அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு/குரு ராஜன்
(Rohld Dahl எழுதிய Poison என்ற கதையின் மொழியாக்கம் – 07.07.77 குமுதம் இதழில் வந்தது)
திரும்ப வீடு வந்தபோது நள்ளிரவு. காரின் ஹெட்லைட் வெளிச்சம் ரோட்டைப் பெருக்கிக் கொண்டு வர, பங்களாவுக்குள் நுழையும்போது அதை அணைத்து விட்டேன்.
ஹரிஹரனை எழுப்பாமல் இருக்க அணைத்திருக்க வேண்டாம். ஹரியின் அறை விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. விழித்துக் கொண்டிருக்கிறான் போல. இல்லை. விளக்கை அணைக்காமல் தூங்கிப் போயிருக்க வேண்டும்.
காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு மெதுவாக நடந்தேன். இதோ வானத்தில் கைநீட்டி மையை ஈஷிக் கொள்ளலாம் போல இருட்டு. இருட்டில் ‘மனக்கணக்’காக அஞ்சு படி ஏறி பால்கனிக்கு வந்தேன்.
பால்கனியைக் கடந்து கதவைத் திறந்தேன். நுழைந்தேன். ஹால் விளக்கைப் போட்டேன். மெள்ள ஹரியின் அறைக்குச் சென்றேன். திறந்தேன். பார்த்தேன்.
படுக்கையில் படுத்திருந்தான். விழித்துக் கொண் டிருந்தான். ஆனால் நகரவில்லை. என் பக்கம் தலையைக் கூடத் திருப்பவில்லை. ஆனால் அவன் கூப்பிட்டது கேட்டது. “சம்பத்/ சம்பத்! இங்கே வா.”
மெதுவாகப் பேசினான். ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து உதட்டில் தனித் தனியே உச்சரித்தாற்போல, மிக மெல்லிசாக, பேசுவதற்கே பயப்பட்டாற்போல.
கதவை நன்றாகத் திறந்து அவன் அருகில் செல்லப் புறப்பட்டேன். “நில்லு! இரு! சம்பத்…” அவன் பேசுவது மிக மெல்லிசாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தைக்கும் கோடிப் பிரயத்தனம் செய்வதுபோலிருந்தது.
“ஹரி, என்னடா?”
“ஷ்ஷ்ஷ்…” மறுபடி முணுமுணுப்பு. “ஷ்ஷ்ஷ், சத்தம் போடாதே சனியனே! செருப்பைக் கழட்டிவிட்டு கிட்ட வா. ப்ளீஸ் சம்பத், சொன்னபடி செய்.”
அவன் பேசும் விதம் வினோதமாக இருந்தது. தமிழ் சினிமாவில் கடைசி சீனில் இரண்டாவது கதாநாயகன் குண்டடிப்பட்ட பிற்பாடு வயிற்றைப் பிடித்துக்கொண்டு முக்கி முக்கிக் கரகரத்த குரலில், “எப்படியாவது என் தங்கைக்கு மறுவாழ்வு… தா…’ என்று பேசுவானே அது போல! ஏன்?
‘சீக்கிரம் சம்பத்! வா! செருப்பைக் கழட்டி வெச்சுட்டு வாயேன்!”
செருப்பை எதற்குக் கழற்ற வேண்டும்? புரியவில்லை! என்னமோ அவனுக்கு உடம்பு சரியில்லை. பேச்சிலேயே தெரிகிறது… இந்தச் சமயத்தில் வெறுப்பேற்ற வேண்டாம். செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு அவன் படுக்கைக்குச் சென்றேன்.
”படுக்கையைத் தொட்டுடாதே! ப்ளீஸ் படுக்கையைத் தொட்டுடாதே!” இன்னும் அந்த ‘குண்டடிப்பட்ட தமிழ்ச் சினிமா’ குரல்தான்/ மல்லாக்கப் படுத்திருந்தான். மார்பு வரை போர்த்தியிருந்தான். வரிவரியாகச் சட்டை தெரிந்தது. அப்பா! எத்தனை வியர்வை! ராத்திரி உஷ்ண மாகத்தான் இருந்தது? எனக்கும் சொஞ்சம் வியர்த்துத் தான் இருந்தது. ஆனா ஹரிக்கு முகம் முழுக்க வியர்த்து தலையணையெல்லாம் மலேரியாவா என்ன? நனைந்து, திட்டுத்திட்டாக ஈரம்!
“என்னடா ஹரி?”
“பாம்பு!” என்றான்.
‘பாம்பா ! மை காட்! எங்கடா கடிச்சது? எப்படா? “
‘”ஷட் அப்!” என்றான். முணுமுணுத்தான்.
“ஹரி, கேள்டா!” அவன் அருகே சென்று அவன் தோளைத் தொட்டுச் சொன்னேன். “பாம்பு கடித்தால் உடனே ஏதாவது செய்யணும். எங்கடா கடிச்சது சொல்லுடா.” அப்படியே அசையாமல் கிடந்தான். வலி தாங்காமல் அமுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறவன் மாதிரி!
