தந்திகளும் மந்திகளும்


வளவ. துரையன்


இpப்பகுதியில் கம்பராமாயணத்தின் கதைப்போக்கு இருக்காது. ஆங்காங்கே காணப்படும் இலக்கிய நயங்கள், உவமைகள், சில நுணுக்கங்கள் ஆகியவற்றை மட்டும் நான் அறிந்தமட்டும் தொட்டுக் காட்ட எண்ணம்


காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்தக் குளங்களை நாடிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தைத் தேடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான்


”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின”


தந்தி என்பது ஆண்யானையையும் பிடி என்பது பெண்யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே பெண்யானை குளத்தை நோக்கிச் சென்றதாம்; குரங்குகளைச் சொல்லும்போது பெண்குரங்கு முன்னே செல்ல ஆண்குரங்கு பின்னே சென்றதாம்? ஏன் தெரியுமா?
எப்பொழுதும் காட்டில் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வரும் விலங்குகளை வேட்டையாட அங்கே புலி, சிங்கம் போன்றவை மறைந்திருக்கும். எனவே ஆண்யானை முன்னே சென்று விலங்கு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்க முன்னே பாதுகாப்பாகச் செல்கிறதாம்.


குரங்குகளைப் பொருத்தவரையில் முன்னே செல்லும் பெண்குரங்கு மரத்தில் ஏறி மேலே சென்று தூங்குவதற்கேற்ற நல்ல கிளையில் உட்கார்ந்து கொள்ளும். பின்னால் வரும் ஆண்குரங்கு எல்லாம் ஏறினபிறகு அடிமரத்தின் கிளையில் இரவில் வேறு விலங்குகள் வந்தால் தடுப்பதற்கேற்றவாறு பாதுகாக்க உட்கார்ந்து கொள்ளும். எனவேதான் இங்கே பெண்குரங்கை முதலிலும் ஆண்குரங்கைப் பின்னாலும் கம்பன் சொல்கிறான்.


அதனால்தான் அங்கே ஆண்யானையை முன் வைத்தும் இங்கே பெண்குரங்கை முன்வைத்தும் கம்பன் பாடுகிறான்.
.