அச்சமும் தகிப்பும் /வளவ. துரையன்


சாலையின் போக்கினிலே
படுத்துக் கிடக்கும் பெரிய
சாரைப்பாம்புதான் இவ்வாழ்வு.

தொலைவில் நீர் தேங்கியதால்
பாசிபிடித்துக் கிடப்பதைப்
பச்சைப்புல்லென நம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதை நோக்கியே நெடும் பயணம்
ஆண்டாண்டு காலமாய்
அனைவரும் செல்கிறீர்கள்.

ஒருவரை ஒருவர்
ஓய்வின்றி முந்திச் சென்று
உட்கார நினைப்பதால்
உடலெங்கும் வலிகள்.

உட்கார்ந்த பின்னரும்
உள்ளிலும் வெளியிலும்
அச்சமும் தகிப்பும்
ஆரவாரமும் சலிப்புதான்.

மரம் மீதில் அணில்கள்
மறுபடி மறுபடி துரத்துவது
நடந்து கொண்டிருக்கிறது.

.