“இன்னும் கடிக்கலைடா” என்றான் மெதுவாக “இன்னும் இல்லை. என் வயத்து மேல் படுத்துக்கிட்டிருக்கு. தூங்கறது.”
சட்டென்று நான் பின்வாங்கினேன்.
“ஆமாம். கட்டுவிரியன்.”
“என்னது!”
நான் அவன் வயிற்றை வயிற்றின் மேலிருந்த போர்வையைப் பார்த்தேன். உள்ளே என்ன இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி கசங்கி இருந்தது. எனக்குத் திக்திக்கென்று மார்பில் இதயம் குத்த ஆரம்பித்து விட்டது.
“என்னடா சொல்றே? வயத்திலே ஒரு கட்டுவிரியன் பாம்பு கிடக்குதா?”
“ஆமாண்டா, சத்தியம்!”
“எப்படிடா? அங்க வந்து படுத்துக்கிச்சு?” கேட்டிருக்கக் கூடாதுதான்.
அந்த வியர்வை! அவன் கண்களில் அந்த பயம்! அவனைப் பேசாமல் இரு என்று சொல்லியிருக்கவேண்டும்.
“படிச்சுக்கிட்டிருந்தேன்.” மெதுவாகப் பேசினான்.
மிகமிக மெதுவாக ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து கவனமாக வெளிப்படுத்தி…வயிற்றில் ஒரு தசையும் அசையாதபடி மெல்ல… மெல்ல… “மல்லாக்கப் படுத்துட்டுப் படிச்சுக்கிட்டிருந்தேன். மார்ல, புஸ்தகத்துக்குப் பின்னால் ஏதோ குறுகுறுன்னது. என்னடான்னு பார்த்தா, இந்தப் பாம்பு மெதுவா பைஜரமா மேல ஊர்ந்துட்டு இருக்கு! சின்னது, பத்து இஞ்ச்தான் இருக்கும். எனக்குச் சகலமும் நின்னுபோச்சு! அப்படியே உறைஞ்சுட்டேன். அது மேல ஏறிப் போயிடும்னு நினைச்சுட்டு….”…’ ஹரி கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான்! அவன் கண்கள் அந்த இடத்தில் நோக்கின … பேசும்போது வயிற்றுப் பாகத்தில் சலனம் ஏற்படக்கூடாதே என்று அவன் கவலை தெரிந்தது.
“போர்வையில் ஒரு மடிப்பு இருந்தது. அதுக்குள்ள… அதுக்குள்ள சட்டுனு பூந்துடுச்சு!’ அவன் சொல்வது சரியாகக் கேட்காமல் அருகில் குனிந்து கேட்க வேண்டி யிருந்தது. ”உள்ள இருக்குடா! இன்னும் இருக்குடா! பைஜாமா வழியா என் வயிற்றுப் பக்கம் வந்து அதுக்கப் புறம் அது நகரலை. வயிற்றில்… காட்டிய இடத்தில் அப்படியே இருக்கு! தூங்கிப் போயிட்டதோ என்னவோ! அப்பா! உனக்காகக் காத்துக் காத்து….” மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி என்னைப் பார்த்தான்.
“எப்படா இது?”
“மணிக்கணக்கில் ஆச்சு” என்றான் மெல்லிசாக. “எத்தனை நேரமா இப்படியே கிடந்தட்டிருக்கேன் தெரி யுமா? முடியலைடா! இருமல் வந்துடும்போல இருக்குடா. சம்பத் ஏதாவது செய்டா.”
திகிலில் யோசித்தேன். அவன் சொன்னது நிச்சயம் சாத்தியமே! எஸ்டேட் காடு! தனியான வீடு! கட்டுவிரியன் பாம்பு இந்தப் பிரதேசத்தில் அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள் ! ஓ மை காட்! என்ன செய்வது! ஹரி இதுவரை தப்பித்திருக்கிறான். இதுவரை கடிக்கவில்லை கட்டுவிரியன்! கடித்த மாத்திரத்தில் ஆள் க்ளோஸ்! இந்த வங்காளப் பகுதியில் உலாவும் பாம்புகளுக்கு அவ்வளவு விஷம்
“ஆல் ரைட் ஹரி !” நானும் முணுமுணுக்கத் துவங்கி விட்டேன். “நகராதே ! இனிமே பேசாதே! அவசிய மில்லாம பேசவேண்டாம்…… அது பயப்பட்டாத்தான் கடிக்கும். ஏதாவது செய்யறேன் இரு!’
