மெய் சிலிர்க்க வைத்த பதிவு… மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்/வெங்கடாசலம் முத்தையா

1976, பாளையங்கோட்டையில், நாங்கள் தங்கியிருந்த காலம். நள்ளிரவு வேளை. தாகம் எடுக்கிறதே என்று எழுந்து, தண்ணீர் குடம் வைத்திருந்த இடம் பக்கமாகப் போனேன்.

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான், உறுதி செய்தேன். அது பாம்பு என்பதை… எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.

ஹாலில் எல்லாரும் படுத்திருந்தார்கள். பாம்பை விரட்டப் போய், அது ஹாலுக்குள் வந்துவிட்டால், ஏக கலாட்டா ஆகி விடும். குடும்பத்தார் பதறிப் போய் விடுவார்கள். நான் நின்ற இடத்தில் இருந்தபடியே பூஜை அறையைப் பார்த்தால் தெரியும்.

அங்கே பல சுவாமி படங்களின் மத்தியில், காஞ்சி மகாபெரியவரின் படம் நடுநாயகமாக இருக்கும். இதற்குள், பாம்பு இறங்கியது. அந்த அறை மிகவும் வழுவழுப்பாக இருந்ததாலோ என்னவோ, மிகவும் மெதுவாக ஊர்ந்தது. ஹால் பக்கம் போய்விடுமோ என்று பயந்திருந்த வேளையில், சுவாமி படங்கள் இருந்த பக்கமாகப் போனது. மகாபெரியவர் படத்தின் முன்னால், தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு, அங்கிருந்த ஒரு துவாரத்தின் வழியாக வெளியேறி விட்டது.

எனக்கு அப்போது தான் மூச்சே வந்தது. பிறகு, குடும்பத்தாரிடம் தகவல் சொன்னேன். அடுத்தநாளே, காஞ்சி மடத்துக்கு பயணமானேன். மகாபெரியவரைத் தரிசனம் செய்தேன்.

பெரியவர், அப்போது சொன்னது என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
“பயமுறுத்தினா தான் மடத்து ஞாபகம் உனக்கு வருமோ!”

நான் பெரியவர் காலில் தடாலென விழுந்து விட்டேன். “ஆஹா… வீட்டிற்குள் பாம்பு வந்து, நான் பயந்து போனது எப்படி அவருக்கு தெரிந்தது! என்னே அவரது ஞானம்! பாம்பின் வடிவாய் வந்ததே அவர் தானோ!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