இலக்கிய இன்பம் 51/கோவை எழிலன்

தமிழ் மகளாயிருந்தால் இனிக்கும்

“காதல் அடைதல் உயிரியற்கை அது
கட்டில் அடைபடும் தன்மையதோ”

என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவளையே நான் காதலிப்பேன் என காதலைக் கட்டுக்குள் அடைக்கிறார்.

பாவேந்தரின் தமிழுணர்வு சமுதாய உணர்வை விஞ்சி நிற்பதைக் காட்டும் பாடல் இது.

அவன்:
என் மீதில் ஆசை வைக்காதே — மயிலே
என்னைப் பார்த்தும் சிரிக்காதே
உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை — நீதான்
உண்மையிலே தமிழ்மகள் இல்லை. ஆதலால் (என்மீதில்)

அவள்:
மக்களில் வேற்றுமை ஏது? — காதல்
வாழ்க்கையிலே நாம்புகும் போது?
அக்கால மனிதரும் நாமோ? — என்னை
அயலாள் என விலக்கிடலாமோ? உலகத்து மக்களில்

அவன்:
சாதிகள் வீழ்ந்திட வேண்டும் — பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்?
மாதொருத்தி வேண்டும் எனக்கும் — தமிழ்
மகளா யிருந்தால்தான் இனிக்கும்! ஆதலால், (என்மீதில்)

அவள்:
என் உதட்டில் கசிவதும் தேனே — உண்மையில்
என் பேச்சும் உன் தமிழ்தானே?
பொன்னேட்டில் புகழ் தீட்டுவோம் — இன்பப்
புதுவாழ்வை நிலை நாட்டுவோம்! உலகத்து மக்களில்

அவன்:
தமிழ், உடல், உயிர் யாண்டும் — ஒரு
தமிழ்மகளாய்ப் பிறந்திட வேண்டும்
அமிழ்தில் நாளும்நான் மூழ்க — எனக்
காசை உண்டு! தமிழகம் வாழ்க!