மெதுவாக நடந்து வந்து சமையல் அறைக்குப் போய் ஒரு சின்ன கூர்மையான கத்தி கொண்டு வந்தேன். அதை மடக்கி பாண்ட் பைக்குள் போட்டுக்கொண்டேன். நான் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் ஏதாவது இருமி, அல்லது நகர்ந்து அது எழுந்து கடித்துவிட்டால் உடனே கடித்த இடத்தில் கத்தியால் வெட்டி விஷத்தை உறிஞ்சித் துப்புவதற்குத் இருக்கவேண்டும்! தயாராக
மறுபடி பெட்ரூமுக்கு வந்தேன். ஹரி அப்படியே கிடந்தான். அசைவில்லாமல் மூஞ்சி எல்லாம் வியர்வை. நான் அறைக்குள் நடச்கையில் அவன் கண்கள் என்னுடன் வந்தன. என்ன செய்யப்போகிறான் என்கிற பயம் அவன் கண்களில் தெரிந்தது. நான் அவன் அருகில் நின்றேன். என்ன செய்வது, எனக்குத் தோன்றவேயில்ல்லை. என் கைகள் நடுங்கின.
அவன் காதருகில் சென்று கிசுகிசுத்தேன். “ஹரி, போர்வையை மெள்ள பூ மாதிரி எடுத்துடறேன். முதல்ல அதைப் பார்க்கலாம். என்ன செய்யறதுன்னு பார்க்க லாம். கொஞ்சம்கூட டிஸ்டர்ப் பண்ணாமப் பார்க்கிறேன்.”
“முட்டாள்!” அவன் உச்சரிப்பில் கோபமில்லை. ஒவ் வொரு வார்த்தையையும் ரொம்பக் கவனமாக, மெதுவாக மெலிதாகத்தான் பேசினான். அவன் கோபம், கண்களின் ஓரத்தில் மட்டும் தெரிந்தது. லைட்டைப் பார்த்து அது பயந்துடும். போர்வைக்குள்ள இருட்டா இருக்கு!”
“இல்லைன்னா சட்டுனு போர்வையை விலக்கிட்டு அது கடிக்கிறகுக்குள்ள சட்டுனு அதைத் தள்ளி விட்டுர்றேண்டா!” என் குரலிலேயே அதைச் செய்கிற நம்பிக்கை இல்லை.
“ஏய்! ஒரு டாக்டரைக் கூப்பிடேண்டா!” என்றான்
என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டே.
“டாக்டர்! ஆமாண்டா! அதான்! டாக்டர் சின்ஹாவைக் கூப்பிடறேன்!”
நான் உடனே மெதுவாக ஹாலுக்கு அடிமேல் அடி வைத்து வந்து அந்தப் பழைய டெ லிபோனை அடைந்து அழுக்கு டைரக்டரியைப் பார்த்து டாக்டர் சின்ஹாவின் நம்பரைத் தேடி, டெலிபோனை எடுத்து அதன் தலையில் தட்டுத் தட்டுத் தட்டி, “ஆபரேட்டர்! ஆபரேட்டர்!” என்றேன் பொறுமையற்று.
“நம்பர் ப்ளீஸ்'”
டாக்டர் சின்ஹாவின் நம்பரைச் சொல்லி, “அவசரம் சீக்கிரம்” என்றேன்.
“டாக்டர் சின்ஹா! நான் சம்பத் குமார் பேசறேன்!”
“ஹலோ ஷொம்போத்! என்ன இந்த நேரத்திலே! தூங்கலையா நீங்க?”
“டாக்டர்,நீங்க உடனே வரணும். கட்டுவிரியன் கடிச்சதுக்கு ஸீரம் கொண்டு வாங்க.”
“யாரைக் கடிச்சுது?” அந்தக் கேள்வி என் காதில் வெடித்தது.
”இல்லை. இன்னும் ஒருத்தரையும் கடிக்கலை. ஹரிஹரன் …அவன் படுத்துக்கிட்டிருக்கான். ஒரு பாம்பு அவன் போர்வைக்குள்ள புகுந்து வயிற்றின்மேல் படுத்து தூங்கிக் கிட்டு இருக்கு!”
மூணு செகண்டுக்கு மௌனம். அதன்பின் டாக்டா சின்ஹா மெதுவாக, பதட்டமின்றி, ”அவனை அப்படியே அசையாமல் இருக்கச் சொல். பேசவே கூடாது. தெரி கிறதா?” என்றார்.
“தெரிகிறது!”
“உடனே வரேன்!!
டெலிபோனை வைத்துவிட்டு ஹரிஹரனிடம் சென்றேன். அவன் கண்கள் நான் வருவதைத் தொடர்ந்தன.
“டாக்டர் சின்ஹா வரார். அசங்காம அப்படியே படுத்திருக்கச் சொன்னார்!”
வேற என்ன செஞ்சுட்டிருக்கேனாம்! என்ன மனுசண்டா”
‘இத பாரு ஹரி ! பேசக் கூடாது. ரெண்டு பேரும் பேசவே கூடாது!”
“நீதான் வாயை மூடிக்கயேன் முதல்ல!” என்றான் எரிச்சலுடன். அவன் வாயோரம் சற்றுத்துடிக்க ஆரம்பித்து விட்டது. நெர்வஸ் டிக் (Nervous tick) என்பார்களே, அது போல.
