ஓவியர் தனபால்/சி.மோகன்

தமிழக நவீனக் கலைச் சூழலின் /வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த மூன்று மேதைகள்: தேவி பிரசாத் ராய் செளத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர் மற்றும் எஸ்.தனபால். இவர்களில் தனபாலின் முக்கியத்துவம் தனிச் சிறப்பானது. இம்மூவரில் இவர் மட்டுமே தமிழர். அக்காலகட்டத்தில் ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்வதற்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் கிடையாது. ஓவியத் திறனும் ஆர்வமும் போதும். தமிழ் மட்டுமே பேசத் தெரிந்து மிகுந்த ஆர்வத்தோடு அப்பள்ளியில் சேர்ந்த, சேர விழைந்த மாணவர்களுக்குப் பெரும் ஆதர்சமாகத் திகழ்ந்தவர் தனபால்.

இவரது சுபாவமான எளிமையும் தோழமையும் ஆதரவும் அரவணைப்பும் அனுசரணையும் அபாரமான ஆசிரியத்துவமும் தமிழ் மாணவர்களுக்கு மிகுந்த உத்வேகமளித்தன. பின்னாளில் கலைவெளியில் முதனிலை வகித்துச் செயல்பட்ட கலைப் படைப்பாளிகளில் பலரும் இவருடைய மாணவர்களே. எல்.முனுசாமி, சந்தான ராஜ், கே.ராமானுஜம், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், டிராட்ஸ்கி மருது, விஸ்வம், வீர.சந்தானம் என நீளும் மிக நீண்ட பட்டியல் அது. இவர்கள் தனபால் மாஸ்டரின் ஆசிரியத்துவத்தை நினைவுகூர்வதும் போற்றுவதும் இவருடைய அருமையை உணர்த்துகின்றன.

அர்ப்பண உணர்வோடும் தீர்க்கமான கலை நம்பிக்கையோடும் வாழ்ந்த இவரின் கலைப் பணி அளப்பரியது. தனபாலின் வீட்டிலேயே தங்கி, சாப்பிட்டு உருவான கலைஞர்கள் பலர். 1966-ல் சோழ மண்டலம் உருவாக்கப்பட்டபோது, அங்கு வேலி போடுவதிலிருந்து கொட்டகை அமைப்பதுவரை, அங்கு வேலையில் ஈடுபட்டிருந்தோருக்கு மைலாப்பூரிலுள்ள தன் வீட்டிலிருந்து உணவினைத் தினந்தோறும் சைக்கிளில் எடுத்துச் சென்றிருக்கிறார் (சுமார் 20 கிலோமீட்டர் தூரம்.) பேருந்து வசதியோ டீக்கடைகளோ அங்கு இல்லாதிருந்த காலம்.

ஒரு கலை இயக்கமாக, தனபாலின் கலை வாழ்வு முழுமையானது. தனபாலின் அர்ப்பண உணர்வையும், உத்வேகமிக்க ஆசிரியத்துவத்தையும், லட்சிய வேட்கையையும், கலை நம்பிக்கையையும் போற்றி சுவீகரிக்க வேண்டிய கட்டாயத்தைக் காலம் கேட்டுநிற்கிறது.

  • சி.மோகன், எழுத்தாளர்.

நன்றி: இந்து தமிழ் திசை

முக நூல் பதிவு ஆர்.கந்தசாமி