கம்பனைக் காண்போம்—49/வளவ. துரையன்

          பாலகாண்டத்தின் நகரப் படலம் இனி தொடங்குகிறது

                 சந்திரனும் சூரியனும் திரிவதேனோ?

உமைக்கு ஒருபாகத்து ஒருவனும் இருவர்க்கு
        ஒருதனிக் கொழுநனும் மலர்மேல்
சுமைப்பெருஞ் செல்வக் கடவுளும் உவமை
        கண்டிலர் அங்குஅது காண்பான்
அமைப்பு அருங்காதல் அதுபிடித்து உந்த
        அந்தரம் சந்திர ஆதித்தர்
இமைப்புஇலர் திரிவர் அது அலால் இதனுக்கு
        இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ?                       [96]

சந்திரனும் சூரியனும் ஆகாயத்தில் திரிவதை நாம் பார்க்கிறோம். அப்படி அவர்கள் திரிவதற்குக் கம்பன் தற்குறிப்பேற்ற அணியின் முலமாக ஒரு காரணம் கூறுகிறான். இந்த அயோத்தி நகரத்தைப் போல வேறு நகரம் எந்த இடத்திலேனும் காணக் கிடைக்குமோ என்றுதான் அவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்களாம். அப்படிப்பட்ட சிறப்புடையதாம் அயோத்தி.

மேலும் உமாதேவியைத் தன் ஒரு பக்கத்தில் வைத்துள்ள பரமசிவனும், ஸ்ரீதேவி, பூதேவி என்னும் இரண்டு தேவிகளுக்கும் கணவராகிய ஒப்பற்ற ஒரு தனிக் கணவரான திருமாலும். அத்திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனும் கூட இந்த அயோத்திக்கு நிகராக உவமை சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு நகரைக் கண்டதில்லையாம். அப்படி மும்மூர்த்திகளே காணாதபோது சூரிய சந்திரர்கள் எப்படிக் கண்டுபிடிப்பர் எனும் வினா நமக்கு எழுகிறது.

ஆனால் ‘இமைப்பிலர்’ எனும் சொல்லைப் பார்க்கையில் அச்சூரிய சந்திரர்கள் கண் இமைக்காமல் எப்படியும் கண்டுபிடித்து விடவேண்டும் என்னும் ஆசையினால் திரிகிறார்கள் என்பதும் நயம். மேலும் இருவர்க்கு ஒரு தனிகொழுநன் என்பதற்கு வள்ளி மற்றும் தேவயானையின் கணவரான சுப்பிரமணிக்கடவுள் என்று சொல்வதும் பொருந்தாது. சிவனையும் பிரமனையும் சொல்லும்போது திருமாலையும் சொல்வதுதானே முறை.