பேச்சை நிறுத்தின பிற்பாடும் அந்தத் தடிப்பு நிற்கவில்லை. நான என் கைக்குட்டையை எடுத்துமெதுவாக அவன் முகத்தில் கழுத்தின் வியர்வையைத் விட்டேன். துடைக்கும்போது அவன் துடைத்து வாய்ப் பக்கம் இன்னும் துடிப்பதை உணர்ந்தேன். பாவம்! எத்தனை நேரம் அப்படியே இருப்பான்! சித்திரவதை! இருமக் கூடாது. தும்மக் கூடாது. நகரக் கூடக் கூடாது….
சமையல் அறைக்குச் சென்று ஐஸ் பெட்டியைத் திறந்த ஐஸ் கட்டியை உடைத்து ஒரு துண்டில் சுற்றிக் கொண்டு வந்தேன். அதை அவன் நெற்றிமேல் வைத்தேன்.
“கொஞ்சம் உன்னை நிதானப் படுத்தும்,” என்றேன்.
வேண்டாம், எடுத்துடு. இருமல் வரும்போல இருக்கு” என்றான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு’.
மறுபடி வாய்ப் பக்கம் துடிக்க ஆரம்பித்து விட்டது. அதிக நேரம் இவனால் ஸ்திரமாக இருக்க முடியாது. எங்கே இந்த டாக்டர் கிழம்?”
ஜன்னலின் வழியாக டாக்டரின் கார் வெளிச்சம் தெரிய, நான் அவரைச் சந்திக்க வாசற் பக்கம் போனேன்.
“எப்படி இருக்கு?” என்றார் டாக்டர் உள்ளே நடந்து கொண்டே, “எங்கே அவன்? எந்த ரூம்?”
ஹாலில் தன் பையை வைத்துவிட்டு என் பின்னே ஹரியின் அறைக்கு வந்தார். வயசானவர்தான். பிசிறு பிசிறாக நரைத்த தலை. தீர்க்கமான மூக்கு. முன் ஜாக்கிரதை யாக பாத்ரூம் ஸ்லிப்பர் போட்டுக்கொண்டு வந்திருந்தார். படிய, பைய, கவனமாக பூனைபோல நடந்தார்.
ஹரி அவரைக் கண் ஓரத்தில் பார்த்தான். அவர் ஹரியின் அருகே வந்து புன்னகை செய்தார். “இத பார் ஹொரிஹரன், நான் வந்து விட்டேன். கவலையே படாதே! கொஞ்சம் பொறு டாக்டர் சின்ஹாவிடம் எல்லாப் பொறுப்பையும் விட்டுவிடு!” என்று சொல்லிவிட்டு, “சம்பத் கொஞ்சம் வரீங்களா?” என்று ஹாலுக்கு நடந்தார். நான் அவர் பின் சென்றேன்.
“முதல்ல அவனுக்குக் கொஞ்சம் ஸீரம் இன்ஜெக்ஷனா கொடுத்துடணும். அசங்காம… இன்ட்ராவீனஸ்ஸா குடுத் தாகணும். ஆனா அதை நான் ரொம்பக் சவனமா குடுத்தாகணும். அவன் சிணுங்கக் கூடாது. அவர் தன் பையைத் திறந்து இன்ஜெக்ஷன் சாதனங்களை எடுத்தார்.
சமையல் அறைக்குச் சென்று ஊசியை ஸ்டெரிலைஸ் செய்தோம். ஸிரிஞ்சில் ஊசியைப் பொருத்தி ஒரு சின்ன பாட்டிலின் ரப்பர் மூடிக்குள் குத்தி அதனுள் இருந்த மஞ்ச திரவத்தை ஜிவ் என்று உறிஞ்சிக் கொண்டார். ஊசியை என்னிடம் கொடுத்தார்.
“வெச்சுக்க. நான் கேட்கிற வரைக்கும்.” பையை எடுத்துக் கொண்டார்.
இருவரும் ரூமுக்குத் திரும்பி வந்தோம். கண்களைப் பெரிசாக விழித்துக் கொண்டிருந்தான்.டாக்டர் ஹரி அவன் அருகில் சென்று அவன் கையை ஏதோ ஓர் அபூர்வ மான பதினாறாம் நூற்றாண்டு வஸ்துவைப் போல் எடுத்து சட்டையை மடக்கிக் கட்டில்மேல் படாமல்…
மெல்லச் சொன்னார். “ஹரிஹரன், உங்களுக்கு ஒரு இன்ஜெக்ஷன் குடுக்கப் போறேன். ஸீரம்… சின்ன குத்து தான். அசக்காம இருங்க! அசையாம இருங்க. வயிற்றில் தசைகளை குறுக்கிக்கிடாதீங்க! அப்படியே தொளதொளன்னு இருக்கட்டும், என்ன?…”
ஹரி என் கையில் ஸிரிஞ்சைப் பார்த்தான். டாக்டர் சின்ஹா சிவப்பாக ஒரு ரப்பர் குழாயை எடுத்தவர் எழுந்து அவன் புஜத்தில் சுற்றி இறுக்கினார். முடிச்சுப் போட்டுக் கட்டினார். முன் கையில் ஒரு இடத்தில் பஞ்சால் ஸ்பிரிட் தடவினார். என் கையிலிருந்த ஊசியை வாங்கிக் கொண்டார். அதன் ஸிரிஞ்சில் கோடுகளை ஒரு கண்ணைக் குறுக்கிக் கொண்டு பார்த்து பளிச்சென்று கொஞ்சம் மஞ்சள் மருந்தை ஊசிமுனை வழியாகப் பீச்சிப் பார்த்தார்.
