் வற்புறுத்தலால் பி.ஜே.பி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார். அதன்பின் மறுநாள் காலை ஏழரை மணிக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தாய் பார்த்து. அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. கடைசியில் அவர் இறப்புக்குதான் அவர் வீட்டுக்குச் செல்ல முடிந்தது. மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா

அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில். இதில் நம்மை அறியாமல் நமக்கு சொந்த பந்தங்கள் உருவாகிவிடும்” என்றார்.

நன்றி: நக்கீரன்

முக நூலில் தகவல் : ஆர்  கந்தசாமி