நான் சலனமற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஹரியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். முகமெல்லாம் வியர்வை. ஏதோ வெண்ணெ யால் பளபளவென்று மேக்கப் போட்டாற் போலத் தெரிந்தது. தலையணையெல்லாம் வழிந்திருந்தது.
ஹரியின் கையில் ரத்தக் குழாய் புடைத்து நீலமாகத் தெரிந்தது. ஊசியைத் தோலுக்குள் நுழைத்து ரத்தக் குழாயை நெருடினார். ஹரி மேலே பார்த்துக் கண்ணை மூடிக் கொண்டான். நகரவில்லை. எனக்கு உடம்பை பயம் ஒரு உருவு உருவி விட்டது.
இன்ஜெக்ஷன் முடிந்ததும் டாக்டர் சின்ஹா ஹரியின் காதருகில் வந்து, “இப்ப அது கடித்தாலும் ஒன்றும் ஆகாது. அதுக்காக நகர்ந்துராதே. இதோ வர்ரேன்! வந்துர்ரேன்.”
அவர் பையை எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வர, நான் அவர் பின்தொடர்ந்தேன்.
“இப்ப பயமில்லையா டாக்டர்?” என்றேன்.
‘சொல்ல முடியாது!'”
“மருந்து கொடுத்திட்டிங்களே!’
டாக்டர் குள்ளமாக இருந்தார். தன் தாடையை வருடிக் கொண்டார்.”இந்த ஸீரம் அவனைக் காப்பாற்றும்னு நிச்சயமாச் சொல்ல முடியாது. காப்பாற்றலாம். காப்பாற் றாமலும் இருக்கலாம். வேறே என்னமும் செய்ய நம்மாலே முடியுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்…” மெதுவாக வராண்டாப் பக்கம் நடந்தார். கதவு சாத்தியிருந்தது. ஜன்னல் வழியாக வெளியே கரிய மேகத்தைப் பார்த்தார்.
“சட்டுனு போர்வையை நீக்கிட்டுப் பாம்பு கடிக்கிற துக்குள்ள தள்ளிறலாமா?”
“கூடவே கூடாது. அந்த ரிஸ்க் நாம எடுக்கக்கூடாது.
அவர் பேச்சில் நிர்ணயம் இருந்தது. சற்றுக் கீச்சுக் குரல் கேட்டது. அவனை இப்படியே விட்டுர்றதா! ஏற்கனவே கொஞ்சம் நெர்வஸாயிட்டான்”
“ப்ளீஸ்! மிஸ்டர் ஷொம்போத்! பளீஸ்! என்னை அவசரப்படுத்தாதீங்க! கொஞ்சம் யோசிக்க விடுங்க.”
அவர் தன் நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். நெற்றி சுருங்கியிருந்தது. உதட்டை கடித்துக் கொண்டிருந்தார்.
“பாருங்க, ஒரே ஒரு வழிதான் இருக்கு. பாம்புக்கு படுத்துக்கிட்டு இருக்கிறவாகிலேயே மயக்க மருந்து கொடுக்கணும்.”
“நல்ல ஐடியா தான்.”
‘”அவ்வளவு பத்திரமானதில்லை. பாம்புக்கு ரத்தச் சூடு கிடையாது. மயக்க மருந்து அவ்வளவு வேகமா வேலை செய்யாது. சரியாவும் வேலை செய்யாது. ஆனா தற்சமயம் இது ஒண்ணுதான் செய்ய முடியும். வேற எதுவும் இல்லையே ! ஈத்தர் உபயோகிக்கலாம்… இல்லை குளோரோஃபார்ம்!…”யோசித்துக் கொண்டே பேசினார்.
“எது?” என்றேன்.
”குளோரோஃபார்ம்! சாதாரண குளோரோஃபார்ம்! அதுதான் உத்தமமானது! இத பாருங்க… என்னை பால்கனிக்கு இழுத்துச் சென்றார். “என் வீட்டுக்குக் கார் எடுத்துட்டு போங்க. நான் அதுக்குள்ள பையனுக்கு டெலிபோன் பண்ணி அலமாரியைக் காட்டச் சொல்றேன். இதுதாங்க அலமாரிச் சாவி. ஒரு பாட்டில் குளோரோஃபாம் எடுத்துக்கங்க. பாட்டில் மேல் சிவப்பா லேபில் இருக்கும். குளோரோஃபார்ம் எழுதி யிருக்கும். நான் இங்கேயே இருக்கேன். அவரைப் பார்த்து கறேன். நீங்க சீக்கிரம் போய் எடுத்திட்டு வந்துருங்க!”
மிக வேகமாக ஓட்டினேன்! ஒரு குளோரோஃபார்ம் சீசாவுடன் திரும்பி வந்தேன்.
டாக்டர் அவசரமாக வந்து என்னைச் சந்தித்து, “கொண்டு வந்திட்டீங்களா? குட், குட்! இப்ப தான் ஹரிஹரன்கிட்டே நான் சொல்லிகிட்டிருந்தேன். சீக்கிரம்| அவராலே அதிக நேரம் அப்படிப் படுத்திருக்க முடியாது. நகர்ந்துருவார்னு பயமா இருக்கு,” என்றார்.
இரண்டு கைகளாலும் பாட்டிலைப் பிடித்துக் கொண்டு அவர் பின் சென்றேன். ஹரி அப்படியேதான் கிடந்தான். முகம் வெளிறிப் போயிருந்தது. கண்கள் என்னை ஓரம் பார்த்தன. நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்து, கட்டை விரலை உயர்த்திக் காட்டினேன். அவன் கண்ணை மூடிக் கொண்டான். டாக்டர் சின்ஹா தரையில் அருகில் உட்கார்ந்தார். இன்ஜெக்ஷஷன் குத்தும்போது உபயோகித்த ரப்பர் குழாயை எடுத்துக் கொண்டார். காகிதத்தால் ஒரு புனல் செய்து கொண்டார். அதை ரப்பர் குழாயின் ஒரு முனையில் பொருத்தினார்.
மெதுவாக ஹரியின் வயிற்றுப் புறத்தில் போர்வையின் முனையைச் சன்னமாக சாமர்த்திய விரல்களால் தொட்டு இழுத்தார். மிக சன்னம்! அவர் விரல்களோ, போர் வையோ நகர்வது தெரியவில்லை… வெற்றி! போர்வைக்கு அடியில் ஒரு சின்ன இடைவெளி செய்து கொண்டு விட்டார். ரப்பர் குழாயை எடுத்து அதன் மறு முனையை அதனுள் சொருகி படுக்கையோடு படுக்கையாக அதைச் செலுத்தினார். ஒருசில இன்ச்சுகள் நகர்த்துவதற்கு எத்தனை நேரம்! குழாய் நகர்வதாகவே தெரிய வில்லை.
அதனை மெள்ள, இருபது நிமிஷமா நாற்பது நிமிஷமா? குழாய் உள்ளே செல்வது என்னவோ தெரிந்தது. போர்வைக்கு வெளியே இருந்த பாகம் மெல்லக் குறைந்து கொண் டிருந்தது. ஆனால் பாம்பு எந்தவித சலனமும் உணர்ந் திருக்க முடியாது. டாக்டர் சின்ஹாவுக்கே வேர்த்து விட்டிருந்தது. நெற்றியில், மேல் உதட்டில் எல்லாம் வியர்வை முத்துக்கள். அவர் கைகள் மட்டும் நடுங்காமல் இருந்தன. கண்கள் எப்போதும் ஹரியின் வயிற்றுப் பகுதிப் போர்வையையே கவனித்துக் கொண்டிருந்தன.
நிமிராமல் கை நீட்டி என்னிடம் குளோரோஃபார்ம் கேட்டார். கண்ணாடி மூடியைத் திருகித் திறந்து சீசாவை அவர் கையில் பதிய வைத்தக் கொடுத்தேன். என்னைக் கிட்ட வரும்படி சொன்னார்.
“படுக்கை பூரா குளோரோஃபார்ம் வைத்து நனைக்கப் போகிறேன். ரொம்பச் சில்லென்று இருக்கும். அதற்குத் தயாரா இருக்கணும். உடம்பு நடுங்கக் கூடாது நகர்த்தக் கூடாது. அவன் கிட்டேசொல்விடு,” என்றார்.
நான் ஹரிஹரனிடம் குனிந்து சொன்னேன். “ஆரம்பிக்கச் சொல்லேண்டா” என்றான்.
”ஆரம்பிக்கப் போறார். ரொம்பச் சில்லுணு இருக்கும்!”
“மை காட்! ஏதாவது பண்ணுங்க! சீக்கிரம்/ செஞ்சு தொலைங்க.” முதல் தடவையாக அவன் குரல் சற்று உயர்ந்தது. சின்ஹா சட்டென்று நிமிர்ந்து முறைத்தார். இரண்டு மூன்று செகண்ட்… மறுபடி தன் வேலையைத் துவக்கினார். சின்ஹா பேப்பர் புனலில் ஒன்றிரண்டு சொட்டு குளோரோஃபார்ம் ஊற்றினார் மெல்ல. அது ரப்பர் குழாய் வழியாக உள்ளே வடியும்வரை காத்திருந்து இன்னும் கொஞ்சம் ஊற்றினார். காத்திருந்தார். ரூம் பூரா குளோரோஃபார்ம் வாசனை கும்மென்று பரவ எனக்குச் சின்ன வயசில் செய்துகொண்ட டான்ஸில்ஸ் ஆபரேஷன் ஞாபகம் வந்தது.
வெண்மை உடை நர்ஸுகள், டாக்டர்கள், நீளமான வெள்ளை மேஜை… ‘ஒண்ணு ரெண்டு எண்ணப்பா!’ என்று யாரோ சொன்னது. மெலிதான வாந்தி உணர்ச்சி…
சின்ஹா இப்போது சீராகப் புனலில் ஊற்றிக் கொண் டிருக்கப் பேப்பர் புனலின்மேல் குளோரோஃபார்ம் ஆவி மெலிதாக நடனமாடியது. பாட்டிலில் மிச்ச அளவைப் பார்த்து இன்னும் கொஞ்சம் புனலில் ஊற்றி விட்டு என்னிடம் பாட்டிலைதி திரும்பக் கொடுத்து விட்டார்.
மெதுவாக மெதுவாக ரப்பர் குழாயைப் போர்வைக்கு அடியிலிருந்து உருவி வெளியே எடுத்து விட்டார். நிமிர்ந்தார் நின்றார்.
அந்தச் செயலின் ஆயாசம் டாக்டரின் தெரிந்தது. களைத்திருந்தார். “பதினைஞ்சு நிமிஷம் பார்க்கலாம். ஒருவித ஜாக்கிரதைக்குத்தான்!” குரலில்
நான் ஹரியின் அருகில் சென்று, 15 நிமிஷம் “காத் திருக்கப் போறம்டா. எதுக்கும் ஒரு பத்திரத்துக்குத்தான்! இப்பவே கூட அது மயங்கிப் போயிருக்கும்,” என்றேன்.
“திறந்து பாரேன்! இரைச்சலாகப் பேசினான். கடவுளே!” என்று மறுபடி
சின்ஹா அவனை மிகக் கடுமையான கோபத்துடன் முறைத்தார். ஹரியின் வாய் ஓரம் மறுபடி துடிக்க ஆரம் பித்தது. நான் கைக் குட்டை எடுத்து அவன் ஈரமுகத்தைத் துடைத்து விட்டேன். நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். ‘பொறுடா. இன்னும் கொஞ்சம் பொறு,” என்றேன்.
காத்திருந்தோம். டாக்டரும் நானும் படுக்கையருகில் நின்று கொண்டு. சின்ஹா வெளியில் மேகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பார்வையிலேயே சும்மா இரு என்று அதட்டல் இருந்தது.
“சும்மா இரு! இவ்வளவு தூரம் உயிர் விட்டோம். இன்னும் கொஞ்சம் தான்… இந்தச் சமயத்தில் ஏதாவது செய்து எவ்லா வற்றையும் கெடுத்து வைக்காதே!’ என்ற அதட்டல்.
ஹரியின் வாயோரம் இன்னும் துடித்துக் கொண்டிருந்தது. வியர்வை. கண்ணை மூடுகிறான். திறக்கிறான். என்னைப் பார்க்கிறான். போர்வையைப் பார்க்கிறான். மேலே உத்திரத்தைப் பார்க்கிறான். மறுபடி என்னைப் பார்க்கிறான். சின்ஹாவை மட்டும் பார்க்கவே இல்லை. இருந்தும் சின்ஹா எப்படியோ அவனைக் கட்டிப் பிடித்து வைத்திருந்தவர் போலத் தோன்றியது.
குளோரோஃபார்ம் வாசனை மூக்கைத் துளைத்தது. ஆனால் என்னால் அறையை விட்டு விலக முடியவில்லை. யாரோ ஒரு பெரிய பலூனை ஊதிக் கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தேன். பெரிசாகிப் பெரிசாகி… வெடிக்கப் போகிறது… விட்டுச் செல்ல மனம் வரவில்லை.
கடைசியில் சின்ஹா திரும்பினார். தலையாட்டினார்… அவர் ரெடி!
“நீ படுக்கைக்கு அந்தப் பக்கம் போய் போர்வையின் ஒரு பக்கத்தைப் பிடிச்சுக்க. நில்லு. மெள்ள ரெண்டு பேரும் சேர்ந்து போர்வையை விலக்கலாம். : ஆனா மெதுவா! மெல்ல ரொம்ப மெல்ல! அசங்காம! என்ன!”
“ஹரி, கொஞ்சம் அசையாம இரு,” என்று சொல்லி விட்டுப் படுக்கையின் அந்தப் பக்கம் சென்றேன். சின்ஹா எனக்கு எதிரில் நிற்க இருவரும் போர்வையை மெதுவாக நீக்க ஆரம்பித்தோம். ஹரியின் மேல் படாமல், படுக்கையிலிருந்து சற்றுத் தள்ளி நின்று சற்று முன் பக்கம் குனிந்து உள்ளே ஏதாவது தெரிகிறதா என்று பார்க்க முயற்சி பண்ணி, குளோரோஃபார்ம் நெடி குமட்டியது. மூச்சை அடக்கிப் பார்த்தேன். அதிகம் அடக்க முடியாமல் போன போது லேசாக மூச்சு விட்டேன். நெடி!
இப்போது ஹரியின் மார்பு தெரிந்தது. அவன் அணிந் திருந்த பட்டை போட்ட சட்டையின் பட்டன்கள் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. பட்டன் பளபளவென்று இருந்தது- அப்புறம் அவன் சட்டை மேல் முடிச்சுப் போட்டு இறுக்கியிருந்த பைஜாமாவின் நாடா தெரிந்தது. அதிலும் பட்டன். பளபள பட்டன்1 சீ, பட்டனைப் பற்றி யோசிக்க வேண்டிய சமயமா இது !
ஆனால் அவன் வயிற்றின் மேல்!
பாம்பு எங்கே? அவன் வயிற்றின் மேல் அந்தப் பைஜாமா பட்டனைத் தவிர வேறு எதுவும் இல்லை.
போர்வையைக் கொஞ்சம் வேகமாகவே விலக்கினோம்.
அவன் கால் தெரிந்தது. பாதங்கள் தெரிந்தன.
போர்வை முழுவதும் விலகித் தரையில் விழுந்தது. ”நகராதே!” என்றார் டாக்டர். “நகராதே ஹரி’
என்று சொல்லி ஹரியின் பக்கவாட்டில், கால்களுக்குக் கீழே எல்லாம் எட்டிப் பார்த்தார். “ஜாக்கிரதை! எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருக்கும். பைஜாமாவுக்குள் புகுந்து கொண்டிருக்கலாம். ஜாக்கிரதை!” என்றார் டாக்டர்.
இதைக் கேட்டதும் ஹரி சட்டென்று தலையைத் தூக்கித் தன் காலைப் பார்த்தான். முதல் தடவை நகர்ந் திருக்கிறான். திடீர் என்று எழுந்தான். படுக்கை மேல் நின்றான். இரண்டு கால்களையும் உதறி உதறிப் பார்த்தான்.
பைஜாமாவுக்குள்ளிருந்து பாம்பு அவனைக் கடித்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தோம். டாக்டர் தன் பெட்டியிலிருந்து கத்தியை எடுத்து விட்டார்.
ஹரி உதறுவதை நிறுத்தி விட்டான். படுக்கையைப் பார்த்தான். “இல்லை” என்று கத்தினான்.
சின்ஹா நிமிர்ந்தார். அலறிப் படுக்கையைப் பார்த் தார். அப்புறம் ஹரியைப் பார்த்தார். ஹரிக்கு ஒன்றும் இல்லை. எதுவும் கடிக்கவில்லை, அவனை. எதுவும் கடிக்கப் போவதில்லை, அவனை, அவன் இறந்து போக மாட்டான் எல்லாம் சரியாகி விட்டது… எல்லாம்… இருந்தும் மூவரும் பேஸ்த் அடித்தாற்போல் நின்றோம்.
“மிஸ்டர் ஹரி! நிஜமாவே அதை முதல்ல பார்த்தீங் களா?” என்றார் டாக்டர். அவர் குரலில் சற்றுக் கேவி இருந்தது.”இல்லை. கனவு ஏதாவது கண்டீங்களா?” டாக்டரின் நெற்றியில் இன்னும் வியர்வை! கண்களில் அடிபட்ட தன்மை.
ஹரி படுக்கை மேல் நின்றுகொண்டு டாக்டர் சின்ஹாவை முறைத்தான். “நான் என்ன பொய் சொன்னேன்னு சொன்றீங் களா?” என்று இரைந்தான்.
”ஆமாம்.’
“மை காட்! நான் பொய்யா சொல்றேன்! அடேய் டாக்டர் கிழவா கேளு! நான் சொன்னது பொய்யில்லை! பாம்பு வந்தது! என் மேலே ஊர்ந்தது! நான் பார்த்தேண்டா! பின்ன எதுக்கு ஊசி குத்திக்கறேன். எதுக்கு இத்தனை நேரம் அப்படியே அசங்காம கிடந்தேன்! எனக்கு என்ன பைத்தியமா? பைத்தியம்னா சொல்றே? பெங்காலிக் கிழவா.ஏய்!’
“ஷட் அப் ஹரி” என்று இரைந்தேன். கெட்ட வார்த்தைகள் உபயோகிக்க ஆரம்பித்து விட்டான். டாக்டர் சின்ஹா அந்த அறையில் ஒருவரும் இல்லாத மாதிரி வெளியே வந்தார்.
“டாக்டர்! ரொம்பப் பிரமாதமா செயல்பட்டிங்க! நீங்க வந்ததுக்கு ரொம்ப ரொம்பத் தாங்க்ஸ்!” என்றேன்.
“உங்க ஃப்ரெண்டுக்கு… ரெஸ்ட் தேவை அவர் பார்க்க வேண்டியது வேறே ஒரு டாக்டரை”, என்று என்னைப் பார்க்காமல் காரில் ஏறி அதன் இன்ஜினைக் கிளப்பிப் புறப்பட்டு இருட்டில் மறைந்தார்.


